டிங்குவிடம் கேளுங்கள்: நிலவிலிருந்து எப்படித் திரும்பி வருகிறார்கள்?

டிங்குவிடம் கேளுங்கள்: நிலவிலிருந்து எப்படித் திரும்பி வருகிறார்கள்?
Updated on
1 min read

நிலவுக்குச் செல்லும் விண்கலம் ஒவ்வொரு பாகமாகப் பிரிந்து, நிலவில் இறங்குகிறது. அப்புறம் எப்படி அங்கிருந்து மனிதர்கள் பூமிக்குத் திரும்பி வந்தார்கள், டிங்கு? - எஸ்.ஜெ.கவின், 8-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.

நல்ல கேள்வி கவின். நிலவில் பல முறை மனிதர்கள் தரை இறங்கியிருக்கிறார்கள். அவர்களை அழைத்துச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்துக்குள் பல விண்கலன்கள் வைக்கப்பட்டிருந்தன. நீங்கள் பார்த்ததுபோல் ஒவ்வொரு கலனும் பிரிந்து, நிலவில் தரையிறக்கிக்கலன் மூலம் தரையிறங்கியது.

மனிதர்கள் நிலவில் கால் பதித்த பிறகு மீண்டும் விண்கலனுக்குள் ஏறியவுடன் தரையிறக்கிக்கலனை விட்டுவிட்டு, மேலே இருந்த கலன் பறந்தது. நிலவின் சுற்றுப்பாதையில் அப்பல்லோ 11 விண்கலம் இவர்களின் வருகையை எதிர்பார்த்துச் சுற்றிக்கொண்டிருந்தது.

நிலவில் இருந்து வந்த கலன் சுற்றுப்பாதையில் காத்திருந்த விண்கலத்துடன் இணைந்துகொண்டவுடன், பூமியை நோக்கிப் பயணித்தது. பூமியின் சுற்றுப்பாதையை அடைந்தவுடன் அப்பல்லோ விண்கலத்திலிருந்து மீண்டும் விண்கலன் வெளிவந்து, பூமியை நெருங்கும்போது பாராசூட் மூலம் கடலில் குதித்து, பத்திரமாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பலூன் வெடிக்கும்போது ஏன் சத்தம் வருகிறது, டிங்கு? - ர. அஷ்மிதா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

நாம் ஒரு பலூனை ஊதும்போது பலூனிலிருக்கும் காற்று அதன் சுற்றுப்புறத்தைவிட அதிகமான அழுத்தத்தில் இருக்கும். காற்று அதிகமாகப் பலூனுக்குள் செல்லச் செல்ல ரப்பர் பலூன் விரிவடையும். ஒரு கட்டத்தில் அதிக அளவிலான காற்று அழுத்தம் தாங்காமல் பலூனை உடைத்துக்கொண்டு வெளியேறும். அப்போது ஒலி உண்டாகிறது, அஷ்மிதா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in