

அரேபியாவில் வசிக்கும் காசிம் மிகவும் ஏழ்மையானவர். அவருக்கு மீன்பிடிப்பதுதான் தொழில்.
அன்று காசிம் வழக்கம்போல மீன் பிடிக்கச் சென்றார். அனல் பறக்கும் வெயிலில், பசிக்கும் வயிற்றோடு அவர் வலைவீசினார். ஆனால், ஒரு மீன்கூடச் சிக்கவில்லை. மீண்டும் மீண்டும் நம்பிக்கையோடு முயன்றார். மீன்கள் வலைக்கு வரவே இல்லை.
இறுதியாக ஒருமுறை வலையை வீசிப் பார்க்கலாம். மீன்கள் கிடைக்காவிட்டால் புறப்பட்டு விடலாம் என்று நினைத்து, வலையை வீசினார் காசிம்.
ஒரே ஒரு சிறிய மீன் மட்டுமே வலையில் இருந்தது. இதை விற்றால் என்ன கிடைக்கும்? ஏமாற்றமும் கவலையும் தோன்றியது. காசிம் அந்த மீனை வலையில் இருந்து எடுத்து தண்ணீரில் வீச முயன்றபோது, ஒரு குரல் கேட்டது.
“இந்த மீனைத் தண்ணீரில் விடக் கூடாது. இது என் இரை. இவ்வளவு நேரமாக நான் இதைப் பின்தொடர்ந்தேன். இதை எனக்குக் கொடுங்கள்."
காசிமுக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும் பார்த்தார். யாரும் இல்லை.
“கொஞ்சம் இந்த மரத்தைப் பாருங்கள்” என்று மீண்டும் குரல் வந்தது.
காசிம் குரல் வந்த திசையில் பார்த்தார். அங்கே மரத்தில் தங்க நிறத்தில் ஒரு கிளி அமர்ந்திருந்தது.
“அருகில் வந்து மீனைப் பெற்றுக்கொள்” என்றார் காசிம்.
“கரையில் தூக்கிப் போடுங்கள்” என்றது அந்தத் தங்கக் கிளி.
“என் மீது நம்பிக்கை இல்லையா?” என்ற காசிம், மீனைத் தூக்கி வீசினார்.
சட்டென்று பறந்துவந்து மீனை எடுத்துக்கொண்டது தங்கக் கிளி.
“கவலைப்படாதீர்கள். தங்கத் தீவு மாயக் கோட்டையில் வளர்ந்துவரும் தங்கக் கிளி நான். நாளை முதல் உங்கள் வலையில் நிறைய மீன்கள் சிக்கும்.”
“என்னால் நம்ப முடியவில்லையே, நீ சொல்வது உண்மையா?” என்று சந்தேகத்துடன் கேட்டார் காசிம்.
“உங்களுக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகம் வேண்டாம். நாளை முதல் உங்கள் வறுமை ஒழியும். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் உயரத்துக்குச் செல்வீர்கள். என்னைப் பார்க்க வேண்டும் என்றால், ‘தங்கக் கிளியே வண்ணக் கிளியே என்னிடம் நீ வா வா வா’ என்று மூன்று முறை அழைத்தால் போதும். உடனே வந்துவிடுவேன். அடிக்கடி என்னை அழைக்கவும் கூடாது” என்றது தங்கக் கிளி.
காசிமுக்கு ஒன்றும் புரியவில்லை. கிளி சொல்வது உண்மையா என்றும் தெரியவில்லை. அன்று இரவு முழுவதும் அவருக்குத் தூக்கமே வரவில்லை.
மறுநாள் காலை வழக்கத்தைவிடச் சீக்கிரமாக மீன் பிடிக்கச் சென்றார் காசிம். வலை வீசிய சிறிது நேரத்தில், ஏராளமான மீன்கள் கிடைத்தன. காசிமின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
கிளி சொன்னது போலவே தினமும் மீன்கள் கிடைத்தன. காசிம் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்வந்தரானார்.
அப்போது அந்த நாட்டு சுல்தானின் மகன் நோயால் பாதிக்கப்பட்டான். எவ்வளவு மருத்துவம் செய்தும் அவன் குணமாகவில்லை.
“இந்த நோயைக் குணப்படுத்த ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது” என்றார் வைத்தியர்.
