

கடலில் ஆடி ஆடி மிதந்து செல்லும் படகு உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா? அதைப் போன்ற படகை வீட்டில் நீங்களே செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
தடிமனான அட்டை, மெல்லிய ஒயர், நீல நிற பளபளப்பான காகிதம், வெள்ளைத் தாள், சிவப்பு நிற சார்ட் பேப்பர் சிறு துண்டு, பென்சில், பசை.
செய்முறை:
1. தடிமனான அட்டையில் படகை வரைந்து அதை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இதை மஞ்சள் நிற சார்ட் பேப்பரில் படகுக்குத் தேவையான கொடியைத் தயாரித்து அதைப் படகின் உச்சியில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
2. படகின் அடித்தளத்துக்காக தடிமனான அட்டையில் பெரிய செவ்வக வடிவத்தை வெட்டி எடுத்துக்கொண்டு அதை வெள்ளைத் தாளால் மூடிக்கொள்ளுங்கள்.
3. மற்றொரு தடிமனான அட்டையில் சிறிய செவ்வக வடிவத்தை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மீது பளபளப்பான நீல நிறக் காகிதத்தை ஒட்டிக்கொள்ளுங்கள். அதன் மேற்பகுதியை அலைஅலையாகத் தோற்றமளிப்பது போல் வெட்டி, அதை படகின் அடித் தளத்தின் மீது செங்குத்தாக ஒட்டிக்கொள்ளுங்கள்.
4. மெல்லிய ஒயரை பென்சில் மீது வளையம் போல் சுற்றிக்கொள்ளுங்கள். இப்போது பென்சிலை உருவி எடுத்தால் ஸ்பிரிங் ஒன்று உங்கள் கையில் கிடைக்கும். அதன் ஒரு முனையைப் படகின் அடியில் ஓட்டை போட்டு சொருகிக்கொள்ளுங்கள்.
5. படகின் அடித்தளத்தில் பளபளப்பான நீல நிறக் காகிதத்தின் பின்பக்கம் ஸ்பிரிங்கின் மறுமுனையைச் சொருகுங்கள்.
இப்போது காற்றில் ஸ்பிரிங் ஆடும்போது படகும் ஆடி ஆடிச் செல்வது போல் தோன்றுகிறதா?