

முல்லைக் காட்டின் அரசரான சிங்கராஜா அடிக்கடி போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்குவது உண்டு. போட்டியில் வெற்றிபெற்றவருக்குச் சிறந்த பரிசு வழங்குவதோடு, காட்டின் ஏதேனும் ஒரு பகுதிக்கு அதிகாரியாக நியமிப்பதும் உண்டு. அந்தப் பதவி ஓர் ஆண்டு காலம் நீடிக்கும். பிறகு வேறு போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர் அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
அன்று சிங்கராஜாவின் கையில் மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று இருந்தது. அதுவரை முல்லைக் காட்டின் விலங்குகள் அதைப் பார்த்ததே இல்லை.
சிங்கராஜா, “அன்பர்களே, இதோ என் கையில் இருப்பது ஒரு உணவுப் பொருள். இதன் பெயர் மக்காச்சோளம். பக்கத்து நாட்டு அரசர் எனக்குப் பரிசாக அனுப்பி இருக்கிறார். இதில் நானும் கொஞ்சம் தின்று பார்த்தேன். ஓரளவுக்குச் சுவையாக இருக்கிறது. ஆனால், இதை மிகுந்த சுவையுள்ளதாக யார் மாற்றிக்கொண்டு வருவாரோ அவரை நம் காட்டின் தெற்குப் பகுதிக்கு அதிகாரியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றது.
கரடி, நரி, குரங்கு, மான் ஆகிய நான்கும் போட்டியில் கலந்துகொள்ள முன்வந்தன.
உடனே சிங்கராஜா கூடையில் இருந்த மக்காச் சோளங்களை நான்கு பங்குகளாகப் பிரித்து, நான்கு போட்டியாளர்களிடமும் கொடுத்தது.
இரண்டு நாள்களில் கரடி சிங்கராஜாவைத் தேடிவந்தது. கரடியின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது.
“அரசே, நீங்கள் கொடுத்த மக்காச்சோளத்தை இடித்து, அதனுடன் தேனைக் கலந்து, ஒரு தின்பண்டம் செய்து வந்திருக்கிறேன். இதன் சுவை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்” என்றது.
சிங்கராஜா அந்தப் பொட்டலத்தை வாங்கிக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்தது.
“கரடியாரே, இந்தத் தின்பண்டம் சுவையாகத்தான் இருக்கிறது. இங்கே நிற்பவர்கள் அனைவருக்கும் இதைக் கொடுங்கள். மற்ற மூன்று போட்டியாளர்களின் சுவையையும் பார்த்துவிட்டு முடிவு எடுப்போம்” என்றது சிங்கராஜா.
கரடி தான் கொண்டு வந்ததை மற்ற விலங்குகளுக்கும் உண்ணக் கொடுத்தது.
சில நாள்களில் நரி ஒரு பெரிய பொட்டலத்துடன் சிங்கராஜாவிடம் வந்தது.
“அரசே, நான் மக்காச் சோளத்துடன் உப்பு சேர்த்து தின்பண்டம் செய்துகொண்டு வந்திருக் கிறேன். இதன் சுவை பற்றிச் சொல்லுங்கள்” என்று தன் கையிலிருந்த பொட்டலத்தைக் கொடுத்தது நரி.
சிங்கராஜா அதிலிருந்து கொஞ்சம் தின் பண்டத்தை எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்தது.
“நரியாரே, நீங்கள் கொண்டுவந்த தின்பண்டமும் சுவையாகத்தான் இருக்கிறது. இதை மற்றவர் களுக்கும் உண்ணக் கொடுங்கள். இன்னும் இரண்டு போட்டியாளர்களும் வந்துவிடட்டும்” என்றது சிங்கராஜா.
நரி தான் கொண்டுவந்த தின்பண்டத்தை மற்ற விலங்குகளுக்கும் கொடுத்தது.
இரண்டு நாள்கள் கழிந்தன.
குரங்கு ஒரு பெரிய பொட்டலத்துடன் சிங்கராஜாவைத் தேடி வந்தது.
