

ராஜ ராஜ சோழன் பற்றிய சுவாரசியமான தகவல்களைச் சொல்ல முடியுமா, டிங்கு?
– ச.ரா. முத்து நவீன், 9-ம் வகுப்பு, காரைக்கால்.
சுந்தர சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் அருள்மொழிவர்மன். இவரது அண்ணன் ஆதித்த கரிகாலன் இறந்ததால், பட்டம் பெறும் உரிமையைப் பெற்றவர். ஆனாலும் தந்தை இறந்த பிறகு உடனடியாக இவர் மன்னராக முடிசூட்டிக்கொள்ளவில்லை.
உத்தம சோழனுக்கு அந்தப் பொறுப்பை அளித்து, 15 ஆண்டுகள் ஆட்சி நடத்த வைத்தார். அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருள்மொழிவர்மன், 30 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறார். முதலாம் ராஜ ராஜ சோழன், மும்முடிச் சோழன் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களால் அழைக்கப்பட்டார். சோழர்களின் ஆட்சியிலேயே ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலம்தான் வெகு சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.
சோழர்களின் கட்டிடக் கலையை உலகத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ‘பெரிய கோயில்’ ராஜ ராஜ சோழனால்தான் கட்டப்பட்டது. பொதுவாக வரலாறுகள் ஆட்சி செய்தவர்களால் எழுதப்பட்டவை. அதனால் மன்னர்களின் புகழ் பாடக்கூடியவையாகத்தான் இருக்கின்றன. ராஜ ராஜ சோழனின் ஆட்சியில் சாதாரண மக்கள் எப்படி இருந்தார்கள், பெண்களின் நிலை எப்படி இருந்தது, சமூகத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்களா என்பதையும் வைத்துதான் ஆட்சியைப் பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டும் என்று நினைக்கிறேன்.
இன்னும் சில வருடங்கள் கழித்து நீங்களே வரலாற்றைத் தேடிப் படித்துப் பாருங்கள், முத்து நவீன். நிச்சயம் புதிய வெளிச்சம் கிடைக்கும்.
பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும், டிங்கு?
–கா. ஹரிணி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
சுவாரசியமான கேள்வி, ஹரிணி! பூமி சுற்றுவதால்தான் இரவு, பகல் ஏற்படுகிறது. பூமி சுற்றாமல் நின்றுவிட்டால், பூமியின் ஒரு பகுதி எப்போதும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கும். இன்னொரு பகுதி இருளாகவே காணப்படும். இரவே வராத பகுதியில் வசிக்கும் உயிரினங்களின் உயிர்க் கடிகாரம் குழப்பமடையும். தொடர்ந்து சூரியன் இருப்பதால் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும்.
நீர்நிலைகள் ஆவியாகிவிடும். இரவில் இரை தேடும் உயிரினங்கள் இரவு வராமல் உணவுக்கு அல்லாடும். இரவு இருக்கும் பகுதியில் சூரிய ஒளி இல்லாததால் தாவரங்களால் உணவு தயாரிக்க இயலாது. காலப்போக்கில் தாவரங்கள் மடிந்துவிடும். தாவரங்கள் மடிந்துவிட்டால், அவற்றை நம்பியிருக்கும் உயிரினங்களும் மடிந்துவிடும். குளிரும் பனியும் அதிகரிக்கும். நீர்நிலைகள் உறைந்து போகும்.
பகலில் இரை தேடும் உயிரினங்கள் பட்டினி கிடக்கும். ஒரு கட்டத்தில் பூமியே வாழத் தகுதியற்ற கோளாக மாறிவிடும். சூரியன் இல்லாவிட்டால் பூமி இல்லை, பூமி சுற்றாவிட்டால் உயிரினங்கள் இல்லை, ஹரிணி.
பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமா, மனிதர்களின் எண்ணிக்கை அதிகமா, டிங்கு?
–பிராங்க் ஜோயல், 4-ம் வகுப்பு,ஜெயின் வித்யாலயா, மதுரை.
பூச்சிகள்தான் அதிக எண்ணிக்கையிலும் வகைகளிலும் காணப்படுகின்றன, ப்ராங்க் ஜோயல். இவற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வண்டு இனங்களில் மட்டும் 23,700 வகைகள் இருக்கின்றன. ஈ, கொசு போன்றவற்றில் 19,600 வகைகளும் எறும்பு, தேனீ, குளவி போன்றவற்றில் 17,500 வகைகளும், வண்ணத்துப்பூச்சி, விட்டில் பூச்சி போன்றவற்றில் 11,500 வகைகளும் இருக்கின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பூச்சி வகைகளின் எண்ணிக்கையும் அதிகம். பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதற்கு ஏற்ப பூச்சிகள் எளிதில் தங்களை மாற்றிக்கொள்கின்றன.