கதை: மாயமான மல்லிகைப் பூக்கள்!

கதை: மாயமான மல்லிகைப் பூக்கள்!
Updated on
2 min read

அது ஓர் அழகான மல்லிகைத் தோட்டம். அந்தத் தோட்டத்தில் மல்லிகைச் செடிகள் மட்டுமே இருந்தன. அடுக்கு அடுக்காகவும் பால் போன்று வெள்ளையாகவும் இருக்கும் மல்லிகைப் பூக்கள். சாயங்காலம் அந்தப் பக்கம் போனாலே மல்லிகைப் பூக்களின் மணம் எல்லாரையும் மகிழ்ச்சியாக மாற்றிவிடும். அதற்காகவே பலரும் அந்தத் தோட்டத்துப் பக்கம் நடைப்பயிற்சி செய்வார்கள்.

தோட்டத்துச் சொந்தக்காரர் மல்லிகைத் தோட்டத்துக்கு வேலி போட்டிருந்தார். யாரும் பூக்களைப் பறித்துவிடக் கூடாது என்று காவல் இருந்தார்.

அவருக்குப் பெருமை அதிகம். யாருக்கும் ஒரு பூவைக்கூடத் தரமாட்டார். உதிர்ந்த பூக்களைக்கூட யாரும் எடுக்க முடியாது.

குழந்தைகள், “மாமா, எங்களுக்கு ரெண்டு பூ கொடுங்களேன்...” என்று ஆசையாகக் கேட்டார்கள்.

“ம்ஹூம்... முடியாது...”

பெண்கள், “அண்ணா, எங்களுக்கு ரெண்டு பூ கொடுங்களேன்...” என்று கேட்டார்கள்.

“ம்ஹூம்...”

வயதான பாட்டிகள், “தம்பி, எங்களுக்கு ரெண்டு பூ கொடேன்...” என்று கேட்டார்கள்.

“ம்ஹூம்...”

அதன்பிறகு யாரும் கேட்பதில்லை. மல்லிகைப் பூக்களுக்கு வருத்தம். யாருக்கும் பயன்படாமல் போகிறோமே என்று கவலையடைந்தன. இரவில் கூடிப்பேசின. காற்று வீசியது.

மறுநாள் காலையில் தோட்டத்துச் சொந்தக்காரர் வந்தார். மல்லிகைத் தோட்டத்தில் ஒரு பூகூட இல்லை. என்ன மாயம் இது? யாராவது திருடி இருப்பார்கள் என்று நினைத்தார்.

ஊருக்குள் ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் மல்லிகைப் பூக்கள் கிடந்தன. மல்லிகைப் பூக்களின் வாசனையால், வீட்டில் உள்ளவர்கள் எழுந்து, கதவைத் திறந்து பார்த்தார்கள். வாசலில் மல்லிகைப் பூக்கள். வெள்ளைவெளேரென்று சிரித்துக்கொண்டிருந்தன.

தோட்டத்துச் சொந்தக்காரர் எல்லாரிடமும் சண்டை போட்டார். அவர்கள் பூக்களைத் திருடிக்கொண்டு வந்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். தங்கள் வீட்டு வாசலில் மல்லிகைப் பூக்கள் கிடந்தன. யார் கொண்டுவந்து வைத்தது என்று தெரியாது என்றார்கள்.

தோட்டத்துச் சொந்தக்காரர் தோட்டத்தைச் சுற்றி இன்னும் கூடுதலாக வேலி போட்டார். நான்கு திசைகளிலும் காவலுக்கு ஆள்களை நிறுத்தினார்.

நள்ளிரவில் மாயமாக ஒரு காற்று வீசும். அதன்பிறகு அந்தத் தோட்டத்தில் மல்லிகைப் பூக்கள் இருக்காது. இது எப்படி நடக்கிறது என்று புரியவில்லை. எப்படியும் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று தோட்டத்துச் சொந்தக்காரர் நினைத்தார்.

இரவில் தோட்டத்துக்குள் கட்டிலைப் போட்டுத் தூங்காமல் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் கிசுகிசு என்று பேசும் சத்தம் கேட்டது. அவர் கூர்ந்து கவனித்தார்.

“இங்க பாருங்க, இன்னும் இந்தத் தோட்டக்காரருக்குப் புரியலை. இந்த உலகத்துல எதுவும் யாருக்கும் சொந்தமில்ல. இந்த உலகமே இயற்கையின் படைப்பு. எல்லாம் எல்லாருக்கும் சொந்தம். இதுகூடத் தெரியல...” என்று மல்லிகைப் பூக்கள் பேசிச் சிரித்தன.

அந்தச் சிரிப்பு முடிந்ததும் காற்று வீசியது. மல்லிகைப் பூக்கள் மாயமாகிவிட்டன.

மறுநாள் மல்லிகைத் தோட்டத்தில் வேலிகள் இல்லை. தோட்டத்துச் சொந்தக்காரர் சிரித்துக்கொண்டே, “வாங்க, வாங்க... பூவைப் பறிச்சுக்கோங்க” என்று அன்புடன் அழைத்தார்.

எல்லாருக்கும் மகிழ்ச்சி. அவருக்கும் மகிழ்ச்சி. மல்லிகைப் பூக்களுக்கும் மகிழ்ச்சி.

அவர் எப்படி மாறினார் என்று யாருக்கும் புரியவில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in