கதை: நட்புக்காக ஏங்கிய நதி

கதை: நட்புக்காக ஏங்கிய நதி
Updated on
2 min read

நதிக்குப் பொங்கல் விடுமுறை முடிந்திருந்தது. நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவள் முகத்தில் தெரிந்தது. சீக்கிரம் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.

“அம்மா, வழக்கமாக வைக்கிறதைவிடக் கொஞ்சம் அதிகமாக முறுக்கு வச்சிடுங்க” என்றாள் நதி.

அம்மா சிரித்தபடியே , “ஸ்கூலுக்குப் படிக்கப் போறீயா, சாப்பிடப் போறீயா?” என்று கேட்டார்.

“ஒரு வாரத்துக்குப் பிறகு என் நண்பர்களைப் பார்க்கப் போறேன். எல்லாருக்கும் முறுக்கு கொடுக்கணும். தனியா எப்படிச் சாப்பிடறது? அதான் கேட்டேன்” என்று நதியும் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“இப்படி எல்லாம் கொடுத்துத்தான் ஏராளமான நண்பர்களைச் சேர்த்து வெச்சிருக்கியா?” என்று மீண்டும் சிரித்தார் அம்மா.

அம்மா கொடுத்த முறுக்கு டப்பாவை வாங்கி, பையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள் நதி.

மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் செல்லும் மகளைக் கண்டு அம்மாவுக்கும் சந்தோஷமாக இருந்தது.

அன்று மாலை பள்ளியிலிருந்து வந்த நதியின் முகம் வாடி இருந்தது. திறக்காத முறுக்கு டப்பாவை உணவு மேஜையில் எடுத்து வைத்தாள். அவள் அம்மா இன்னும் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. ஒரு கதைப் புத்தகத்தோடு பூங்காவுக்குச் சென்றாள்.

அவள் நண்பர்கள் யாரும் அங்கு இல்லை. பூத்துக் குலுங்கும் அந்தப் பெரிய மரத்துக்குக் கீழ் உட்கார்ந்து புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாள். திடீரென்று அந்தப் புத்தகத்திலிருந்து ஓர் அழகான பெரிய பட்டாம்பூச்சி வெளியே வந்தது. அதைப் பார்த்தவுடன் நதியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புத்தகத்தின் மேல் உட்கார்ந்திருந்த பட்டாம்பூச்சி பறந்து அவள் கையில் அமர்ந்தது. அவளைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்த பட்டாம்பூச்சி, திடீரென்று பறக்க ஆரம்பித்தது. அதன் பின்னால் ஓடினாள் நதி. மெதுவாக அவள் கால்கள் தரையிலிருந்து மேலே சென்றன. அவளும் பறக்க ஆரம்பித்தாள்.

“ஐயோ... இது என்ன? பயமா இருக்கு” என்று அலற ஆரம்பித்தாள் நதி. அவள் குரல் பூங்காவில் இருந்த யார் காதுக்கும் கேட்கவில்லை.

“நதி, பயப்படாதே” என்று அந்தப் பெரிய பட்டாம்பூச்சி சொன்னது.

நதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என் பெயர் லில்லி. நான்தான் உன்னைப் பறக்க வச்சேன்” என்றது பட்டாம்பூச்சி.

“ஏன்?”

“பயப்படாம ஜாலியாக இரு. கொஞ்ச நேரத்தில் உனக்கு ஒரு ஆச்சரியம் காத்துட்டு இருக்கு” என்றது பட்டாம்பூச்சி.

நதி இப்போது எல்லாவற்றையும் மறந்து, கீழே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

“என்ன யோசிக்கிற நதி?”

“ஒண்ணும் இல்ல லில்லி. எனக்கும் நிறைய நண்பர்களோடு விளையாட ஆசையா இருக்கு.”

“நல்ல ஆசைதான். விளையாட வேண்டியதுதானே?”

“எனக்குத்தான் நண்பர்கள் இல்லையே, எப்படி விளையாடுவேன்?”

“ஏன்... நண்பர்களுக்குக் கொடுக்கத்தானே இன்னைக்கு ஒரு டப்பா நிறைய முறுக்கு எடுத்துட்டுப் போன?” என்று கேட்டது லில்லி.