“என்ன வழி? உடனே செய்கிறேன்.”
“அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.”
“எதுவாக இருந்தாலும் கூறுங்கள். அதைக் கொண்டு வந்துவிடுகிறேன்" என்று சுல்தான் வாக்குக் கொடுத்தார்.
“தங்கத் தீவிலிருந்து அவ்வப்போது வந்து செல்லும் தங்கக் கிளி ஒன்றிருக்கிறது. அதன் ரத்தத்தை எடுத்து, ஒட்டகப் பாலில் கலந்து கொடுத்தால் உடனே குணமாகிவிடும்”
உடனே நாடு முழுவதும் சுல்தானின் அறிவிப்பு வெளியானது.
‘தங்கக் கிளியைப் பிடித்து அரண்மனையில் ஒப்படைத்தால் நாட்டின் பாதிப் பகுதியைப் பரிசாக சுல்தான் வழங்குவார்.’
அறிவிப்பைக் கேட்டதும் காசிமுக்கு ஆர்வம் வந்தது.
மறுநாளே சுல்தானின் அரண்மனைக்குச் சென்றார்.
“சுல்தானுக்கு வணக்கம். என்னால் அந்தத் தங்கக் கிளியை வரவழைக்க இயலும். தாங்கள் சொன்னதுபோலவே பாதி நாட்டை எனக்குக் கொடுத்துவிடுவீர்களா?” என்று கேட்டார் காசிம்.
“நான் வாக்கு தவறமாட்டேன். என் மகனின் உயிரைவிட இந்த நாடு எனக்குப் பெரிய விஷயமில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?”
“என்னுடன் நூறு படை வீரர்களை இப்போதே அனுப்புங்கள்.”
உடனே சுல்தான் ஆணையிட்டார்.
காசிம் படைவீரர்களுடன் நீல நதிக்கரைக்குச் சென்றார்.
“நீங்கள் எல்லாரும் புதர்களுக்குள் ஒளிந்து கொள்ளுங்கள். நான் அந்தத் தங்கக் கிளியை அழைக்கிறேன். வந்ததும் நீங்கள் சுற்றி வளைத்துப் பிடித்துக்கொள்ளுங்கள்.”
படைவீரர்கள் ஒளிந்துகொண்டார்கள்.
“தங்கக் கிளியே, வண்ணக் கிளியே வா வா வா” என்று மூன்று முறை அழைத்ததும் தங்கக் கிளி பறந்து வந்தது.
“எப்படி இருக்கிறாய் காசிம்? என்ன உதவி வேண்டும்?” என்று அன்பாகக் கேட்டது தங்கக் கிளி.
காசிம் பதில் சொல்லாமல், சட்டென்று கிளியின் கால்களைப் பிடித்துக்கொண்டார்.
காசிமின் பேராசையை உணர்ந்த தங்கக் கிளி சட்டென்று பறக்க ஆரம்பித்தது.
“ஐயோ... காப்பாத்துங்க... யாராவது காப்பாத்துங்க்” என்று அலறினார் காசிம்.
உடனே படைவீரர் ஒருவர் ஓடிவந்து காசிமின் காலைப் பிடித்துக்கொண்டார். அவரையும் தூக்கிக்கொண்டு தங்கக் கிளி பறக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த மற்றொரு வீரர் பறந்துகொண்டிருந்த வீரரின் காலைப் பிடித்தார். அவரையும் தூக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது தங்கக் கிளி.
இப்படியே நூறு படைவீரர்களையும் காசிமையும் தூக்கிக்கொண்டு மேலே மேலே பறந்து சென்றது தங்கக் கிளி.
எல்லாரும் பயந்து அலறினார்கள். காசிம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார். நீலநதியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. காசிமின் கைகளை விடுவித்தது தங்கக் கிளி.
காசிமும் படைவீரர்களும் ஆற்றில் தொப்பென்று விழுந்தார்கள். நீந்திக் கரை சேர்ந்தார்கள்.
மறுநாள் காசிம் மீன்பிடிக்கச் சென்றார். ஆனால், வலையில்தான் ஒரு மீன்கூட சிக்கவில்லை.
- கதை: சிப்பி பள்ளிப்புரம்
தமிழில்: மூழிக்குளம் இரா. சசிதரன்