

வ
ட அமெரிக்காவிலுள்ள அரிசோனாவைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் பெயர் ஹோபி. இறந்து போன தங்கள் மூதாதையர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காகச் செய்த பொம்மைகள்தான் கச்சினா. இந்தப் பொம்மைகளின் வழியாக மேல் உலகத்திலிருக்கும் முன்னோர்களிடம் பேசி மழையையும் நல்ல அறுவடையையும் வரமாகப் பெறுவதற்காக இந்தப் பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.
குளிர் காலமான ஜூலை மாதம் நடுவில் ஒரு சடங்கு வைத்து கிராமத்திலுள்ள குழந்தைகளுக்குக் கச்சினா பொம்மைகள் அளிக்கப்படுகின்றன. அதை ஆசையோடு வாங்கிச் செல்லும் குழந்தைகள் தங்கள் வீட்டின் சுவர்களில் கச்சினாக்களைத் தொங்கவிடுகின்றனர். தங்கள் முன்னோர்களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கற்பிக்கக்கூடிய முதல் ஆசிரியர்களாக இந்தக் கச்சினா பொம்மைகள் விளங்குகின்றன. மான், கரடி, பசு போன்ற விலங்கு கச்சினா பொம்மைகளும் உண்டு.
18-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கச்சினா பொம்மைகள் மூலம்தான் வெளியுலகுக்கு அவை அறிமுகமாகின. மிக எளிய வடிவமைப்பு, குறைந்த வண்ணங்களுடன் அந்தப் பாரம்பரிய பொம்மைகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அமெரிக்க இலவ மரத்தின் வேரிலிருந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. காய்கறி நிறமிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்கள் இதற்குப் பூசப்படுகிறது.
1910 முதல் 1930 வரை செய்யப்பட்ட கச்சினா பொம்மைகளில் அலங்கார வேலைப்பாடுகளுடன், அந்தக் கால வாழ்க்கையையும் நமக்குக் காட்டுவதாக உள்ளன. அதற்குப் பிறகு செய்யப்பட்ட கச்சினா பொம்மைகள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தன. கை, கால்களும் முழுமையாக வடிவமைக்கப்பட்டன. தலையில் அபூர்வப் பறவைகளின் சிறகுகளும் செவ்விந்தியப் பழங்குடிகளின் தலைகளில் இருப்பதைப்போல் அலங்காரமாகச் சூட்டப்பட்டன.
ஒவ்வொரு கச்சினா பொம்மையின் உருவம், நிறம், வடிவமும் ஹோபி மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாறு, வாழ்க்கை முறையைச் சொல்வதாக உள்ளன. கச்சினா பொம்மையின் கண்களுக்குக் கீழே இரண்டு கோடுகள் வரையப்பட்டிருந்தால் அது வீரன் பொம்மை என்று அர்த்தம்.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in