

காட்டை ஒட்டி இருந்தது அந்த ஊர். கொக்.. கொக்... கொக்... என்று தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே, சிவப்புக் கோழி மண்ணில் புழுவைத் தேடிக்கொண்டிருந்தது.
அப்போது முயல் தலைதெறிக்க ஓடிவந்தது. வழிதவறி அடர்ந்த காட்டுக்குள் போன முயல், அங்கே சிங்கத்தைப் பார்த்தது. இத்தனைக்கும் சிங்கம் அப்போதுதான் ஒரு பெரிய வேட்டையை முடித்துவிட்டு, உறங்கிக் கொண்டிருந்தது.
முயலின் சத்தம் கேட்டுக் கண்திறந்த சிங்கம், கொட்டாவிவிட்டது.
அவ்வளவுதான்... பயத்தில் ஓட ஆரம்பித்த முயல், சிவப்புக் கோழியின் பக்கத்தில் வந்துதான் நின்றது.
“ஏன் இப்படி ஓடி வர்ற? யாரும் துரத்தறாங்களா?” என்று சிவப்புக் கோழி கேட்டது.
‘ஐயையோ... உண்மையைச் சொன்னால் கிண்டல் பண்ணுவாளே, என்ன சொல்லலாம்?’ என்று முயல் யோசித்தது.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. என் நண்பர்கள்கூட விளையாடி முடிச்சிட்டு, சந்தோஷத்தில் ஓடிவந்தேன்.”
“காட்டுக்குள்ள உனக்கு நண்பர்கள் இருக்காங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டது சிவப்புக் கோழி .
“அங்கே நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்ககூடதான் இவ்வளவு நேரம் விளையாடிட்டு இருந்தேன்” என்று சொன்னது முயல்.
“நான் காட்டுக்குள்ள போனதே இல்லை. என்னையும் ஒரு நாள் கூட்டிட்டுப் போறீயா?” என்று கேட்டது சிவப்புக் கோழி.
“ம்... அடுத்த தடவை போகும்போது கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன்” என்றது முயல்.
அன்று வீட்டுக்குப் போனதும் சிவப்புக் கோழி, “அம்மா, நான் காட்டுக்கு விளையாடப்போறேன். முயல் என்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கான். அங்க அவனுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்களாம்” என்றது.
“காட்டுக்குப் போகக் கூடாது. பெரிய விலங்குகள் எல்லாம் இருக்கும். முயலும் போக வேண்டாம். வீணா ஆபத்தில் மாட்டிக்காதீங்க” என்று அம்மா கோழி கண்டிப்போடு சொல்லிவிட்டு, வேலையைப் பார்க்கப் போய்விட்டது.
‘சே, எப்பப் பார்த்தாலும் இங்கே போகாத, அதைப் பண்ணாதேன்னு ஒரே கட்டுப்பாடு’ என்று வருத்தப்பட்டது சிவப்புக் கோழி.
அப்போது மரங்களை ஏற்றிக்கொண்டு சிறிய வேன் ஒன்று வந்தது.
சிவப்புக் கோழியை வம்பில் மாட்டிவிட இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தது முயல். உடனே, “சிவப்புக் கோழியே, வேனில் ஏறிக்கோ. இது காட்டுக்குள்ளதான் போகுது. நீயும் என் நண்பர்களுடன் ஜாலியா விளையாடிட்டு வரலாம்” என்றது.
“நீ வரலையா?”
“இன்னைக்கு நீ போய் விளையாடிட்டு வா, நாளைக்கு நாம சேர்ந்து போகலாம். நேத்து விளையாடியதே இன்னும் கால் வலிக்குது” என்று காலைப் பிடித்துக்கொண்டு சொன்னது முயல்.
சிவப்புக் கோழியும் யாருக்கும் தெரியாமல் வேனில் ஏறி, காட்டுக்குள் போய் இறங்கியது.
‘முயலின் நண்பர்களை எப்படிக் கண்டுபிடிக்கறது?’ என்று யோசித்துக்கொண்டே நடந்தது.
அடர்ந்த காட்டுக்குள் மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன.
“முயலோட நண்பர்கள் யாராவது இங்கே இருக்கீங்களா?” என்று சத்தமாகக் கேட்டது சிவப்புக் கோழி.
பதிலே இல்லை.
“நான் உங்ககூடதான் விளையாட வந்திருக்கேன்” என்று மறுபடியும் சொன்னது. பதில் இல்லை என்றதும் சிவப்புக் கோழிக்குப் பயம் வந்துவிட்டது.
அப்போது மேகக்கூட்டம் திரண்டது. சூரியனை மேகம் மறைத்தது. காட்டில் வெளிச்சமே இல்லை. சட்டென்று ஒரு மின்னல் தோன்றியது. அந்த வெளிச்சத்தில் ஒரு சிங்கம் ஏப்பம் விடுவதைப் பார்த்தது சிவப்புக் கோழி.
‘ஐயோ, இதுதான் சிங்கமா? சூரியனையே முழுங்கிட்டு ஏப்பம் விடுதுபோல... என்னையும் விடாது’ என்று நினைத்த சிவப்புக் கோழிக்குப் பயம் வந்துவிட்டது. உடனே அங்கிருந்து ஓடியது.
நல்ல வேளையாக அதே வேன் கிளம்பிக் கொண்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்துவிட்டது.
‘அம்மா சொன்னது சரிதான். குட்டியா பந்து மாதிரி சூரியன் இருக்கறதுனால, சிங்கம் அதை முழுசா முழுங்கிருச்சு போல... இன்னும் படபடப்பா இருக்கு’ என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தது சிவப்புக் கோழி.
அம்மாவைக் கண்டதும், “சிங்கம் சூரியனை முழுங்கிருச்சும்மா” என்று நடுக்கத்துடன் சொன்னது சிவப்புக் கோழி.
“என்ன பகல் கனவா? சூரியனைச் சிங்கத்தால் முழுங்க முடியுமா? உளறாம போய் விளையாடு” என்றது அம்மா.
அங்கு வந்த முயல், ‘அப்பாடி... இவளும் காட்டுக்குள்ள எதையோ பார்த்து பயந்திருக்கா. இனிமே நம்மகிட்ட வந்து கேள்வி கேட்க மாட்டா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
‘இனிமேல் அவன் சொன்னான், இவன் சொன்னான்னு அந்தக் காட்டுப் பக்கம் போகவே கூடாது’ என்று சிவப்புக் கோழியும் முடிவுசெய்தது.