

பல வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் உரிமையாளரான கரடிக்கு முதுமை வந்துவிட்டது. அது தன்னிடம் பணியாற்றிவந்த மானையும் நரியையும் குரங்கையும் அழைத்தது.
“அன்பர்களே, இந்த ஆண்டு விவசாயம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. பல ஆண்டுகளாக நீங்கள் என் நிலங்களில் வேலை செய்கிறீர்கள். என் மூன்று நிலங்களில் ஆளுக்கு ஒன்றாகப் பயிரிட்டு விவசாயம் செய்யுங்கள். உங்கள் மூவரில் இந்த முறை விவசாயத்தைச் சிறப்பாகச் செய்பவருக்குச் சிறந்த பரிசு தருவேன்” என்றது கரடி.
மானும் நரியும் குரங்கும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக்கொண்டன.
“என்ன பரிசு என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டது நரி.
“அதைப் பிறகுதான் சொல்வேன். நீங்கள் விவசாய வேலைக்குத் தயாராக இருங்கள்” என்று அவர்களை அனுப்பி வைத்தது கரடி.
“என்ன பரிசு தரப் போகிறார்?” என்று கேட்டது குரங்கு.
“என்ன பெரிய பரிசு தந்துவிடப்போகிறார்? நாம் விளைவித்த தானியங்களில் கொஞ்சம் கூலியாகத் தருவார். இதுவரை அப்படித்தானே தந்திருக்கிறார்?” என்று கிண்டலாகச் சொன்னது நரி.
“அப்படித்தான் இருக்கும். சும்மா பரிசு என்று ஆசைகாட்டி நம்மை அதிகம் வேலை வாங்கப் பார்க்கிறார்” என்றது குரங்கு.
“சரியாகச் சொன்னாய். இந்த ஆசை வார்த்தைக் கெல்லாம் நான் மயங்கமாட்டேன்” என்றது நரி.
ஆனால் மான், “நண்பர்களே, நாம் நம் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். அதற்கான பரிசு நிச்சயம் கிடைக்கும்” என்றது.
“மானே, உன்னைப் போன்ற ஏமாளிகளால்தாம் முதலாளிகள் தொழிலாளர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். தொழிலாளர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். இந்த முறை நாங்கள் ஏமாறப் போவதில்லை” என்றன நரியும் குரங்கும்.
மறுநாள் மானையும் நரியையும் குரங்கையும் அழைத்தது கரடி. அவற்றிடம் ஒரே பரப்பளவுள்ள மூன்று நிலங்களைக் கொடுத்தது. கூடவேஒவ்வொருவருக்கும் ஐம்பது செவ்வாழைக் கன்றுகளைக் கொடுத்து வளர்க்கும்படி சொன்னது.
“இன்று முதல் உங்கள் நிலத்தை நீங்கள்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். நான் அவ்வப்போது வந்து பார்ப்பேன்” என்றது கரடி.
தன் நிலத்தில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்த மான், தினமும் வாழைக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிவந்தது.
நரியும் குரங்கும் வேண்டாவெறுப்பாகத் தங்கள் நிலத்தில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்தன. சரியாகத் தண்ணீர் பாய்ச்சுவதே இல்லை.
நரி மானிடம், “நண்பா, நீ எதற்காக இப்படித் தினமும் வாழைக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிச் சிரமப்படுகிறாய்? எங்களைப் போல மரத்தடியில் ஓய்வெடு” என்று சொன்னது.
“என்ன இப்படிச் சொல்கிறாய்? அவ்வப்போது நம் கரடியார் வந்து, நாம் எப்படி விவசாயம் செய்கிறோம் என்று பார்ப்பார் அல்லவா? அவர் வந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டது மான்.
“நண்பா, அதற்காகவா கவலைப்படுகிறாய்? வார இறுதியில்தான் வந்து பார்ப்பார். அவர் வருகின்ற நேரத்தில் வாழைக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிவிடுவேன்” என்றது குரங்கு.
“ஐயோ, அது ஏமாற்றுவது ஆகாதா?” என்று கேட்டது மான்.
“நாம் எவ்வளவு உழைத்தாலும் எப்போதும் கொடுக்கிற கூலியைத்தான் நமக்குத் தருவார். அதனால் நாம் அவரை ஏமாற்றுவது தவறு ஆகாது” என்று சொன்னது நரி.
ஆனால், மான் தொடர்ந்து செவ்வாழைக் கன்றுகளுக்கு நீர் ஊற்றியது. வாழைக்கன்றுகள் வளர்ந்து மரமாகின. நரியும் குரங்கும் கரடியிடம் தினமும் வாழைக்குத் தண்ணீர் ஊற்றுவதாகப் பொய் சொல்லி ஏமாற்றின.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மானின் நிலத்தில் செவ்வாழைக்காய்கள் விளைந்து பருத்திருந்தன. ஆனால், நரியின் நிலத்திலும் குரங்கின் நிலத்திலும் வாழைக்கன்றுகள் வளரவே இல்லை. பல வாழைக்கன்றுகள் வாடிவிட்டன.
ஒருநாள் காலையில் கரடி வந்தது. அது மானையும் நரியையும் குரங்கையும் அழைத்தது.
“அன்பர்களே, உங்கள் மூவருக்கும் ஒரே அளவு நிலத்தைத்தான் தந்தேன். மூவருக்கும் ஒரே மாதிரி செவ்வாழைக்கன்றுகளைத்தான் தந்தேன். அப்படியிருந்தும் மான் மட்டும்தான் சிறப்பாக விளைவித்திருக்கிறான். ஆனால், உங்கள் இருவரின் நிலத்தில் ஏன் வாழைக்கன்றுகள் வளரவே இல்லை?” என்று கேட்டது கரடி.
“நாங்கள் இரண்டு பேரும் நன்றாகவே உழைத்தோம். எங்களின் நிலம் வளமற்ற நிலம். அதுதான் வாழைக்கன்றுகள் வளரவேயில்லை” என்று இரண்டும் பொய் சொல்லின.
மானும் தன் நண்பர்களைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. நரியும் குரங்கும் பொய் சொல்கின்றன என்று உணர்ந்துகொண்டது கரடி.
“எது எப்படியோ, மான் தன் நிலத்தில் நன்றாக விளைவித்துக் காட்டியிருக்கிறான். எனவே அவன் விளைவித்த செவ்வாழைக்காய்கள் முழுவதையும் அவனுக்குக் கொடுக்கிறேன். கூடவே இந்த மூன்று நிலங்களையும் அவனுக்கே கொடுக்கிறேன்.
நான் அன்று தரப்போவதாகச் சொன்ன பரிசுதுதான் இது. இன்று என்னிடம் இருக்கும் வயல்களும் தோட்டங்களும் அன்று என் முதலாளி என் உழைப்பிற்குத் தந்த பரிசு. இப்போது எனக்கு வயதாகிவிட்டதால் இனி மான்தான் இவற்றுக்கு உரிமையாளன். நீங்கள் விரும்பினால் மானிடம் வேலை செய்துகொள்ளுங்கள்” என்றது கரடி.
நரியும் குரங்கும் தங்கள் செயலை எண்ணி வருந்தின.