டிங்குவிடம் கேளுங்கள்: மரங்கள் எப்படி மழைப் பொழிவுக்குக் காரணமாகின்றன?

டிங்குவிடம் கேளுங்கள்: மரங்கள் எப்படி மழைப் பொழிவுக்குக் காரணமாகின்றன?
Updated on
1 min read

மழைப் பொழிவதற்கு மரங்கள் எப்படி உதவுகின்றன, டிங்கு? - பா. ஷிவானி, 5-ம் வகுப்பு, செந்தில் பப்ளிக் பள்ளி, சேலம்.

மரங்கள் நீராவியை உருவாக்க நிலத்தடி நீரும் வெப்பமும் தேவை. மரம் நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி அனைத்துப் பாகங்களுக்கும் கடத்துகிறது. பிறகு ஒளிச்சேர்க்கை நடைபெறும்போது, இலைகளில் உள்ள துளைகள் திறக்கப்பட்டு, நீர் ஆவியாக வெளியேறுகிறது.

அந்த நீராவியில் உள்ள நீர்த்துளிகள் எல்லாம் வளிமண்டலத்தில் உள்ள மாசுகளில் ஒட்டிக்கொள்கின்றன. நீர்த்துளிகளைப் பிடித்து வைக்கும் மாசுகளை வெளியிடுபவையும் மரங்கள்தாம்.

மரங்கள் வெளியேற்றும் வேதிப் பொருள்கள் மாசுகளாக உருமாறி, நீர்த்துளிகளைப் பிடித்துவைத்திருக்கின்றன. இவைதான் நாம் பார்க்கும் மேகங்கள். இந்த மேகங்களின் அடர்த்தி அதிகமாகும்போது, பூமியின் ஈர்ப்பு விசையால் மழையாகப் பொழிகின்றன.

இப்படி மரங்கள் நீர்த்துளிகளையும் வெளியேற்றி, வேதிப் பொருள்களையும் வெளியேற்றி நீர்த்துளிகளைப் பிடித்து வைத்து, மழை பொழிவுக்குக் காரணமாகின்றன, ஷிவானி. அதே நேரம் பொழியும் எல்லா மழைக்கும் மரங்கள் மட்டுமே காரணம் இல்லை.

கீமோதெரபி என்றால் என்ன, எதற்காக அதைக் கண்டு பயப்படுகிறார்கள், டிங்கு? - ஜி. இனியா, 7-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

கீமோதெரபி என்பது புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் ஒரு சிகிச்சை. கீமோதெரபி எனும் வேதி சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படும். உடலின் பிற பகுதிகளுக்குப் பரவுவதும் தடுக்கப்படும்.

கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்களுக்குப் பக்கவிளைவாக உடலில் சில பிரச்சினைகள் உருவாகும், முடி உதிரும் என்பதால் கீமோதெரபிக்குப் பயப்படுகிறார்கள். உயிர் பிழைப்பதுதான் முக்கியமானது என்பதால், கீமோதெரபியின் தற்காலிகப் பிரச்சினைகள் குறித்துக் கவலைப்படாமல், சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது, இனியா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in