

யார் அந்த மர்ம மனிதன்?
உதயசங்கர், இளையோர் இலக்கியம்
தமிழ்நாட்டின் பெரும் விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரை அடக்கி ஒடுக்கிய ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார். அவரது போராட்டம் தொடர்பாக மாறுபட்ட விஷயங்கள் பரப்பப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில், வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து பதின்வயதினர் தெரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நாவல். நடந்த விஷயங்களை மாற்றாமலும் அதே நேரம் சுவாரசிய மான கதையாகவும் தந்திருக்கிறார் உதயசங்கர்.
அன்பின் வண்ணங்கள்
கொ.மா.கோ.இளங்கோ, இயல்வாகை
கோவன் என்றொரு சிறுவன், அவனுக்குப் பார்வை கிடையாது. நண்பர்களுடன் காட்டுக்குச் செல்கிறான். அங்கு தான் கேட்கும் ஒவ்வொரு சத்தத்தின் வழியாகவும் அந்தக் காட்டை உணர்ந்துகொள்கிறான். பார்வை இருப்பவர்களால் மட்டும்தான் இயற்கைக் காட்சிகளையும், காட்டையும், நிறங்களையும் உள்வாங்கிக்கொள்ள முடியுமா? அவசியமில்லை, கோவன் போன்றவர்களாலும் நிறத்தைக் காண முடியும் என்கிறது இந்தக் கதை.
கேள்வி கேட்டுப் பழகு
சக.முத்துக்கண்ணன், ச.முத்துக்குமாரி, புக்ஸ் ஃபார் சில்ரன்
குழந்தைகள் என்றால் கேள்விகள். கேள்விகள் இன்றி எந்த ஒரு குழந்தையையும் நம்மால் காண முடியாது. தங்கள் கேள்விகள், அதன் மூலம் கிடைக்கும் பதில்கள் வழியாகவே குழந்தைகள் இந்த உலகைப் புரிந்துகொள்கிறார்கள், தங்கள் உலகுக்கு வடிவம் கொடுக்கிறார்கள். ஆசிரியர்களும் பெற்றோரும் கேள்வி கேட்பதை ஏன் ஊக்குவிக்க வேண்டும் என்பதைப் பல்வேறு செயல்பாடுகள் வழியாக இந்த நூல் விளக்குகிறது. குழந்தைகளைக் கேள்வி கேட்கவும், அதற்கு பதில் தேடவும் ஊக்கப்படுத்துகிறது.
ஒரு கத சொல்லுங்க மாமா
நாணற்காடன், நம் தமிழ் கிட்ஸ்
கரோனா பொது முடக்கக் காலத்தில் இருந்து கடந்த ஆண்டுவரை எழுத்தாளர் நாணற்காடன் எழுதிய குழந்தைகளுக்கான கதைகளின் தொகுப்பே இந்நூல். 39 கதைகளைக் கொண்ட இந்த நூல் சற்றே பெரியது. குழந்தைகள் கதை கேட்பது போலவும், அதற்கு எழுத்தாளர் கதை சொல்வது போலவும் கதைகள் அமைந்துள்ளன.
மீளும் நிறங்கள்
பி.வி.சுகுமாரன் தமிழில்: யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன்
ஒற்றைப் பெற்றோர்/தனிப் பெற்றோர் என்பது நம் காலத்தின் பெரும் சிக்கல். இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் குழந்தை கள். இந்தப் பின்னணியில் பவித்ரா என்கிற பதின் வயதுப் பெண்ணின் பார்வையிலிருந்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார் பி.வி.சுகுமாரன். பிரச்சினைகளைக் கண்டு விலகுவதோ அதிலேயே உழல்வதிலேயோ தீர்வு இல்லை. தனிநபராகவும் சமூகத்துக்கும் அர்த்தமுள்ள வகையில் வாழ்வதற்கான பார்வையே நம் எல்லாருக்கும் தேவை என்கிறது இந்த நாவல்.
16 படங்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்
சத்யஜித் ரே திரைப்பட மன்றத்தின் மாணவர்கள் தாங்கள் பார்த்த திரைப்படங்கள், குறும்படங்கள் குறித்துக் கட்டுரை களாகவும் மொழிபெயர்ப்பாகவும் ஓவியமாகவும் எழுதியுள்ளனர். அப்பாஸ் கிரயோஸ்தமியின் 'ஹோம் ஒர்க்' படத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். திரை அனுபவத்தை விமர்சனமாக, உரையாடலாக, மனப்பதிவாக எழுதியுள்ளனர். ஏற்கெனவே 'என் கனவின் கதை' என்கிற கதைத் தொகுப்பையும் இந்த மாணவர்கள் எழுதியுள்ளனர்.
கழுதை வண்டி
ஆயிஷா இரா.நடராசன், புக்ஸ் ஃபார் சில்ரன்
அறிவுச்சுரங்கங்களான புத்தகங்கள், நூலகங்கள் பற்றி நமக்குத் தெரியும். அதே நேரம் புத்தகங்களையும் நூலகங்களையும் இந்தச் சிறார் நாவல் அணுகியுள்ள விதம் சற்றே வித்தியாசமானது. பதின்வயதினரின் மாறுபட்ட வாசிப்புக்கு இந்த நாவல் ஒரு புதிய சாளரத் திறப்பாக அமையும்.
குழந்தை இலக்கிய வரலாறு
டாக்டர் பூவண்ணன், மணிவாசகர் பதிப்பகம்
தமிழ்ச் சிறார் இலக்கியம் கடந்த நூற்றாண்டில் செழிப்பாக வளர்ந்திருந்தது. சிறார் இதழ்கள், சிறார் நூல்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியான, கொண்டாடப்பட்ட காலம் அது. அந்தக் காலத்துச் சிறார் எழுத்தாளர்கள், நூல்கள், இதழ்கள் குறித்து பலரும் அறியாத தகவல்களுடன் வரலாற்றைத் தொகுத்தவர் டாக்டர் பூவண்ணன். அவர் எழுதிய முக்கியமான இந்த நூல் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது.
ஏவூர்திபெ.சசிக்குமார், அறிவியல் வெளியீடு
மிதிவண்டி, தொடர் வண்டி, விமானம், கப்பல், ஏவூர்தி போன்ற பயண வாகனங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் முக்கிய தகவல்கள், அறிவியல் அம்சங்கள் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயந்திரமும் இயங்கும் முறையும் அதன் அறிவியல் பின்னணியும் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.
ஓங்கில் கூட்டம் வெளியீடுகள்
‘பஞ்சு மிட்டாய்’ பிரபு எழுதிய ஒலாடா – ஒரு சுதந்திர அடிமையின் போர்க் குரல், சாவித்திரியின் பள்ளி, இ.பா.சிந்தன் எழுதிய பல்வங்கர் பலூ, நாராயணி சுப்ரமணியன் எழுதிய ஆழ் கடல், சாதத் ஹசன் மண்டோ எழுதி உதயசங்கர் மொழிபெயர்த்த தோபா தேக் சிங் – ரொக்கேயா பேகம் எழுதி திவ்யா பிரபு மொழிபெயர்த்த சுல்தானாவின் கனவு, ராஜேஸ் கனகராஜன் எழுதிய சாக்லேட்டி (இளையோருக்கான கவிதைகள்) உள்ளிட்ட பதின் வயதினரை மையப்படுத்திய தமிழ் நூல்கள் இரண்டாவது ஆண்டாக அச்சுப் புத்தகங்களாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.