பொம்மைகளின் கதை: கவலை போக்கும் முனேகா டபினாஸ்

பொம்மைகளின் கதை: கவலை போக்கும் முனேகா டபினாஸ்
Updated on
1 min read

ரம், கம்பளி நூல், தேவையற்ற வண்ணத் துணி ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் விரல் அளவு பொம்மைகள்தான் முனேகா டபினாஸ். மத்திய அமெரிக்காவில் உள்ள குவாதமாலா நாடுதான் இந்தப் பொம்மைகளின் பூர்விகம். மாயன் ஆதிவாசிகள் அணியும் உடைகளை இந்தப் பொம்மைகளும் அணிந்துள்ளன.

மாயன் இளவரசி எக்ஸ்ம்யூகேன் சூரியக் கடவுளிடமிருந்து சிறப்பு வாய்ந்த ஒரு பொம்மையைப் பெற்றார். அந்தப் பொம்மையை இரவில் தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால் போதும்; அவரது கவலைகள் எல்லாம் காலையில் எழும்போது நீங்கிவிடும். அந்தப் பொம்மைதான் ’முனேகா டபினோஸ்’ என்றும் ஐரோப்பாவில் ’ஒர்ரி டால்ஸ்’ என்றும் குழந்தைகளிடையே பிரபலமாகியுள்ளன.

சோகமாகவும் வருத்தமாகவும் காணப்படும் குழந்தைகளுக்கு இந்தக் ’கவலை போக்கும்’ பொம்மைகள் தரப்படுகின்றன. அந்தக் குழந்தைகள் தங்கள் வருத்தங்கள், அச்சங்களை முனேகா டபினோஸ் பொம்மைகளிடம் சொல்லிவிட்டு, பின்னர் அதனைத் தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அடுத்த நாள் காலை தூங்கி எழும்போது அத்தனை துயரங்களும் அந்தப் பொம்மையால் அகற்றப்பட்டிருக்கும் என்று நம்புகிறார்கள். மெக்சிகோவுக்கும் குவாதமாலாவுக்கும் வரும் சுற்றுலாப் பயணிகள் நினைவுப் பொருளாகவும் குழந்தைகளுக்குத் துணையாகவும் வாங்கிச் செல்லும் மிகப் பிரபலமான பரிசுப்பொருட்கள் இந்தப் பொம்மைகளே!

Doll -2right

இரண்டு சிறிய மரத்துண்டுகளைச் சிறிய கம்பிகளால் சுற்றி இணைத்து, சிலுவை போலப் பிணைப்பார்கள். அதற்குப் பிறகு உடல், கால், தலை என்று துணி மற்றும் நூலைச் சுற்றிச் சுற்றி வடிவம் கொடுப்பார்கள். தலை, முடி, பாதம், கைகளுக்குக் கூடுதலாக வேலைப்பாடு இருக்கும். 6 முதல் 12 பொம்மைகளைச் சேர்த்து சிறிய மரப்பெட்டி அல்லது அழகிய வேலைப்பாடு கொண்ட சுருக்குப்பையில் போட்டுப் பரிசாகக் கொடுக்கிறார்கள்.

பல்குத்தும் குச்சிகள், ஊக்குகள், தீக்குச்சிகள், மெல்லிய கம்பிகள் போன்றவற்றைக் கொண்டும் இந்தப் பொம்மைகளின் உடல்களை உருவாக்கலாம். நீங்களும் இந்த எளிமையான பொம்மையைச் செய்து பார்க்கலாமே!

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in