

பென்சில் சீவும்போது பிளேடு கையில் பட்டு ரத்தம் வந்தால், வாயில் வைத்து உறிஞ்சச் சொல்கிறார்களே அது சரியா, டிங்கு?
-ஐஸ்வர்யா, 11-ம் வகுப்பு, மயிலாடுதுறை.
ரத்தம் உயிர் காக்கும் அரிய திரவம் என்பதால், ரத்தத்தை வீணாக்கக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. அத்துடன் வாயில் வைத்துச் சப்பினால் ரத்தம் வெளியேறுவது நிற்கும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் ரத்தம் வெளியேறியவுடன் வாயில் வைத்து உறிஞ்சச் சொல்கிறார்கள். வாய்க்குள் குளிர்ச்சியான எச்சில் பட்டவுடன் ரத்தம் நின்றுவிடும் என்பது உண்மைதான். ஆனால் சுத்தமான வாயாக இல்லாவிட்டால், காயத்தின் வழியே தொற்று ஏற்படக் கூடும், ஐஸ்வர்யா. அதனால் வாய்க்குள் வைப்பதைத் தவிர்த்து, தண்ணீரில் கையை நனைக்கலாம். விரைவில் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். தண்ணீர் இல்லாவிட்டாலும் காயம் பட்ட இடத்துக்கு அருகில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாலும் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். அதனால் வாயில் வைத்து உறிஞ்ச வேண்டியதில்லை. இன்னொரு விஷயம், இப்படி வெளியேறும் ரத்தத்தை உறிஞ்சுவதால், அது ரத்தத்துடன் போய்ச் சேர்வதும் இல்லை.
சுற்றுலா செல்கிறோம். படகில் பயணம் செய்யும்போது எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும், டிங்கு?
–வி. திவ்யதர்ஷினி, 4-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
சுற்றுலாத் தலங்களில் இருக்கும் ஏரி போன்ற நீர் நிலைகளில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக பாதுகாப்புக் கவசத்தை (லைஃப் ஜாக்கெட்) அணிந்துகொள்ள வேண்டும். ஒரு படகில் எவ்வளவு மக்களை ஏற்ற முடியுமோ அவ்வளவு மக்களைத்தான் ஏற்ற வேண்டும். அதிகமாக ஏற்றினால் விபத்து ஏற்படலாம். அதனால் அப்படி நிகழும்போது தவறு என்று படகு ஓட்டுநரிடம் தெரிவிக்கலாம். படகில் பயணம் செய்யும்போது உட்கார்ந்த இடத்தை விட்டு எழக் கூடாது. அங்கும் இங்கும் நடக்கக் கூடாது. படகில் அமர்ந்துகொண்டு, தண்ணீருக்குள் கைவிடுகிறேன் என்று பாயக் கூடாது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமர்ந்து, பயணத்தை ரசித்து, பத்திரமாகக் கரைக்கு வந்துவிட வேண்டும், திவ்யதர்ஷினி.
உனக்கு வரும் கேள்விகளில் எது தொடர்பான கேள்விகள் அதிகம், டிங்கு?
–சி. டேவிட் ராஜ், கோவை.
பாம்புகளைப் பற்றிய கேள்விகள்தான் மிக அதிகம் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும், டேவிட்! காரணம் பாம்புகள் குறித்து மக்களிடம் அவ்வளவு பயமும் தவறனான நம்பிக்கைகளும் இருக்கின்றன! பேய் இருக்கிறதா, கடவுள் இருக்கிறாரா, எனக்கு அறிவுரை கூறு போன்ற கேள்விகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.
விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்குச் சில யோசனைகள் சொல்ல முடியுமா, டிங்கு?
–ஹ. நேஹா, 7-ம் வகுப்பு, எஸ்.ஜே.எஸ்.வி. சிபிஎஸ்இ பள்ளி, கோவை.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை அளவோடு வைத்துக்கொண்டு, புத்தகங்களை அதிகமாகப் படியுங்கள். கதை, நாவல், பொது அறிவு, வாழ்க்கை வரலாறு என்று எந்த வகை புத்தகங்களாகவும் இருக்கலாம். புத்தகங்கள்தான் கற்பனைத் திறனை வளர்க்கும். அறிவை விசாலப்படுத்தும். மகிழ்ச்சியையும் அளிக்கும். வீட்டு வேலைகளில் அம்மா, அப்பாவுக்கு உங்களால் முடிந்த உதவிகளை அவசியம் செய்யுங்கள். இது உங்களுக்குப் புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்ட அனுபவத்தைத் தரும். நம்மாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்கும். வீட்டில் இடம் இருந்தால் தோட்ட வேலை செய்யலாம். பகலில் வெயில் அதிகம் இருப்பதால் பல்லாங்குழி, தாயம் போன்ற வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். மாலை நேரத்தில் ஓடியாடக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடலாம். நண்பர்கள் இருந்தால், நீங்களே ஒரு கதையை எழுதி நாடகம் போடலாம். வாய்ப்பு கிடைத்தால் உறவினர் வீடுகளுக்கு வெளியூர் சென்று வரலாம். இரவில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து நிலாச் சோறு சாப்பிடலாம். தாத்தா, பாட்டியிடம் அந்தக் காலக் கதைகளைக் கேட்டு ரசிக்கலாம். கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொள்ளலாம். ஆர்வம் இருந்தால் ஏதாவது புதுமையான விஷயம் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம்.