

அன்று டாமி மகிழ்ச்சியாக இருந்தது. அது தன் வாலை ஆட்டிக்கொண்டு குழந்தைகளுக்குப் பின்னால் ஓடியது.
இப்படி ஒவ்வொரு மாதமும் விடுமுறை இருந்தால் எப்படி இருக்கும்! இது என்ன மாதம் என்று யோசித்தது. அதற்குத் தெரியவில்லை.
டாமிக்கு மேலே தேனீ பறந்தது.
“தேன் குடிக்கும் தேனீயே, இது என்ன மாதம்?” என்று கேட்டது டாமி.
“எனக்குத் தெரியலையே! நீ பூவைக் கேள்.”
பூவிடம் சென்ற டாமி, “தேன் குடிக்கும் தேனீ, தேனீ மொய்க்கும் பூவே, இது என்ன மாதம்?” என்று கேட்டது.
“எனக்குத் தெரியலையே, என்னை வளர்க்கும் பாட்டியிடம் கேள்.”
டாமி பாட்டியிடம் சென்று, “தேன் குடிக்கும் தேனீ, தேனீ மொய்க்கும் பூ, பூச்செடியை வளர்க்கும் பாட்டியே, இது என்ன மாதம்?" என்று கேட்டது.
“எனக்குத் தெரியலையே, என்னை மணந்த தாத்தாவிடம் கேள்.”
டாமி தாத்தாவிடம் சென்று, “தேன் குடிக்கும் தேனீ, தேனீ மொய்க்கும் பூ, பூச்செடியை வளர்க்கும் பாட்டி, பாட்டியை மணந்த தாத்தாவே, இது என்ன மாதம்?” என்று கேட்டது.
“எனக்குத் தெரியலையே, அந்த ஆட்டிடம் கேள்.”
டாமி அருகில் இருந்த ஆட்டிடம் சென்று, “தேன் குடிக்கும் தேனீ, தேனீ மொய்க்கும் பூ, பூச்செடியை வளர்க்கும் பாட்டி, பாட்டியை மணந்த தாத்தா, தாத்தா மேய்க்கும் ஆடே, இது என்ன மாதம்?” என்று கேட்டது.
அப்போது, ஆடு பூச்செடியைச் சாப்பிட முயன்றது.
உடனே தாத்தா கம்பால் விரட்டினார்.
ஆடு, “ம்மே... ம்மே...” என்று கத்திக்கொண்டு ஓடியது.
“ஓ, இது மே மாதமா?” என்று டாமி மகிழ்ச்சி அடைந்தது.
தாத்தாவிடம் சென்று, “பாட்டியை மணந்த தாத்தாவே, நீங்கள் மேய்க்கும் ஆடு சொன்னது, இது மே மாதம்” என்றது.
“அப்படியா!" என்றார் தாத்தா.
பிறகு பாட்டியிடம் சென்று, “பூ வளர்க்கும் பாட்டியே, பாட்டியை மணந்த தாத்தா, தாத்தா மேய்க்கும் ஆடு சொன்னது, இது மே மாதம்” என்றது.
“ஓ” என்றார் பாட்டி.
பூவிடம் சென்ற டாமி, “தேனீ மொய்க்கும் பூவே, பூச்செடி வளர்க்கும் பாட்டி, பாட்டியை மணந்த தாத்தா, தாத்தா மேய்க்கும் ஆடு சொன்னது, இது மே மாதம்” என்றது.
அருகில் இருந்த தேனீயிடம் திரும்பிய டாமி, “தேன் குடிக்கும் தேனீயே, தேனீ மொய்க்கும் பூ, பூச்செடி வளர்க்கும் பாட்டி, பாட்டியை மணந்த தாத்தா, தாத்தா மேய்க்கும் ஆடு சொன்னது, இது மே மாதம்” என்றது.
மே மாதம் குழந்தைகள் வீட்டில் இருப்பார்கள், தன்னுடன் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள் என்று டாமி நினைவில் வைத்துக்கொண்டது.