Last Updated : 24 Jan, 2018 11:11 AM

 

Published : 24 Jan 2018 11:11 AM
Last Updated : 24 Jan 2018 11:11 AM

சந்திர கிரகணம்: நிழலில் மறையும் நிலவு

சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் அப்படி ஒன்றும் அதிசயம் இல்லை. அவை அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனாலும் கிரகணம் வந்தால் அதை ஆவலுடன் பார்க்கத்தான் செய்கிறோம். ஏனெனில் அது இயற்கையில் தோன்றும் அதிசயக் காட்சி!

இந்த மாதம் 31 ந் தேதியன்று இரவு முழுச் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. அன்றைய தினம் பவுர்ணமி. அன்று கிழக்கு திசையில் முழு நிலவு உதயமாகும் போதே கிரகணம் பிடித்த நிலையில்தான் அது வெளிப்படும்.

ஆனால் அடி வானில் சந்திரன் உதயம் ஆவதைப் பெரும்பாலும் காண முடியாது. அடிவானம் அனேகமாக மேகம் சூழ்ந்ததாக இருக்கும். சந்திரன் சற்று உயரே வந்த பிறகே கிரகணம் பிடித்த நிலையில் சந்திரனைக் காண முடியும். முழுச் சந்திர கிரகணம் இரவு சுமார் 7-30 வரை நீடிக்கும் என்பதால், வானம் தெளிவாக இருந்தால் நன்கு தெரியும்.

24CHSUJ_LUNAR2சந்திர கிரகணம் என்பது என்ன?

சூரியனால் பூமிக்கு நிழல் தோன்றுகிறது. அந்த நிழல் சந்திரன் மீது விழுகிறது. நீங்கள் டியூப் லைட்டுக்கு நேர் கீழே உட்கார்ந்து பாடம் படிக்க முற்பட்டால் உங்கள் தலையின் நிழல் புத்தகத்தின் மீது விழும். அதுபோல பூமியின் நிழலானது சந்திரன் மீது விழுகிறது. சந்திரன் மீது பூமியின் நிழல் விழுவது ஏன்? சந்திரன் பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிறது.

பவுர்ணமி அன்று சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை கிட்டதட்ட ஒரே கோட்டின் மீது அமைகின்றன. அப்போது பூமியின் ஒரு புறத்தில் சூரியனும் மறு புறத்தில் சந்திரனும் இருக்கும். சூரியனின் ஒளி சந்திரன் மீது விழும்போது பூமியில் இரவாக உள்ள பகுதிகளில் இருப்போருக்குச் சந்திரன் பவுர்ணமி நிலவாகத் தெரிகிறது.

சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது. சந்திரன் மீது விழும் சூரிய ஒளியைச் சந்திரன் பிரதிபலிக்கிறது. இதுவே நமக்கு நிலவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூமியானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே அமைந்திருக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூமியின் நிழல் சந்திரன் மீது விழ, சந்திர கிரகணம் ஏற்பட வேண்டுமே? ஆனால் அப்படி ஏற்படுவதில்லை. சந்திரனின் சுற்றுப்பாதைச் சாய்வாக இருப்பதே அதற்குக் காரணம்.

அதாவது பூமியின் நிழல் விழாத வகையில் சந்திரன் அந்த நிழல் பகுதிக்கு மேலே அமைந்திருக்கும். அல்லது அந்த நிழல் பகுதிக்குக் கீழே இருக்கும். எப்போதாவது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் பவுர்ணமி அன்று ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும். அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதன் காரணமாகச் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிழல் பகுதியின் நட்ட நடுவில் சந்திரன் இருக்க நேர்ந்தால் பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைக்கிறது. அது முழுச் சந்திர கிரகணம். அப்படியின்றி பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதி மீது மட்டும் விழலாம். அது பகுதி சந்திர கிரகணம்.

பூமியும் நகர்ந்துகொண்டிருக்கிறது. சந்திரனும் நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே சந்திரன் பூமியின் நிழல் பகுதியைத் தாண்டிய பின், கிரகணம் நீங்கி பவுர்ணமி நிலவு வழக்கமான பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

முழுச் சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது சூரிய ஒளி விழ முடியாமல் பூமி குறுக்கே நிற்க நேரிடுகிறது. பூமியின் நிழல்தான் சந்திரன் மீது விழுகிறது. சந்திரன் கருமையாகக் காட்சி அளிக்க வேண்டும். ஆனால் முழுச் சந்திர கிரகணத்தின்போது சந்திரன் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். இதற்குக் காரணம் உண்டு.

சூரியனிலிருந்து வரும் ஒளியானது பூமியின் காற்று மண்டலம் வழியே செல்லும்போது சற்று வளைகிறது. இப்படி வளையும் ஒளி சந்திரன் மீது விழுகிறது. அப்போது மேலும் ஒரு விளைவு ஏற்படுகிறது. சூரிய ஒளி என்பது ஏழு நிறங்கள் அடங்கியது. அந்த ஏழு நிறங்களில் ஊதா, நீலம் போன்ற நிறங்கள் பூமியின் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டும் சந்திரனில் விழுகின்றன. எனவேதான் முழுச் சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.

இதுக்கு முன்னர் 2011-ம் ஆண்டில் டிசம்பர் மாதம் முழுச் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதுக்குப் பிறகு ஜூலை மாதம் 27 ந் தேதி இரவில் இதே போன்று முழுச் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. அந்தச் சந்திர கிரகணத்தைப் பார்க்க வேண்டும் என்றால் தூங்காமல் நள்ளிரவுவரை விழித்திருக்க வேண்டும். இப்போதைய கிரகணம் எல்லோரும் காண்கிற வகையில் வசதியான நேரத்தில் நிகழ இருக்கிறது. கண்டு களியுங்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x