கதை: ஊருக்குள் புகுந்த விலங்குகள்!

கதை: ஊருக்குள் புகுந்த விலங்குகள்!
Updated on
2 min read

செண்பகக் காட்டில் விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தன. அந்தக் காட்டின் அருகில் சிறு கிராமம் ஒன்று இருந்தது. கிராமத்தில் வசித்த வேட்டைக் காரர்கள் ஒரு நாள் காட்டுக்குள் நுழைந்தனர். பறவைகள் சத்தமிட்டன. விலங்குகள் கூச்சல் போட்டன. சத்தமும் கூச்சலும் காடு முழுக்கக் கேட்டது. காரணம் புரியாமல் காட்டு ராஜா சிங்கம் ஓடிவந்தது. அதைப் பார்த்த வேட்டைக்காரர்கள் அலறியடித்து ஓடிவிட்டனர்.

உயிர் பிழைத்த பறவைகளும் விலங்குகளும் சிங்கத்துக்கு நன்றி கூறின. இரண்டு நாள்களுக்குப் பிறகு இரவு நேரத்தில் கைகளில் பெரிய வாளுடன் மூன்று பேர் காட்டுக்குள் வந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் கையில் இருந்த வாள்கள் வேகமாக இயங்கின. மரங்கள் சாய்ந்தன. அப்போது மரத்திலிருந்த கூடுகளும்அதில் கூடுகட்டி வாழ்ந்த பறவைகளும் குரங்குகளும் அலறின.வேறு மரங்களை நோக்கிச் சென்றன.

அப்போது சத்தம் கேட்டுப் பிளிறியபடி காட்டு யானை ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் கிராமத்து மனிதர்கள், மரங்களைப் போட்டுவிட்டு அலறியடித்து ஓடினர்.

மறுநாள் காலை சிங்கம் தலைமையில் காட்டில் வாழும் உயிரினங்கள் ஒன்றுகூடின.

“கிராமத்தாரோடு தினம் தினம் போராட வேண்டி யுள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்” என்றது புலி.

“இந்த நிலை தொடர்ந்தால், நாம் வாழ்வதற்குக் காடு இல்லாமல் போய்விடும்” என்றது சிறுத்தை.

“வெகு விரைவில் காட்டுவாழ் உயிரினங்கள் ஒவ்வொன்றாக அழிய நேரிடும். இதை உடனே தடுத்தாக வேண்டும்” என்றது யானை.

“என்ன செய்யலாம்?” என்றது சிங்க ராஜா.

“நான் ஒரு யோசனை சொல்கிறேன்” என்றது குரங்கு.

“என்ன சொல்?”

குரங்கு சொன்ன யோசனையை அமைதியாகக் கேட்டது சிங்க ராஜா.

“நீ சொல்வதுதான் சரி. நாளைக்கே குரங்கின் யோசனைப்படி நடக்கலாம்” என்று சிங்க ராஜா சொல்லவும், கூட்டம் கலைந்தது.

அடுத்த நாள் காலை திட்டமிட்டபடி குரங்குகள் கூட்டமாக அந்தக் கிராமத்துக்குள் நுழைந்தன. வீடுகளின் மீதேறி ஓடுகளைப் பிரித்துக் கீழே எறிந்தன. வீட்டில் உள்ள உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு ஓடின. மரங்களில் இருந்த காய்களைப் பிய்த்து எறிந்தன. இதைக் கண்ட மக்கள், அலறியடித்துக்கொண்டு தெருவில் கூடினர்.

“ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்?” என்று பயத்துடன் குரங்குகளைப் பார்த்து மக்கள் கேட்டனர்.

“நாங்கள் இனிமேல் இங்கேதான் குடியிருக்கப் போகிறோம்” என்று குரங்குகள் கத்தின.

“நீங்கள் எப்படி இங்கு வாழமுடியும்? இது மனிதர்கள் வசிக்கும் இடம். நீங்கள் எல்லாம் காட்டில் வசிப்பவர்கள். அங்கேதான் நீங்கள் இருக்க வேண்டும்” என்றார்கள் மக்கள்.

“நீங்கள் மட்டும் காட்டுக்குள் வந்து வேட்டையாடு கிறீர்கள். மரங்களை வெட்டுகிறீர்கள். நாங்கள் நாட்டுக்குள் வந்தால் மட்டும் தவறா?” என்று கேட்டுவிட்டு, குரங்குகள் சென்றன.

மறுநாள் கிராமத்துக்குள் பாம்புகள் கூட்டம் ‘சர சர’ வெனப் புகுந்தது. மக்கள் நடுங்கிவிட்டனர்.

தெருவில் நின்ற கருநாகம் ஒன்று படமெடுத்தவாறு, “இனிமேல் இந்தக் கிராமம்தான் நம் இருப்பிடம். நல்ல இடங்களைப் பார்த்து, தங்கிக்கொள்ளுங்கள்” என்றது.

“இது என்ன அநியாயம்? நீங்கள் எப்படி இங்கே வாழ முடியும்? இது மனிதர்கள் வாழும் பகுதி. நீங்கள் இங்கே வசித்தால் நாங்கள் வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியதுதான்” என்று வீட்டுக்குள் இருந்து மக்கள் குரல் கொடுத்தனர்.

மூன்றாம் நாள் இரண்டு சிங்கங்கள் கிராமத்துக்குள் நுழைந்தன.அவற்றைப் பார்த்த மக்களுக்குப் பயத்தில் பேச்சே வரவில்லை. வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தனர்.

“குரங்குகளும் பாம்பும்களும் சொன்னதுபோல் இனி நாம் இங்கே வசிக்கலாம்” என்றது ஒரு சிங்கம். மற்றொரு சிங்கம் ஆமாம் என்பதுபோல் தலையாட்டியது.

“நீங்கள் கிராமத்தை நோக்கி வருவதற்குக் காரணம் என்ன என்பதை நாங்கள் அறியலாமா?”

“எல்லாம் உங்களால்தான். சிறிது சிறிதாக எங்கள் வாழிடத்தையும் எங்களையும் அழித்துவருகிறீர்கள். எங்களுக்கு வேறு வழி தெரிய வில்லை. காட்டில் வாழும் நாங்கள் இங்கே வந்துவிடுகிறோம்” என்றன சிங்கங்கள்.

“ஐயோ... மூன்று நாள்களாகப் பயத்தில் இருக்கிறோம். நீங்கள் வராமல் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று ஒருவர் கேட்டார்.

“நீங்கள் யாரும் வேட்டையாடக் கூடாது. மரம் வெட்டக் கூடாது. காட்டுக்குள் வரக் கூடாது” என்றது ஒரு சிங்கம்.

மக்கள் அமைதியாக இருந்தனர்.

“உங்களால் முடியாது என்றால், நாங்கள் இங்கே தங்குவதையும் உங்களால் தடுத்து நிறுத்த முடியாது” என்றன சிங்கங்கள்.

“ஐயோ... இனி காட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட மாட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள்” என்று ஒரே நேரத்தில் அலறினர்.

சிங்கங்கள் நிம்மதியாகக் காட்டை நோக்கி நடந்தன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in