

ஒருநாள் சூரியனும் சந்திரனும் பூமியைச் சுற்றிப் பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு உதவியாக உதவியாளர் ஒருவரையும் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மூன்று பேரும் காட்டு வழியாக நடந்து வந்தபோது, தரையில் ஒரு முத்து கிடந்தது. உடனே சூரியன் அதை எடுத்தார்.
“இது அபூர்வமான முத்து. இந்த நாட்டு மன்னரின் முத்தாகத்தான் இருக்க வேண்டும். அவர் இந்த வழியே செல்லும்போது முத்து விழுந்திருக்கலாம்” என்றார் சூரியன்.
முத்தை வாங்கிப் பார்த்த சந்திரன், “இது ராணியின் முத்தாகத்தான் இருக்கும். ராணி நடந்து போகும்போது விழுந்திருக்கலாம்” என்றார்.
இருவரும் பேசிக்கொண்டு வருவதைக் கேட்டுக்கொண்டே வந்தார் உதவியாளர்.
“நாங்கள் இருவரும் சொன்னதில் எது சரியான காரணமாக இருக்கும் என்று நீ சொல் பார்க்கலாம்” என்றார் சூரியன்.
“நீங்கள் இரண்டு பேரும் சொன்னது சரியாக இருக்காது. வேறு வழியில் இந்த முத்து இங்கே வந்திருக்கலாம்” என்றார் அந்த உதவியாளர்.
சூரியனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“உன்னை மதித்துக் கருத்துக் கேட்டால், எங்களையே தவறு என்று சொல்வாயா?” என்றார் சூரியன்.
உதவியாளர் அமைதியாக இருந்தார்.
“சரி, இந்த முத்தைப் பற்றி ஊருக்குள் சென்றுவிசாரிக்கலாம். நாங்கள் சொன்னது சரி என்றால்,உன்னைப் பூமியிலேயே விட்டுவிட்டுச் சென்று விடுவோம்” என்றார் சூரியன்.
“ஒருவேளை நான் சொன்னது சரியாக இருந்தால்?” என்று கேட்டார் உதவியாளர்.
“நீ சொல்வதை நாங்கள் இருவரும் செய்வோம்” என்று சொன்னார் சூரியன்.
மூன்று பேரும் ஊருக்குள் நுழைந்தார்கள். ஊரே மிகவும் பரபரப்பாக இருந்தது. இவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால், அரண்மனைக்குச் சென்றார்கள். அங்கும் யாரும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
மன்னரும் அமைச்சர்களும் ஏதோ ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருந்தனர்.
சூரியன் மன்னரை அழைத்து, “என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“ராணிக்கு மயக்கம் வந்துவிட்டது. இன்னும் எழவே இல்லை. அவர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தபோது, முத்து மாலை அறுந்துவிட்டது. அதில் ஒரு முத்தை மட்டும் காணவில்லை. அது மிகவும் அபூர்வமான முத்து. அதான் எல்லாரும் தேடிட்டு இருக்கோம்” என்றார் மன்னர்.
உடனே சூரியன், “இதுவா?” என்று தன் கையில் வைத்திருந்த முத்தைக் காட்டினார்.
“இதேதான். ரொம்ப நன்றி” என்று வாங்கிக் கொண்டு சென்ற மன்னர், ராணியிடம் விஷயத்தைச் சொன்னார். உடனே ராணி மயக்கத்திலிருந்து எழுந்துவிட்டார்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் உதவியாளர் சொன்னது சரி என்று தோன்றியது.
“நீ சொன்னது சரிதான். ஆனால், எப்படித் தோட்டத்திலிருந்த முத்து காட்டுக்கு வந்தது?” என்று கேட்டார் சந்திரன்.
“அதோ பாருங்கள், மயில்கள். அவற்றில் ஒன்றுதான் முத்தை எடுத்துச் சென்று காட்டுப் பாதையில் போட்டிருக்கும்” என்றார் உதவியாளர்.
“அது சரி, உனக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?” என்று கேட்டார் சூரியன்.
“நாம் நடந்துவரும் போது தரையில எந்தத் தடமும் இல்லை. நாம் நடந்துவந்த பாதையில் நம் மூன்று பேரின் தடங்கள் மட்டுமே இருந்தன. அதனால், வேறு யாரும் அந்தப் பக்கம் போகவில்லை. மன்னரும் அரசியும் தேரில்தான் போயிருப்பார்கள். அப்படி என்றால் தேர்த்தடம் இருந்திருக்கும். அதுவும் இல்லை. அதனால்தான் அவர்களால் போட்டிருக்க முடியாது என்றேன்.”
எல்லாம் தமக்குத் தெரியும் என்று நினைத்த சூரியனுக்கும் சந்திரனுக்கும் சங்கடமாகிவிட்டது.
“சரி, உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார் சூரியன்.
“எனக்குக் காசு, பணம் வேண்டாம். நாடு, காடு எல்லாம் வேண்டாம். நானும் எங்களைப் போன்றவர்களும் உங்களுடனேயே எப்போதும் இருக்க வேண்டும்.”
“உனக்கு இப்படி ஒரு ஆசையா? சரி, நீங்கள் அனைவரும் நட்சத்திரங்களாக மாறிவிடுங்கள்” என்றார் சூரியன்.
அன்று முதல் உதவியாளரும் அவரின் உறவினர்களும் இரவு வானில் மின்னிக்கொண்டிருக் கிறார்கள்.