

உடலில் ரத்த அணுக்களோடும் ‘நோய்ப் பாதுகாப்பு மண்டலம்’ என அழைக்கப்படும் நிணநீர் மண்டலத்தோடும் நெருங்கியத் தொடர்புகொண்டுள்ள உறுப்பு, மண்ணீரல் (Spleen). இது, மேல் வயிற்றின் இடது பக்கத்தில், உதரவிதானத்துக்குக் கீழே இருக்கிறது. இதற்கு முன்புறம் இரைப்பையும் பின்புறம் சிறுநீரகமும் இருக்கின்றன.
இதன் நீளம் சுமார் 12 செ.மீ. அகலம் சுமார் 7 செ.மீ. எடை 150 கிராம். இது பார்ப்பதற்கு மாநிறத்தில் குழி விழுந்த மாங்காய் மாதிரி இருக்கிறது. குழி விழுந்த பகுதி வழியாக ரத்தக் குழாய்கள் உள்ளே சென்று வெளியில் வருகின்றன.
உடலில் உள்ள மிகப் பெரிய நிணத்திசு உறுப்பு (Lymphatic organ) இதுவே. இதன் மேற்புறத்தில் கடினமான நார்த்திசுவாலான உறை (Capsule) ஒன்று இருக்கிறது. இதிலிருந்து நிறையத் திசுச் சுவர்கள் உள்நோக்கிச் சென்று மண்ணீரலைப் பல பகுதிகளாகப் பிரிக்கின்றன. தண்ணீர்த் தொட்டிகள்போல் காணப்படும் இந்தப் பகுதிகளுக்கு ‘நுண்ணறைகள்’ (Lobules) என்று பெயர். இவை பஞ்சுபோல் மென்மையாக இருக்கும்.
இவற்றில் மண்ணீரல் கூழ் (Splenic pulp) இருக்கிறது. இது சிவப்புக்கூழ் (Red pulp), வெண்கூழ் (White pulp) என இரு வகைப்படும். சிவப்புக்கூழில் ரத்த அணுக்கள், நச்சுகளை விழுங்கும் தன்மை கொண்ட மேக்ரோபேஜ் அணுக்கள், அழிக்கப்பட்டுவிட்ட வயது முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்கள் ஆகியவை காணப்படுகின்றன. இங்குதான் ரத்தச் சிவப்பணுக்களும் தட்டணுக்களும் சேமிக்கப்படுகின்றன.
வெண்கூழில் நிணத்திசுக்களின் தொகுப்பு மட்டுமே காணப்படுகிறது. இதன் மையப் பகுதியில் நிணவணுக்கள் (Lymphocytes) எனும் ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகின்றன. இவைதான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கருவில் வளரும் குழந்தைக்கு அதன் மண்ணீரலில்தான் ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாகின்றன. பிறப்புக்குப் பிறகு, அவை எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன. என்றாலும், அவ்வாறு உருவாகும் ரத்தச் சிவப்பணுக்கள் பக்குவமடைந்து முழு அணுக்களாக உருவெடுப்பது மண்ணீரலில்தான்!
அதுபோல் உடலில் ரத்தம் சேமிக்கப்படும் ஒரே இடம் மண்ணீரல் மட்டுமே. உடலில் எங்காவது அடிபட்டு, காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிகமாக வெளியேறும்போது அதை ஈடுகட்ட இதில் சேமிக்கப்படும் ரத்தம் உடனடியாக உடலுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது; இதன் மூலம் உயிருக்கு ஏற்பட இருக்கும் ஆபத்து தவிர்க்கப்படுகிறது.
மண்ணீரலை ‘நோய்த் தடுப்பு மண்டலத்தின் தலைவன்’ என்று சொல்வதுண்டு. காரணம், நமக்கே தெரியாமல் பல நோய்களிலிருந்து அனுதினமும் நம்மைக் காக்கின்ற பணிகளை ஓய்வில்லாமல் செய்துகொண்டிருக்கும் அரிய உறுப்பு மண்ணீரல்தான்.
உடலில் ரத்தத்தை வடிகட்டும் உறுப்பாகவும் இது திகழ்கிறது. எப்படி? நோய்ப் பாதுகாப்பில் பங்கேற்கும் ‘வலைப்பின்னல் உள்ளுறை மண்டலம்’ (Reticulo endothelial system) நம் உடலில் நான்கு இடங்களில் இருக்கிறது. அவற்றில் ஒன்று மண்ணீரல். இந்த வலைப்பின்னல் அணுக்கள் ரத்தத்தில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை வடிகட்டிக்கொண்டே இருப்பதால் நமக்கு நோய்ப் பாதுகாப்பு கிடைக்கிறது. இது மட்டும் உடலில் நிகழவில்லை என்றால், நமக்கு தினமும் ஏதாவது ஒரு நோய் வந்து படுத்திவிடும்.
உடலில் உருவாகும் நச்சுகள், உடலுக்குத் தேவைஇல்லாத அந்நியப் பொருள்கள், உடலுக்கு ஒவ்வாத புரதங்கள், நுண்கிருமிகள், வயதான ரத்த அணுக்கள் ஆகியவை நம் ரத்தத்தில் எந்த நேரமும் சுற்றிக்கொண்டிருக்கும். இவை எல்லாமே நமக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றையெல்லாம் மண்ணீரலில் உள்ள மேக்ரோபேஜ் அணுக்கள் விழுங்கி அழித்துவிடுகின்றன. இதனால் நமக்கு நோய்கள் வருவது இயல்பாகவே தடுக்கப்படுகிறது.
ரத்தச் சிவப்பணுக்களின் சராசரி ஆயுட்காலம் 120 நாட்கள். காலாவதியாகிவிட்ட இந்த அணுக்கள் ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால், நோய்கள் ஏற்படுவது உறுதி. எனவே இவை அழிக்கப்பட வேண்டியது கட்டாயம். இந்தப் பணியை மேற்கொள்வதும் மண்ணீரல்தான். 120 நாட்களைக் கடந்துவிட்ட சிவப்பணுக்கள் மண்ணீரலில் உடைக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி மூலம் புதிய சிவப்பணுக்களை உருவாக்க எலும்பு மஜ்ஜையில் மறுபடியும் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது உருவாகும் பிலிருபின் எனும் நச்சுப்பொருளைக் கல்லீரலுக்கு அனுப்பி சிறுநீரிலும் மலத்திலும் வெளியேற்றி விடுகிறது, மண்ணீரல்.
எதிரிப் படைகள் நாட்டுக்குள் நுழையும்போது, நம் ராணுவ சிப்பாய்கள் யுத்தம் செய்து, அவர்களை விரட்டுவதுபோல், உடலுக்குள் வேண்டாத புரதங்கள் நுழையும்போது, மண்ணீரல் நிணவணுக்களை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இவை எதிரணுக்களை (Antibodies) உருவாக்கி, புரதங்களோடு போராடி, அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றன. இதனாலும் நம் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com