

மதுராபுரி கிராமத்தில் வசித்த ராமு, சோமு, பரமு ஆகிய மூன்று பேரையும் அந்த ஊர் மக்களுக்குப் பிடிக்காது. ராமு கஞ்சத்தனமாக இருப்பார். சோமு சோம்பேறியாக இருப்பார். பரமு பேராசைக்காரராக இருப்பார். மூவரும் நண்பர்கள்.
ஒருநாள் இவர்கள் மூவரும் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“சே... என்ன இது, வரவர ஊருக்குள்ள நமக்கு மரியாதையே இல்லாமல் போச்சு” என்றார் ராமு.
“ஆமாம், நீ சொல்வது சரிதான். நமக்கு மரியாதை கிடைக்கிற மாதிரி வாழணும். அதுக்கு ஏதாவது செய்யணும்” என்றார் பரமு.
“ஏதாவது செய்யணுமா? வியர்வை சிந்தி வேலை செய்ய என்னால் முடியாது” என்றார் சோமு.
கஷ்டப்படாமல் முன்னேறுவது எப்படி என்று மூவரும் சிந்தித்தனர்.
“எனக்கு ஒரு யோசனை” என்றார் ராமு.
“சொல்லு... சொல்லு...” என்று மற்ற இரண்டு பேரும் ஆவலுடன் கேட்டார்கள்.
“எங்கள் தாத்தாவின் பழைய குதிரை வண்டி என்னிடம் உள்ளது.”
“அதை எனக்குத் தரப் போகிறாயா?” என்று கேட்டார் பேராசைக்காரர் பரமு.
“நான் அந்த வண்டியைத் தருகிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு குதிரையை மட்டும் வாங்குங்கள். குதிரை
வண்டியை வைத்து நாம் பணம் சம்பாதிக்கலாம்” என்றார் ராமு.
வண்டி தாத்தா கொடுத்தது, குதிரை வாங்கும் பொறுப்பை இவர்கள் தலையில் கட்டிவிட்டால், நமக்குச் செலவு ஏதும் இல்லை என்று அவர் கணக்குப் போட்டார்.
“இந்த யோசனை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. அப்படியே செய்வோம்” என்றார் சோமு.
குதிரை உழைப்பில் நாம் சுகமாக வாழலாம் என்று இவர் நினைத்தார்.
குதிரை வாங்கினால், வண்டி இனாமாகக் கிடைக்கிறதே என்று பேராசைக்காரர் பரமுவும் இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டார்.
இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சொருகுமலை சந்தைக்குச் சென்று குதிரை வாங்குவது என முடிவு செய்தனர்.
“சந்தைக்கு நடந்தே போகலாம். போற வழியில நிறைய கோயில் இருக்கு. அன்னதானம் போடுவாங்க. சாப்பாடு செலவு, வாகன செலவு மிச்சம்” என்றார் ராமு.
“ஒரு நாளைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் என்னால் நடக்க முடியாதப்பா” என்றார் சோமு.
“ஒரு பிரச்சினையும் இல்ல. வழியில நிறைய சத்திரம் இருக்கு. தங்கி இளைப்பாறி மெதுவா போகலாம். வரும்போது குதிரையில் ஏறி வரலாம்” என்றார் பரமு.
மூவரும் நடந்தே சந்தைக்குக் கிளம்பினார்கள். பத்து நாள்கள் நடந்து சந்தையை அடைந்தார்கள். அங்கே வியாபாரி ஒருவர் மூன்று குதிரைகளோடு நின்றிருந்தார். அவர் வைத்திருந்த குதிரைகளில் ஒரு குதிரை கொழுகொழுவென இருந்தது. மற்ற இரண்டு குதிரைகள் நோஞ்சான் குதிரைகளாக இருந்தன.
“ஐயா, இந்தக் குதிரை என்ன விலை?” என்று கொழுத்த குதிரையைக் காண்பித்துக் கேட்டார் சோமு.
“பத்தாயிரம் ரூபாய்” என்றார் வியாபாரி.
“பத்தாயிரமா?” என்றார் ராமு.
“இதோ நிற்கிறது பாருங்கள், இந்த இரண்டு குதிரைகளை வாங்கினால் எட்டாயிரம் ரூபாய்தான்” என்றார் வியாபாரி.
இதைக் கேட்டதும் மூன்று பேரும் தனியாகச் சென்று பேசினார்கள்.
“பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு குதிரை வாங்குவதைவிட, எட்டாயிரம் ரூபாய் கொடுத்து இரண்டு குதிரைகளை வாங்குவதுதான் நமக்கு லாபம்” என்றார் பரமு.
“ஆனால், இரண்டு குதிரைகளும் நோஞ்சானாக இருக்கின்றனவே” என்றார் சோமு.
“அதனால் என்ன? நாம் ஊருக்குச் செல்லும் வழியில் நிறைய வயல்களைப் பார்த்தோம். அதில் ஆசைதீர மேயவிட்டால், ஊருக்குப் போகும் முன் குதிரைகள் கொழுத்துவிடும். தீவனச் செலவும் மிச்சம்” என்றார் ராமு.
வியாபாரியிடம் எட்டாயிரம் ரூபாய் கொடுத்து இரண்டு நோஞ்சான் குதிரைகளை வாங்கினர்.
ஒரு குதிரையில் சோமு ஏறிக்கொள்ள, மற்றொரு குதிரை மீது ராமுவும் பரமுவும் மாறி மாறி அமர்ந்து ஊருக்குப் பயணித்தனர்.
சிறிது தொலைவிலேயே நோஞ்சான் குதிரைகள் களைப்படைந்துவிட்டன. அவற்றின் கால்கள் தடுமாறத் தொடங்கின.
வழியில் கோயில் ஒன்றில் அன்னதானம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உடனே மூவரும் சாப்பிட முடிவு செய்தனர்.
அருகில் இருந்த தோட்டத்தில் செடிகொடிகள் அடர்த்தியாகக் காணப்பட்டன. குதிரைகளுக்கும் தீனி கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தனர்.
குதிரைகளை அங்கு மேயவிட்டு, மூவரும் சாப்பிட்டுத் தூங்கிவிட்டனர்.
திடீரென்று ஆள்கள் கட்டைகளுடன் ஓடிவந்தனர். அதைப் பார்த்த குதிரைகள் இரண்டும் ஓடிவிட்டன.
ராமு, சோமு, பரமு ஆகிய மூவரும் மாட்டிக்கொண்டனர்.