

கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் உள்ள ஆங்கில எழுத்துகள் ஏன் வரிசையாக இருப்பது இல்லை, டிங்கு? - எஸ்.ஜெ.கவின், 8-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.
கணினி விசைப்பலகை, தட்டச்சு விசைப்பலகையைப் பார்த்துதான் உருவாக்கப்பட்டது. 1866இல் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான கிறிஸ்டோபர் லாதம் ஸோலஸ், QWERTY என்கிற அமைப்பில் விசைப்பலகையை உருவாக்கினார்.
வேகமாகத் தட்டச்சு செய்யும்போது, இப்படி அமைக்கப்பட்ட எழுத்துகள், ஒன்றுடன் மற்றொன்று சிக்கிக்கொள்ளாமல் வேலையை எளிதாக்கின. அதனால்தான் கணினி விசைப்பலகையிலும் எழுத்துகளை ABCD என்று அகரவரிசைப்படி அமைக்காமல், தட்டச்சு விசைப்பலகையைப் போலவே QWERTY முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது, கவின்.
மாடு, குதிரைகளின் பாதங்களில் லாடம் அடிப்பது ஏன், டிங்கு? - அ. அருண் பாண்டியன், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் அவற்றின் பாதங்களைப் பாதுகாப்பதற்குக் குளம்புகள் இருக்கின்றன. இவை காடுகளில் தங்களின் தேவைக்காக உணவு தேடி அலைந்தபோது, இந்தக் குளம்புகளின் பாதுகாப்பே பாதங்களுக்குப் போதுமானதாக இருந்தது. காட்டிலிருந்து வந்து மனிதர்களின் வீட்டு விலங்குகளானபோது, இவை வழக்கதைவிட அதிகமாக நடக்கவோ ஓடவோ சுமையைத் தூக்கவோ வேண்டிய சூழல் உருவானது.
அதனால், குளம்புகள் பாதிப்படைந்து, அவற்றால் நடக்க முடியாமல் போனது. எனவே ஓர் அங்குல உயரத்துக்கு இருக்கும் குளம்புகளில் இரும்பாலான லாடத்தை வைத்து, ஆணியால் அடித்துவிடுவார்கள். நம் நகங்களை வெட்டும்போது வலிப்பதில்லை அல்லவா, அதேபோல குளம்புகளில் லாடம் அடிக்கும்போதும் வலிக்காது.
ஓர் அங்குலத்தைத் தாண்டி ஆணி இறங்கினால் வலிக்கும். அதனால், அளந்து பார்த்துதான் லாடத்தை அடிப்பார்கள். நம் கால்களைப் பாதுகாக்க செருப்புகளை அணிவதுபோல மாடு, குதிரைகளின் குளம்புகளைப் பாதுகாக்க லாடங்களை அடிக்கிறார்கள், அருண் பாண்டியன்.