

காட்டூர் காட்டில் உள்ள குளத்தில் ஓர் ஆமை வசித்தது. அருகில் இருந்த பெரிய ஆலமரத்துக்கு அடியில் ஒரு முயல் வாழ்ந்தது. ஆமையும் முயலும் நண்பர்களாக இருந்தன.
ஒரு காலத்தில் அவர்களுக்குள் நடந்த ஓட்டப்பந்தயப் போட்டிக்குப் பிறகுதான் நண்பர்கள் ஆனார்கள். எந்தப் போட்டி என்று உங்களுக்குத் தெரியுமே! முயல் சோம்பேறி. அருகிலேயே கிடைக்கும் புல், பூண்டுகளைச் சாப்பிடும். எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும்.
ஆமை சுறுசுறுப்பாக அலைந்து திரியும். உணவு தேடும். நண்பர்களுடன் விளையாடும். முயலையும் உணவு தேட அழைக்கும்.
“அட, போப்பா. இங்கேயே எல்லாம் கிடைக்கும் போது எதுக்கு அலையணும்?” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை மூடிக் கனவு காணத் தொடங்கிவிடும் முயல்.
“நண்பா, விரைவில் கோடைக்காலம் வரப்போகிறது. கொஞ்சம் புற்களைப் பறித்துச் சேமித்து வைத்துக்கொள். அப்போதுதான் சமாளிக்க முடியும்” என்று ஆமை சொல்லும்.
முயல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உறங்கும்.
கோடைக்காலம் வந்தது. குளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் வற்றியது. ஆலமரத்துக்கு அருகில் இருந்த புற்கள் காய்ந்து கருகிவிட்டன. முயலுக்குப் பசி. ஆனால், சாப்பிட ஒன்றுமில்லை. ஆமையிடம் போய் உணவு கேட்க வெட்கமாக இருந்தது.
ஒருநாள் ஆமை அந்த வழியே போகும்போது, “என்ன நண்பா, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டது.
“பசியோடு இருக்கிறேன். உணவு கிடைக்கவில்லை” என்று பரிதாபமாகச் சொன்னது முயல்.
“அட, இவ்வளவுதானா! உனக்கு மந்திரக்கூழ் தயாரிக்கத் தெரியாதா?” என்று கேட்டது ஆமை.
“மந்திரக்கூழா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது முயல்.
“ஆமாம், எதுவுமே இல்லாமல் காய்ச்சலாம். அதுக்கு ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தைச் சொன்னால் போதும், நான் அப்படித்தானே தினமும் காய்ச்சிக் குடிக்கிறேன்” என்றது ஆமை.
“அப்படியா, எனக்கும் அந்த மந்திரக்கூழ் எப்படித் தயாரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடு ” என்று கெஞ்சியது முயல்.
“அது பெரிய வித்தையில்லை. முதலில் ஒரு பானையை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று சொன்னதும் முயல் ஒரு பானையை எடுத்துவந்தது.
“அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.”
முயல் ஓடிப்போய் குளத்திலிருந்த தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து, நெருப்பைப் பற்ற வைத்தது.
ஆமை அந்தத் தண்ணீரை ஓர் ஆலமரக்குச்சியால் கலக்கியது. பிறகு கண்களை மூடி மந்திரம் போடுவதைப் போல முணுமுணுத்தது. ஒரு சொட்டு வாயில் விட்டது.
“என்ன மந்திரக்கூழ் தயாரா?” என்று ஆவலுடன் கேட்டது முயல்.
“அவசரப்படாதே. கொஞ்சம் உப்பு போடச் சொல்கிறது கூழ்” என்றது ஆமை.
உடனே முயல் வெளியே ஓடிப்போய், உப்பு மண்ணிலிருந்து உப்பை எடுத்துக்கொண்டு வந்தது. உப்பைத் தண்ணீரில் கலந்தது ஆமை. பிறகு மறுபடியும் மந்திரம் போடுவதைப் போல முணுமுணுத்தது. மறுபடியும் ஒரு சொட்டு வாயில் விட்டது.
“நண்பா, கொஞ்சம் கிழங்கு போடச் சொல்கிறது கூழ்.”
“கிழங்குக்கு நான் எங்கே போவேன்?” என்றது முயல்.
“குளத்தில் இருக்கும் தாமரைக் கிழங்கை எடுக்கச் சொல்கிறது” என்றது ஆமை.
முயல் ஓடிப்போய், தாமரைக் கிழங்கை எடுத்துக்கொண்டு வந்தது. கிழங்கைத் தண்ணீரில் போட்டுவிட்டு மறுபடியும் மந்திரம் சொன்னது. மறுபடியும் வாயில் விட்டு ருசி பார்த்தது.
“கொஞ்சம் இனிப்பு வேண்டும் என்று கூழ் கேட்கிறது” என்றது ஆமை.
“இனிப்பா, இனிமேல் என்னால் முடியாது நண்பா. எனக்குக் கூழே வேண்டாம்” என்றது முயல்.
ஆமை, “குளத்தின் கரையில் சர்க்கரைத்துளசிச் செடி இருக்கிறது. அதிலிருந்து பறித்துக்கொண்டு வா” என்றது.
உடனே முயல் சர்க்கரைத்துளசி இலைகளைப் பறித்து வந்தது. அந்த இலைகளைப் பானையில் போட்டுக் கலக்கியது ஆமை. முயல் பசியுடன் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தது. கண்களை மூடிய ஆமை மந்திரத்தைச் சொன்னது. மறுபடியும் ஒரு சொட்டுக் கூழை நாக்கில் விட்டது.
“ஆகா, அருமையான மந்திரக்கூழ் தயாராகிவிட்டது! இந்தா நண்பா குடி” என்றது ஆமை.
கூழைக் குடித்த முயல், ‘அட, இதுவரை இப்படி ஒரு கூழ் குடித்ததில்லையே’ என்று நினைத்தது. அந்த மந்திரம் மட்டும் தெரிந்துவிட்டால் தினமும் இப்படி ருசியான கூழைக் குடிக்கலாம் என்று நினைத்தது.
“நண்பா, எனக்குக் கொஞ்சம் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடேன் ” என்று கேட்டது முயல்.
“அந்த மந்திரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று என்னிடம் தேவதை சொல்லியிருக்கிறாரே...” என்றது ஆமை.
“தயவுசெய்து சொல்லிக்கொடு. என்னால் பசி தாங்க முடியவில்லை” என்று கெஞ்சியது முயல்.
“சொல்கிறேன். ஆனால், தினமும் இதே மாதிரி எல்லாவற்றையும் சேகரித்துப் போட்ட பிறகு, மூன்று முறை மந்திரத்தைச் சொல்ல வேண்டும்” என்றது ஆமை.
“அப்படியே செய்கிறேன் நண்பா” என்றது முயல்.
“உழைப்பே உயர்வு, உழைப்பே உயர்வு, உழைப்பே உயர்வு” என்று ஆமை மந்திர வார்த்தைகளைச் சொன்னது.
முயலும், “உழைப்பே உயர்வு, உழைப்பே உயர்வு, உழைப்பே உயர்வு” என்று சொல்லிக்கொண்டே கூழைக் குடித்து முடித்தது.
ஆமை சிரித்துக்கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தது. அன்று முதல் முயல் தினமும் மந்திரக் கூழைக் காய்ச்சிக் குடித்துவந்தது. உங்களுக்குத்தான் தெரியுமே, எப்படி மந்திரக்கூழ் தயாரானது என்று!