Published : 21 Feb 2018 10:42 AM
Last Updated : 21 Feb 2018 10:42 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ஏன் ECNALUBMA என்று திருப்பி எழுதப்படுகிறது?

ஆம்புலன்ஸில் மட்டும் எழுத்துகள் திருப்பி எழுதியிருப்பது ஏன், டிங்கு?

- வெ.யுவன் ஆதித்தியா, 6-ம் வகுப்பு, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தருமபுரி.

இப்படி எழுதுவதற்கு ‘கண்ணாடி பிம்ப எழுத்துமுறை’ (Mirror writing) என்று பெயர். இந்த எழுத்துகளைக் கண்ணாடி முன் வைத்துப் படித்தால் சாதாரணமாகப் படிக்கமுடியும். அந்தக் காலத்தில் ரகசியங்களை இப்படி யாருக்கும் எளிதில் புரியாத மாதிரி எழுதி வைத்தார்கள். ஆம்புலன்ஸில் கண்ணாடி பிம்ப எழுத்துமுறையில் எழுதி வைத்தால், முன்னே செல்லக்கூடிய வாகனங்களின் பின்பக்கம் பார்க்கக்கூடிய கண்ணாடியில் ‘AMBULANCE’ என்று சரியாகத் தெரியும். அதனால் முன்னே செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸுக்கு இடம் விட்டுச் செல்ல உதவியாக இருக்கும், யுவன் ஆதித்தியா. லியனார்டோ டாவின்சி தன்னுடைய குறிப்புகளை எளிதில் யாரும் படிக்க முடியாதபடி, கண்ணாடி பிம்ப எழுத்துமுறையில் எழுதி வைத்திருக்கிறார்.

 

பெற்றோர் திட்டும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் மீது கோபமாக வருகிறது. என்ன செய்வது டிங்கு?

– கு. லிபிவர்ஷினி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

யாராவது சும்மா திட்டுவார்களா, லிபிவர்ஷினி? எதற்காகத் திட்டுகிறார்கள் என்று யோசியுங்கள். நீங்கள் சரி என்று நினைத்துச் செய்யும் ஏதாவது ஒரு செயலோ, அல்லது செய்ய வேண்டிய விஷயத்தைச் செய்யாமல் இருப்பதாலோ பெற்றோருக்குத் தவறாகத் தோன்றலாம். அதைச் சரிசெய்துகொண்டால், உங்களை ஏன் திட்டப் போகிறார்கள்?

d1.jpgright

பெற்றவர்கள் நம் நன்மைக்காகத்தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால், உங்களுக்குக் கோபமே வராது. நீங்கள் சரியாகச் செய்து, அவர்கள் தவறாக நினைத்து உங்களைத் திட்டிக்கொண்டிருந்தால், அதை அமைதியான நேரத்தில் விளக்கிச் சொல்லலாம். அவர்கள் புரிந்துகொள்வார்கள். பெற்றோர், ஆசிரியர், பெரியவர்கள் திட்டுவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம், லிபிவர்ஷினி.

உனக்குப் பிடித்த மேஜிக் கலைஞர் யார், டிங்கு?

– எம். கலைச்செல்வன், திண்டிவனம்.

பல மேஜிக் கலைஞர்களைப் பிடிக்கும் என்றாலும் தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த டைனமோதான் ஆச்சரியப்படுத்துகிறார். ஒரு மேஜிக் கலைஞருக்கு உரிய உடையோ, வசீகரிக்கும் பேச்சோ இவரிடம் கிடையாது. எளிய மனிதர்களை நாடி வருவார். சட்டென்று ஒரு மேஜிக் நிகழ்த்துவார்.

எல்லோரும் ஆச்சரியப்பட்டு நிற்கும்போது அந்த இடத்தைக் கடந்துவிடுவார். மிகவும் எளிமையான, அமைதியான மனிதர் இவர். ஆனால், இவர் செய்யும் ஒவ்வொரு மேஜிக்கும் பிரமிப்பாக இருக்கும். உலகம் முழுவதும் சென்று, இவர் செய்து காட்டிய மேஜிக் கலைகள் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலம்.

21chsuj_tinku.jpg டைனமோ left

பெற்றோர் அரவணைப்பின்றி, தாத்தாவால் வளர்க்கப்பட்ட ஸ்டீவன் ஃப்ரேன், கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். சாப்பிட இயலாததால் மிகவும் ஒல்லியாக இருப்பார். சக சிறுவர்களால் மிக மோசமாகக் கிண்டல் செய்யப்பட்டார்.

மனம் வருந்திய ஸ்டீவனை, அதிலிருந்து மீட்பதற்காக அவரது தாத்தாதான் மேஜிக் கலைகளைச் சொல்லிக் கொடுத்தார். அதில் ஆர்வமான பிறகு, தானே பல மேஜிக் கலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். இவரது நோயும் குணமானது, கிண்டல் செய்தவர்களும் இவரைக் கொண்டாடினார்கள்.

இப்படிப்பட்ட ஸ்டீவன்தான் இன்று உலகின் மிக முக்கியமான 5 மேஜிக் கலைஞர்களில் ஒருவராக இருக்கும் டைனமோ. எப்போதும் எனக்குப் பிடித்த மேஜிக் கலைஞர் ஹங்கேரியைச் சேர்ந்த ஹாரி ஹுடினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x