

“அரசே, நம் குறிஞ்சிக் காட்டிற்குப் பெரிய ஆபத்து வந்துவிட்டது. விலங்குகளைப் பிடித்து உண்ணும் மரங்கள் நம் காட்டிற்குள் நுழைந்துவிட்டன. அவை பல விலங்குகளைப் பிடித்து உண்டுவிட்டன” என்று பதற்றத்தோடு சொன்ன கரடியை ஆச்சரியமாகப் பார்த்தது சிங்கராஜா.
“கரடியாரே, என்ன சொல்கிறீர்? மரங்கள், விலங்குகளை உண்ணுமா?” சிங்கராஜா கேட்டது.
“அரசே, மரங்கள் ஒரு இடத்திலேயே நிற்கும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த மரங்கள் அங்குமிங்கும் நகர்ந்து செல்கின்றனவாம்” என்றது கரடி.
“மரங்கள் நடந்து செல்கின்றனவா? எங்கே பார்த்தீர்கள்?” என்று கேட்டது சிங்கராஜா.
“அரசே, சற்று முன்பு சிறுத்தையார் அச்சத்தோடு என்னிடம் ஓடிவந்து மரங்கள் நகர்ந்து சென்றதை, உங்களிடம் சொல்லச் சொன்னார். வேறு காட்டிற்குத் தப்பித்துச் செல்ல இருப்பதாகவும் சொன்னார்” என்றது கரடி.
“அப்படியா? நம் காட்டிலுள்ள விலங்குகள் அனைத்தையும் காப்பாற்றஉடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமே... சிறுத்தையாரை உடனே அழைத்து வாருங்கள்” என்றது சிங்கராஜா.
கரடி தான் வந்த வழியே ஓடிச் சென்று, சிறுத்தையை சிங்கராஜாவிடம் அழைத்து வந்தது.
“சிறுத்தையாரே, ஏதோ மரங்கள் நம் காட்டிற்குள் நுழைந்து பாதி விலங்குகளைப் பிடித்து உண்டுவிட்டதாகக் கரடியாரிடம் சொன்னீராமே?”
“வேட்டையாடும் மரங்களைப் பற்றிக் கரடியாரிடம் நான்தான் சொன்னேன். ஆனால், பாதி விலங்குகளை உண்டுவிட்டதாக நான் சொல்லவில்லை. ஆனால், மரங்கள் விலங்குகளைப் பிடித்து உண்பது உண்மைதான். நரியார் அதைப் பார்த்ததாக என்னிடம் சொன்னார்” என்றது சிறுத்தை.
“ஓஹோ, அப்படி என்றால் நரியை இங்கே அழைத்து வாருங்கள். என்ன நடந்தது என்று விவரமாகத் தெரிந்து கொள்வோம்” என்றது சிங்கராஜா.
சிறுத்தை ஓடிச் சென்று நரியை அழைத்துவந்து சிங்கராஜாவின் முன்னே நிறுத்தியது.
“என்ன நரியாரே, நம் காட்டு விலங்குகளைச் சில மரங்கள் பிடித்து உண்பதாகச் சிறுத்தையாரிடம் சொன்னீராமே. உண்மையா?” என்று கேட்டது சிங்கராஜா.
“அரசே, நம் காட்டின் தெற்குப் பகுதியில் இரண்டு மரங்கள் நகர்ந்து வந்து மாறிமாறி விலங்குகளைச் சாப்பிட்டதாகக் குரங்கார் என்னிடம் சொன்னார். அதைத்தான் நான் சிறுத்தை யாரிடம் சொன்னேன்” என்றது நரி.
“என்ன சொல்கிறீர் நரியாரே, நம் காட்டின் தெற்குப் பகுதியிலா இது நடந்தது? இரண்டு மரங்கள் விலங்குகளைச் சாப்பிடுவதைக் குரங்கார் பார்த்தாரா? அவை என்ன வகை மரங்கள்? விலங்குகளை எப்படிச் சாப்பிட்டன என்று அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமே... உடனே குரங்காரை இங்கே அழைத்து வாருங்கள்” என்று நரியிடம் உத்தரவிட்டது சிங்கராஜா.