“ஆமாம். உனக்கு எப்படித் தெரிந்தது?”

“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ சொல்லு.”

“அவங்க யாரும் என்னோட பேசறது இல்ல. விளையாடுறது இல்ல. முறுக்கு கொடுத்துச் சரிசெய்யலாம்னு நினைச்சேன்” என்றாள் நதி.

“ஏன்?”

“அவங்க யாருக்கும் என்னைப் பிடிக்கலையாம். புதுசா என் வகுப்பில் சேர்ந்த பொண்ணுகூட நான் பேசுறேனாம். பேசினால் தப்பா என்ன? நானும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டேன். ம்...ஹும்...”

“அவங்க உன் நண்பர்களே இல்ல” என்றது லில்லி.

“இல்ல, இல்ல அவங்க என் நண்பர்கள்தாம்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அழகான பூஞ்சோலை வந்தது. இப்போது நதியின் கால்கள் தரையில் இறங்கின.

அந்தப் பூஞ்சோலையில் பெரிய பூக்கள் மின்னின. பூக்களின் மணம் அந்த இடம் முழுவதும் நிரம்பி இருந்தது.

நதியின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. அவளை மேலும் ஆச்சரியப்படுத்துவதுபோல் அந்தப் பூக்களிலிருந்து குட்டி தேவதைகள் வெளியே வந்தன.

“லில்லி, யார் இந்தக் குட்டிப் பெண்?” என்று மஞ்சள் தேவதை ஒன்று கேட்டது.

“இந்தக் குட்டிப் பெண் பேர் நதி. இவ என்னோட தோழி. உங்களை எல்லாம் பார்க்கத்தான் கூட்டிட்டு வந்தேன்” என்றது லில்லி.

“உன் தோழின்னா எங்களுக்கும் தோழிதான்” என்று அந்தத் தேவதைகள் சொன்னார்கள்.

பூக்களால் செய்த கிரீடத்தை நதியின் தலையில் வைத்தார்கள்.

நதிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. “நிஜமா நீங்க எல்லாம் என்னை உங்க தோழியா ஏத்துக்கிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“எங்க எல்லாருக்கும் லில்லி தோழி. லில்லியோட தோழி எங்களுக்கும் தோழிதான்” என்று நீல தேவதை சொன்னது.

அங்கிருந்த தேவதைகள் நதிக்குப் பழம், பூ என்று பரிசுகளைக் கொடுத்தார்கள். தங்களைப் போலவே நதியையும் பறக்க வைத்து விளையாடினார்கள்.

“லில்லி, நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள் நதி.

“ஒண்ணு தெரிஞ்சிக்கோ நதி. உண்மையான நண்பர்கள் உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டாங்க. இங்க பாரு, இந்தத் தேவதைகள் எல்லாம் நீ என்னோட தோழின்னு சொன்னவுடன் எவ்வளவு அன்பா இருக்காங்க! உன்கூட யாரு விளையாடுறாங்களோ அவங்களோடு விளையாடு. உன்னை வேண்டாம்னு சொல்றவங்க பின்னாடி எப்பவும் போகக் கூடாது. சரியா?” என்றது லில்லி.

“இனி நான் அவங்களுக்காக வருத்தப்பட மாட்டேன் லில்லி” என்றாள் நதி.

நன்கு விளையாடிவிட்டு மீண்டும் பூங்காவில் அதே மரத்துக்கு அடியில் வந்து உட்கார்ந்தாள் நதி.

அவள் அடுக்ககத்தைச் சேர்ந்த நண்பர்கள் விளையாட வந்தார்கள்.

“நதி, வா விளையாடலாம் “ என்று அழைத்தார்கள்.

“இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடினாள் நதி. அந்த முறுக்கு டப்பாவை எடுத்துக்கொண்டு மீண்டும் பூங்காவுக்கு வந்தாள். ஆளுக்கு ஒரு முறுக்கைக் கொடுத்தாள். எல்லாரும் சேர்ந்து மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார்கள். லில்லிக்கு நிம்மதியாக இருந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in