கதை: பூதத்திடம் என்ன கேட்டாள் ஆஷிகா?

கதை: பூதத்திடம் என்ன கேட்டாள் ஆஷிகா?
Updated on
2 min read

ஆஷிகாவுக்கு வீட்டுப் பாடங்களை நினைத்தால் கவலையாக இருந்தது. எல்லாப் பாடங்களுக்கான ஆசிரியர்களும் ஒரே நாளில் வீட்டுப் பாடங்களை எழுதச் சொல்ல வேண்டுமா? எதை எழுதுவது என்று குழப்பமாக இருந்தது.

“எவ்வளவுதான் படிக்க? எவ்வளவுதான் எழுத? யாராவது இந்த வேலைகளை எல்லாம் செஞ்சு கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?” என்று ஆஷிகா தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.

மாலை நேரம் என்பதால் பறவைக் கூட்டங்கள் கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. அப்போது ஒரு காகம் ‘விஷுக்’ என்று வந்து பால்கனி சுவரில் அமர்ந்தது. தன் அலகிலிருந்து பளபளப்பான ஒரு பொருளைப் போட்டுவிட்டுப் பறந்தது.

அது ஒரு கல். தயக்கத்துடன் எடுத்தாள் ஆஷிகா. கல் மீது இருந்த மண்ணை ஒரு துணியால் அழுத்தித் துடைத்தாள். அடுத்த நொடி ஒரு சிறிய பூதம் அவள் முன்னே நின்றது. இது என்ன கதைகளில் வருவதுபோல் ஒரு பூதம் வந்து நிற்கிறதே என்று அதிர்ச்சியடைந்தாள் ஆஷிகா.

“எதற்காக என்னை அழைத்தாய் ஆஷிகா?”

“நானா அழைச்சேன்? நீயாக வந்து நிக்கிறே.”

“நீதானே கல்லைத் தேய்த்து என்னை வரவழைத்தாய்?”

“ஐயோ... கல்லைத் தேய்த்தால் நீ வருவேன்னு எனக்குத் தெரியாது. இப்ப என்ன பண்றது?”

“வந்ததுக்கு ஏதாவது வேலை கொடு. யாருக்கும் உதவி செய்யாமல் என்னால் போக முடியாது” என்றது பூதம்.

“உனக்கு என்ன வேலை கொடுக்கறது? சரி, என் வீட்டுப் பாடங்களை எல்லாம் எழுதிக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டாள் ஆஷிகா.

“வீட்டுப் பாடம் என்பது உனக்குத் தரப்பட்டது. அதை நான் எப்படிச் செய்வது?” என்று கேட்டது பூதம்.

“வேறு வேலைகள் என்னிடம் இல்லை... உடனே கிளம்பு” என்று கோபமாகக் கூறினாள் ஆஷிகா.

உடனே ஆஷிகாவின் நோட்டுகளை வாங்கி, எழுத ஆரம்பித்தது பூதம்.

“ஐயோ... என்ன பண்றே? இப்படி அழகா எழுதினா எங்க டீச்சர் கண்டுபிடிச்சிடுவாங்களே... என்னை மாதிரியே எழுதேன்...” என்று தன் கையெழுத்தைக் காட்டினாள் ஆஷிகா.

சில நிமிடங்களில் வீட்டுப் பாடங்களைச் செய்துமுடித்தது பூதம்.

மறுநாள் மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் சென்றாள் ஆஷிகா. அனைத்து ஆசிரியர்களிடமும் பாராட்டு வாங்கினாள். கணித வகுப்பில் தேர்வு வைத்தார் ஆசிரியர். பூதத்தை மனதுக்குள் நினைத்தாள் ஆஷிகா. கடகடவென்று கணக்குகளை எழுதி முடித்தாள். மீண்டும் ஆசிரியரிடம் பாராட்டு வாங்கினாள்.

தினமும் படிப்பு தொடர்பான அனைத்து வேலைகளையும் பூதமே செய்துகொடுத்தது. அதனால் ஆஷிகா டிவி பார்த்தாள். திறன் பேசியில் விளையாடினாள். நண்பர்களுடன் அரட்டையடித்தாள்.

மாத இறுதியில் நடந்த பரிட்சையில் எல்லாப் பாடங் களிலும் முழு மதிப்பெண்களை எடுத்திருந்தாள் ஆஷிகா. ‘பெரிதாகப் படிப்பது மாதிரியே தெரியவில்லை, எப்படி இவ்வளவு எடுத்திருக்கிறாள்?’ என அவள் அம்மாவுக்குக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ஆசிரியர்கள் ஆஷிகாவைப் பாராட்டினர். ஆனால், நண்பர்கள் அவளை விட்டு விலக ஆரம்பித்தனர். “நீ எங்களோட விளையாடிட்டு, வீட்டுல போய் நல்லா படிச்சுடற. நாங்க மட்டும் குறைவான மார்க் வாங்கி, திட்டு வாங்கறோம்” என்று குறைபட்டுக்கொண்டனர்.

நண்பர்களுடன் பேசாமல் அவளால் இருக்க முடியவில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது. அவளால் விளையாடவோ டிவி பார்க்கவோ முடியவில்லை. அவள் அருகில் வந்த பூதம் காரணத்தைக் கேட்டது.

“என் நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கல. யாழினிகூட எங்கிட்ட பேச மாட்டேங்கறா...” என்று சொல்லும்போதே அழுகை வந்தது ஆஷிகாவுக்கு.

“ஏன்? நீ ஏதாவது தப்பு செஞ்சியா?”

“நான் ஒரு தப்பும் பண்ணலை. நல்ல மார்க் வாங்கிட்டேன்னு எல்லாருக்கும் பொறாமை, அதனாலதான் பேச மாட்டேங்கறாங்க.”

“இதுக்கு முன்னாடி எவ்வளவு மார்க் வாங்குவ?”

“அறுபது, எழுபது வாங்குவேன். யாழினிகூட அப்படித்தான் வாங்குவா. நாங்க ஒண்ணா சேர்ந்து படிப்போம். நீ வந்ததிலிருந்து நான் அவளோட சேர்ந்து படிக்கறதில்லை. அதான் கோபமா இருக்கா. ரொம்ப மோசம்.”

மறுநாள் பள்ளியில் ஆஷிகாவிடம் வந்து பேசினாள் யாழினி.

“ஆஷி, இந்தக் கணக்கை எனக்குச் சொல்லிக் கொடுக்கறீயா?”

யாழினி பேசியதில் ஆஷிகாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அந்தக் கணக்கை எப்படிப் போடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியவில்லை என்று உண்மையைத்தான் சொன்னாள் ஆஷிகா. ஆனால், யாழினி மீண்டும் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

அன்று மாலை முதல் வேலையாக அந்தக் கணக்கைப் போட்டுப் பார்க்க ஆரம்பித்தாள் ஆஷிகா. ஆனால், அவளால் போட முடியவில்லை.

“அம்மா, இந்தக் கணக்குப் புரியல, கொஞ்சம் சொல்லித்தர்றீங்களா?” என்று ஆஷிகா கேட்க, அம்மா ஆச்சரியமாகப் பார்த்தார்.

இனி தன் உதவியை ஆஷிகா எதிர்பார்க்க மாட்டாள் என்பதைப் புரிந்துகொண்ட பூதம், சட்டென்று மறைந்தது.

- காயத்ரி. ஒய்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in