

பாரிஸியஸ் அழகான தீவு. அங்கே ஏராளமான பறவைகள் வாழ்ந்துவந்தன. அவற்றில் பெரும்பாலான பறவைகளால் பறக்க இயலாது. அந்தத் தீவின் மிக அழகான பறவை டோடோ. மிக அழகான மலர்களைச் சுமந்து நிற்கும் மரம் கல்வாரியா. அவற்றின் பழங்கள் மிகவும் சுவையானவை. டோடோ பறவைகள் கல்வாரியா மரங்கள் இருக்கும் பகுதியில்தான் வாழும். கல்வாரியா பழங்களைச் சாப்பிடுவதால்தான் தாங்கள் இவ்வளவு வலிமையாக இருக்கிறோம் என்று டோடோ பறவைகள் எண்ணிக்கொண்டிருந்தன.
“உங்களால்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக் கிறோம். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. நீங்கள் எங்கள் தேவதைகள்” என்று கல்வாரியா மரங்களைப் பார்த்து டோடோ பறவைகள் கூறிவந்தன. அந்தத் தீவிலிருந்த ஏராளமான பறவைகளுக்குக் கல்வாரியா மரங்களைப் பிடிக்கும். கல்வாரியாவோடு எப்போதும் அன்பாகவும் நட்பாகவும் இருந்தன.
அப்போது தீவுக்குப் புதிதாக மானிஷ் என்கிற விலங்கு வந்தது. தீவில் இருந்த ஆக்குப் பறவைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. முதலில் ஓர் ஆக்குப் பறவையைப் பிடித்துச் சாப்பிட்டது மானிஷ். அதன் சுவை மிகவும் பிடித்துவிட்டதால், தொடர்ந்து அவற்றைப் பிடித்துச் சாப்பிட ஆரம்பித்தது. பக்கத்துத் தீவில் இருந்த தன் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வந்தது மானிஷ்.
ஒரு நாள், “என் அருமை பறவைகளே, நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மானிஷுகளை இந்தத் தீவிலிருந்து விரட்டி அடியுங்கள். அவற்றால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும்” என்று எச்சரித்தன கல்வாரியா மரங்கள். “ஆக்குப் பறவைகளைத்தானே சாப்பிடுகின்றன? எங்களுக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே” என்றன மற்ற பறவைகள்.
வெகு விரைவில் ஆக்குப் பறவைகளே அந்தத் தீவில் இல்லாமல் அழிந்துவிட்டன. அடுத்து மோவோ பறவைகளைக் குறிவைத்தன. வெகு விரைவில் மோவோக்களும் அழிந்துவிட்டன.
கல்வாரியா மரங்களுக்குக் கவலையாக இருந்தது. மீண்டும் பறவைகளை அழைத்து, “மானிஷுகளை உடனே துரத்துங்கள். இல்லை என்றால் ஆக்கு, மோவோ போல் நீங்களும் அழிந்துபோவீர்கள். உங்களை எல்லாம் இழந்துவிட்டு நாங்கள் மட்டும் மகிழ்ச்சியாக வாழ முடியுமா?” என்று கேட்டன.
ஆனால், இப்போதும் ஏனோ மற்ற பறவைகள் கல்வாரியா மரங்கள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. தங்களுக்குப் பிரச்சினை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தன.
அந்த நேரத்தில்தான் டோடோ, மானிஷுகளின் பார்வையில் பட்டது. ஆனால், வலிமையான டோடோ பறவைகளை மானிஷுகளால் எளிதில் வேட்டையாட இயலவில்லை. அதனால் நட்பாகப் பேசி, நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு, வேட்டையாட முடிவெடுத்தன. கல்வாரியா மரங்கள் மானிஷுகளின் சூழ்ச்சியை அறிந்துகொண்டன. டோடோ பறவைகளை அழைத்து, எச்சரித்தன.
“உங்கள் மீது இந்தத் தீவே அன்பாக இருக்கிறது. ஆனால், எங்கள் மீது மானிஷுகள் மட்டுமே அன்பாக இருக்கின்றன. நீங்கள் சொல்வதை எங்களால் நம்ப முடியவில்லை” என்று சொல்லிவிட்டன.
கல்வாரியா மரங்களுக்குக் கவலையாக இருந்தது. டோடோக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே சென்றது. டோடோ பறவைகள் கல்வாரியா மரங்களின் எச்சரிக்கையை மானிஷுகளிடம் தெரிவித்தன. உடனே மானிஷுகளுக்குக் கல்வாரியா மரங்கள் மீது கோபம் வந்தது.
டோடோக்களின் எச்சத்தில் இருந்து விழும் கல்வாரியா விதைகள் அனைத்தும் ஆரோக்கியமான மரங்களாக முளைக்கின்றன என்கிற விஷயம் மானிஷுகளுக்குத் தெரிந்தது.
“இத்தனை நாள்களாக நீங்கள் கல்வாரியாவைத் தேவதை என்றும் உங்களை வாழ வைப்பவர்கள் என்றும் கூறிக்கொண்டிருந்தீர்கள். ஆனால், உங்களால்தாம் கல்வாரியா மரங்களின் அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும். நீங்கள் இல்லை என்றால் அந்த இனமே அழிந்துவிடும்.
உங்கள் எச்சத்தில் விழுந்த விதைகள் மட்டுமே முளைக்கும் தகுதி பெற்றவை. மற்றவை இந்தப் பூமியில் விழுந்தாலும் ஆரோக்கியமான மரங்களாக உருவாகாது” என்று டோடோக்களிடம் மானிஷுகள் கூறின.
“அட, இந்த விஷயம் தெரியாமல் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோமே... கல்வாரியா பழங்களால்தாம் நாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்று தவறாக எண்ணிவிட்டோம். இனி கல்வாரியா மரங்கள் சொல்வதைக் கேட்க மாட்டோம்” என்றன டோடோக்கள்.
மானிஷுகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. டோடோக்கள் மானிஷுகளை முழுமையாக நம்ப ஆரம்பித்தன. மானிஷுகள் தொடர்ந்து டோடோக்களை வேட்டையாடிவந்தன.
எண்ணிக்கை வெகுவாகக் குறைவதை அறிந்து டோடோக்கள் அறிந்து அதிர்ச்சியடைந்தன. கல்வாரியா மரங்களிடம் சென்று தங்களை மன்னிக்கும்படி வேண்டின.
“ஆக்குப் பறவைகளுக்கு மானிஷுகளால் ஆபத்து வந்தபோதே நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக, மானிஷுகளை விரட்டியிருந்தால், இன்று உங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. எங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைத்ததால்தான் இன்று ஆபத்தில் சிக்கிக்கொண்டீர்கள். இப்போதாவது அனைவரும் சேர்ந்தால், மானிஷுகளை இந்தத் தீவிலிருந்து விரட்டிவிடலாம். உடனே புறப்படுங்கள்” என்றன கல்வாரியா மரங்கள்.
உண்மையை உணர்ந்த பறவைகள் அனைத்தும் சேர்ந்து சில நாள்களில் மானிஷுகளை விரட்டியடித்தன. இப்போது மீண்டும் பாரிஸியஸ் தீவில் மகிழ்ச்சி வர ஆரம்பித்திருக்கிறது.