

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செயல்களில் முதன்மையானவை ஆடுவதும் பாடுவதும்தாம். அதற்குப் பாடுவதற்கு எளிமையான சந்தம் கொண்ட தாய்மொழிப் பாடல்கள் நிறைய தேவை. காரணம், தாய்மொழிப் பாடல்கள் வழியே பாட்டின் அர்த்தமும் குழந்தைகளுக்குத் தெரியவரும்.
அந்தக் காலக் குழந்தைகளுக்கு இப்படிப் பாடல்களை எழுதிக் குவித்தவர் அழ.வள்ளியப்பா. அப்படிக் குழந்தை களுக்காகப் புதிய பாடல்களை எழுத வந்திருப்பவர்களில் முக்கியமானவர் ஆசிரியர் குருங்குளம் முத்துராஜா. அவருடைய புதிய தொகுப்பு ‘காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’ (மேஜிக் லாம்ப் வெளியீடு,தொடர்புக்கு: 99425 11302).
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பாடுவதற்கு ஏற்ற வகையில், எளிமை யான, சந்தம் நிறைந்த பாடல்களை இவர் எழுதிவருகிறார். இவருடைய பாடல்கள் எளிமையாக இருக்கும் அதே நேரம் குழந்தைகளுக்கே உரிய வகையில், சில கருத்துகளும் இடம்பெற்றுள்ளது சிறப்பு. பள்ளிக் கல்வித் துறையின் ‘வாசிப்பு இயக்க’ நூல்களில் இவருடைய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடல்களின் சில வரிகள்:
கதவை யாரோ தட்டுறாங்க
டொக் டொக் டொக் டொக்
காவல்காரர் பூட்ஸ் சத்தம்
டக் டக் டக் டக்...
படபடன்னு பட்டம் போல
வானத்தில் பறக்க வா
முடக்கி வைக்கும் செல்போன்
விலக்கி வச்சு வெளியே வா.
குறைந்த வரிகளில் அமைந்துள்ள இவருடைய பல பாடல்கள், பாடலின் கருவைக் காட்சிச்சித்திரமாகக் குழந்தைகள் மனதில் நிலைநிறுத்துபவை. குழந்தை களுக்குத் தமிழை அச்சுறுத்தாமல் சொல்லித்தர இந்தப் பாடல்கள் கைகொடுக்கும். இந்த விடுமுறைக் காலத்தில் இவருடைய பாடல்களைக் குழந்தைகள் ரசித்துப் பாடி மகிழலாம்.