நரி குரங்காரை அழைத்து வந்து சிங்கராஜாவின் முன்னே நிறுத்தியது.
“குரங்காரே, இரண்டு மரங்கள் விலங்குகளைப் பிடித்து உண்பதை நீங்கள் பார்த்தீராமே! அதைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றது சிங்கராஜா.
“அரசே, நம் காட்டிற்குள் நுழைந்த இரண்டு மரங்கள் விலங்குகளைச் சாப்பிட்டதாக முயலார் சொன்னார். அதைத்தான் நான் நரியாரிடம் சொன்னேன்” என்றது குரங்கு.
“ஓஹோ! நீங்களும் அதைப் பார்க்கவில்லையா? சரி, அந்த முயலாரை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டது சிங்கராஜா.
சற்று நேரத்தில் குரங்கு முயலை அழைத்து வந்தது.
“முயலாரே, இரண்டு மரங்கள் விலங்குகளைச் சாப்பிட்டதாமே... அது உண்மையா?” என்று கேட்டது சிங்கராஜா.
“ஆமாம் அரசே! நான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன்” என்ற முயல் சிங்கராஜாவை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றது.
“அரசே, சற்று முன்பு நான் இங்கே நின்று கொண்டிருந்தேன். அந்தப் பாறைகளின் மறுபுறம் இரண்டு மரங்கள் நகர்ந்து சென்றன. மரங்களின் மேல்புறம் மட்டுமே தெரிந்தது. அவை முதலில் நீ சாப்பிடு, பிறகு நான் சாப்பிடுகிறேன்” என்று பேசிக்கொண்டதைக் கேட்டேன்” என்று சொன்னது.
முயல் சொன்னதைக் கேட்ட சிங்கராஜாவுக்குக் குழப்பம் ஏற்பட்டது. சிங்கராஜா பாறையின் மறுபக்கம் தாவிச் சென்றது. அங்கே சற்றுத் தொலைவில் நீண்டு வளர்ந்த கொம்புகளுடன் இரண்டு மான்கள் இளைப்பாறிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.
“அன்பர்களே, இரண்டு மரங்கள் விலங்குகளைச் சாப்பிடுவது பற்றிப் பேசிக்கொண்டதாக முயலார் கேட்டாராம். உங்களுக்கு அது பற்றித் தெரியுமா?” என்று மான்களிடம் கேட்டது சிங்கராஜா.
ஒன்றை மற்றொன்று பார்த்துப் புன்னகை செய்துகொண்டன மான்கள்.
“அரசே, அடர்ந்த காட்டுப்பகுதியில் நாங்கள் புல் மேய்ந்துவிட்டு வரும்போது, எங்கள் கொம்புகளில் பசளைக் கொடி சுற்றிக்கொண்டது. அதை அகற்ற நான் என் கொம்பிலுள்ள பசளைக்கொடியை இவனிடம் சாப்பிடச் சொன்னேன். பிறகு அவன் கொம்பிலுள்ள பசளைக்கொடியை நான் சாப்பிடுவதாகச் சொன்னேன்” என்றது ஒரு மான்.
சிங்கராஜாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது.
“பசளைக்கொடி சுற்றிய மானின் கொம்புகளை மட்டும் பார்த்த முயலார், மரங்கள் நகர்ந்து செல்வதாக நினைத்து குரங்காரிடம் சொல்லியிருக்கிறார். குரங்கார் அதை ஊதிப் பெரிதாக்கி நரியாரிடம் சொல்லியிருக்கிறார். இப்படியே ஆளாளுக்கு ஊதிப் பெரிதாக்கிவிட்டீர்கள். வதந்தி எப்படிப் பரவுகிறது பார்த்தீர்களா? இனியேனும் நீங்கள் நேரடியாகப் பார்க்காத விஷயத்தை இப்படிப் பெரிதுபடுத்தி அடுத்தவர் மனதில் பயத்தையும் பதற்றத்தையும் வெறுப்பையும் உருவாக்காதீர்கள்” என்றது சிங்கராஜா.
காட்டு விலங்குகள் அதை ஏற்றுக் கொண்டன.