“அரசே, நான் மக்காச்சோளத்தை சோளப்பொரியாகக் கொண்டு வந்திருக்கிறேன். சுவை எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்” என்றது குரங்கு.
சிங்கராஜா சோளப்பொரியைச் சாப்பிட்டுப் பார்த்தது.
“குரங்காரே, மக்காச்சோளத்தைப் புதுமையான முறையில் உணவாக மாற்றி இருக்கிறீர்கள். இதன் சுவை நன்றாகவே இருக்கிறது. இன்னும் மீதமிருக்கிற ஒரு போட்டியாளரும் வந்துவிடட்டும். அதன் பிறகு தீர்ப்பைச் சொல்லிவிடலாம். சோளப்பொரியை மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்” என்றது சிங்கராஜா.
குரங்கும் தான் கொண்டு வந்த சோளப்பொரியை மற்ற விலங்குகளுக்கும் உண்ணக் கொடுத்தது.
ஏறக்குறைய பத்து நாள்கள் கடந்தன. மறுநாள் நான்காவது போட்டியாளரான மான் சிங்கராஜாவிடம் வந்தது. மானின் கையில் உணவுப் பொட்டலம் எதுவுமே இல்லை. அதைக் கண்ட சிங்கராஜாவுக்கு வியப்பாக இருந்தது.
“மானே, போட்டியில் கலந்துகொள்ளப் போவதாகச் சொன்னீர். இப்போது வெறுங்கையுடன் வந்து நிற்கிறீர். என்ன ஆயிற்று?” என்று கேட்டது சிங்கராஜா.
“அரசே, என்னுடன் வர முடியுமா?” என்று கேட்டது மான்.
“சோளத்தைச் சமைத்து அங்கேயே வைத்துவிட்டு வந்தீரா? சரி, நானே வருகிறேன்” என்று சொன்ன சிங்கராஜா, மானுடன் சென்றது. சிங்கராஜாவின் பின்னாலேயே மற்ற விலங்குகளும் சென்றன.
அங்கே ஒரு பரந்த நிலத்தில் சிறுசிறு செடிகள் வரிசையாக முளைத்து நிற்பதை, சிங்கராஜாவுக்குக் காட்டியது மான்.
“அரசே, நீங்கள் கொடுத்த மக்காச்சோளம் தரத்தில் சிறந்தது. அதன் விதைகளை நட்டு வைத்தால், அவை பல மடங்கு விளைச்சலைத் தரும். அதனால், அவற்றை இந்த வயலில் விதைத்துவிட்டேன். அவைதான் சிறு செடிகளாக முளைத்து நிற்கின்றன. இன்னும் ஒரு மாதத்தில் நன்றாக விளைந்துவிடும்” என்று சொன்னது மான்.
சிங்கராஜா, “போட்டியாளர்களே, இந்தப் போட்டியின் தீர்ப்பை நான் சொல்லப் போவதில்லை. நீங்கள் மக்காச்சோளத்தில் செய்து கொண்டுவந்த தின்பண்டங்களை அனைவரும் உண்டார்கள். அவர்களே தீர்ப்பு சொல்லட்டும்” என்றது.
“அரசே, கரடியாரும் நரியாரும் குரங்காரும் கொண்டு வந்த தின்பண்டங்கள் சுவையாகவே இருந்தன. ஆனாலும் அவை நம் எல்லாருடைய ஒரு வேளை பசியைக்கூடத் தீர்க்கவில்லை. ஆனால் மான், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்து, மக்காச்சோளத்தை விதைத்திருக்கிறது.
அவை விளைந்து நம் எல்லாருடைய பசியையும் பல நாள்கள் போக்கும். கூடவே மக்காச்சோள விதைகளையும் தரும். பசித்த வேளையில் கிடைக்கும் உணவுதானே மிகுந்த சுவையுடைய உணவு! அந்த வகையில் மக்காச்சோளத்தை மான்தான் மிகுந்த சுவையுள்ளதாக மாற்றியிருக்கிறது” என்று விலங்குகள் அனைத்தும் ஒருமித்த குரலில் தீர்ப்பை அளித்தன.
போட்டியாளர்கள் மட்டுமல்ல, சிங்கராஜாவும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது.