

காட்டுப் பூனை பெயரைக் கேட்டாலே குஞ்சுக் கிளிக்கு அவ்வளவு பயம். தினமும் இரை ஊட்டி விடும்போது அம்மா கிளி, பூனையைப் பற்றிச் சொல்லி எச்சரித்தது.
“காட்டுப் பூனையின் மஞ்சள் கண்களைப் பார்த்தாலே உடல் நடுங்கும். குறுகுறு மீசை முடிகளுடன் கண்களைச் சுருக்கிக்கொண்டு கத்தும். பூனை மரத்துல ஏறி வந்தால், மரத்திலுள்ள பறவைகள் திக்குத் தெரியாமல் சிறகடித்துப் பறந்து போகும். குஞ்சுப் பறவைகளைப் பிடிச்சு சாப்பிட்டுவிடும்” என்று அம்மா கிளி சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டது குஞ்சுக் கிளி. ஆனால், அது இதுவரை காட்டுப் பூனையை நேரில் பார்த்ததில்லை.
செண்பகக் காட்டை ஒட்டிய தோப்பில் உள்ள ஓர் இலவ மரத்தில், கிளியின் குடும்பம் கூடுகட்டி வசித்தது. அப்பா கிளி சில குச்சிகளையும் காய்ந்த வேர்களையும் கொண்டுவந்து கூடு கட்டியது. பஞ்சை மெத்தையைப் போல விரித்து வைத்தது. அம்மா கிளி முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும் வரை ஆசையோடும் நம்பிக்கையோடும் முட்டையை அடைகாத்தது.
இரண்டு கிளிகளும் குஞ்சுக் கிளிக்கு உலகை அறிமுகப்படுத்த ஆசையோடு காத்திருந்தன. மரத்தில் வசித்த மைனா, புறா, மலைமொங்கன், மரங்கொத்தி, தவிட்டுக் குருவி போன்ற மற்ற பறவைகளும் குஞ்சுப் பறவைக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பின.
ஆனால், ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
புதிதாகப் பிறந்த குஞ்சுக் கிளியின் உடலில், வலது பக்கம் சிறகுகள் இல்லை. அம்மா கிளி துயரம் அடைந்தது. அழுகை பெருக்கெடுத்தது. நாள் முழுவதும் கவலையோடு இருந்த அம்மா கிளியை, அப்பா கிளிதான் தேற்றி ஆறுதல் சொன்னது.
“பறக்க முடியாத குஞ்சுக் கிளிக்கு நாம் இருவரும் துணை நிற்போம். தினமும் உணவு கொண்டு வந்து கொடுப்போம். தைரியம் சொல்லி வளர்ப்போம்.”
மற்ற பறவைகள் ஆளுக்கு ஒரு யோசனை சொன்னதை அம்மா கிளி பொருள்படுத்தவில்லை. ஒற்றைச் சிறகுள்ள குஞ்சுக் கிளியை, நம்பிக்கையோடு வளர்க்க வேண்டும் என உறுதி எடுத்தது.
நாள்கள் நகர்ந்தன.
திடீரென்று ஒருநாள் இலவ மரத்திலிருந்த பறவைகள், ’கீச்... கீச்... கீச்...’ என்று அபயக் குரல் எழுப்பின. காடு அதிர்ந்தது. பொல்லாத பூனை வந்துவிட்டதோ என்று சந்தேகம் எழவே, அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கக் காத்திருந்தது அம்மா கிளி.
எதிர்பாராத நேரத்தில் தெற்கிலிருந்து குளிர்காற்று வீசியது. சூரியன் மறைந்த திசையில் மேகங்கள் திரள ஆரம்பித்தன.
கூடு திரும்பிய மைனா, “புயல் காற்று வீசப் போகிறது” என்று எச்சரிக்கை செய்தது. உச்சிக் கிளையில் உட்கார்ந்திருந்த புறா, “பறவைகள் எல்லாம் அடர்வனத்துக்குப் போறதுதான் பாதுகாப்பு. மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த காட்டுப் பகுதியில், சூறாவளி வீசினாலும் உயிருக்கு ஆபத்து இருக்காது” என்றது.
பறவைகளின் எச்சரிக்கையைக் கேட்டு அம்மா கிளி பதற்றம் அடைந்தது. ‘குஞ்சுக் கிளியை எப்படி இடம் மாற்றுவது?’ என்று யோசித்துக்கொண்டிருக்க, மற்ற பறவைகள் ஒவ்வொன்றாகக் கூடுகளைக் காலி செய்துவிட்டுப் பறந்து சென்றன.
அணில் தோழனிடம் ஆலோசனை கேட்கலாம் என்று கீழே எட்டிப் பார்த்தது.
மரத்துக்கும் பாறைக்கும் இடையில் அலைந்து கொண்டிருந்த அணிலின் நடவடிக்கைகளைக் கவனித்தது. நிச்சயமாகப் புயல் வீசும் என்று புரிந்துகொண்டது.
மேகங்கள் திரண்டு வானம் இருண்டது. அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. அம்மா கிளிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘அடர் வனத்தில் சரியான இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடித்துச் சீக்கிரம் திரும்பிவிடலாம்’ என்கிற எண்ணத்தில் அப்பா கிளியுடன் சேர்ந்து காட்டை நோக்கிப் பறந்தது.
சிறிது நேரத்தில் கனமழை பிடித்துக்கொண்டது. காற்றின் வேகம் அதிகரித்தது. இலவமரக் கிளைகள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆடிக்கொண்டிருந்தன. இருள் சூழ்ந்தது. இரவு முழுவதும் மழை நீடித்தது.
அதிகாலையில் மழையின் அளவு கொஞ்சம் குறைந்தது. சூரியன் உதித்தபோது காட்டில் வெளிச்சம் பரவியது. உள்காட்டுக்குச் சென்ற பறவைகள் ஒவ்வொன்றாக மறைவிடங்களைவிட்டு வெளியே வந்தன.
“குஞ்சுக் கிளி பிழைத்திருக்குமா? இலவ மரம் சரிந்திருக்குமா?” என்று அப்பா கிளி சந்தேகம் எழுப்பவே, கிளிகளின் கவலை அதிகரித்தது. நீண்ட விவாதத்துக்குப் பிறகு இரண்டு கிளிகளும் பழைய இருப்பிடத்தை நோக்கிப் பறந்தன.
கூடு இருந்த கிளையில் நின்றுகொண்டிருந்த காட்டுப் பூனையைப் பார்த்த அம்மா கிளிக்குப் பயம் தொற்றிக்கொண்டது. பூனை மீதிருந்த கோபம் அதிகரித்தது.
அங்கு வந்த அணில், “புயல் காற்று வீசியபோது காட்டுப் பூனை மரத்தில் ஏறி, குஞ்சுக் கிளியைக் கவ்விச் சென்றதைப் பார்த்தேன். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை” என்றது.
அம்மா கிளியைக் கண்ட காட்டுப் பூனை கீழே இறங்கிச் சென்றது. பதற்றத்துடன் கூட்டுக்குச் சென்றது அம்மா கிளி. மஞ்சள் வெளிச்சத்தை ரசித்துக்கொண்டிருந்த குஞ்சுக் கிளியைப் பார்த்த அம்மா கிளிக்கு ஒரே ஆனந்தம். அணைத்துக் கொண்டது.
அப்படியானால், குஞ்சுக் கிளியை யார் காப்பாற்றி இருப்பார்கள்? குஞ்சுக் கிளிக்குத் தெரிந்திருக்கும். உங்களுக்கும்தானே!