வியப்பூட்டும் இந்தியா: கும்ஹார் மண்பாண்டங்கள்

வியப்பூட்டும் இந்தியா: கும்ஹார் மண்பாண்டங்கள்
Updated on
2 min read

ரபரப்பான தலைநகர் டெல்லியிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது கும்ஹார் கிராமம். இங்குள்ள மக்களுக்கு மண்பாண்டங்கள் செய்வதுதான் தொழில். இந்தக் கிராமத்தில் வசிக்கும் 700 குடும்பங்களும் விதவிதமான கண்கவர் மண்பாண்டங்களைச் செய்து வருகிறார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் மண்பாண்டங்கள் செய்யும் ஒரே இடம் கும்ஹார்தான்!

40 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் உள்ள அல்வார் என்ற வறண்ட கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் இந்த மக்கள். இப்போது தங்களின் கற்பனைத் திறனாலும் கடின உழைப்பாலும் வெளிநாடுகளுக்கும் மண்பாண்டங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள்!

பானை செய்வதற்கான களிமண்ணை ஹரியானாவிலிருந்து கொண்டுவருகிறார்கள். மண்பாண்டங்கள் செய்வதற்கான மண்ணைத் தயார் செய்வது பெண்களின் வேலை. சக்கரங்களில் வைத்து உருவங்களைச் செய்வது ஆண்கள் வேலை.

கும்ஹாரில் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் களிமண் கொட்டிக் கிடக்கும். மண்ணை உடைத்து, சலிக்கிறார்கள். பிறகு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, அரை நாள் முழுவதும் ஊறவைக்கின்றனர். மீண்டும் ஒருமுறை காலால் பிசைகிறார்கள். வெண்ணை போன்று மென்மையாகக் களிமண் மாறும்.

தயார் செய்யப்பட்ட அந்தக் களிமண்ணை சக்கரங்களிலோ அச்சிலோ வார்த்து விதவிதமான மண்பாண்டங்கள் செய்கின்றனர். காய்ந்த பிறகு சூளையில் வைத்து 4 முதல் 5 மணி நேரம் வரை சுடுகின்றனர். பிறகு அவற்றின் மீது அழகான சாயம் பூசுகின்றனர்.

அகல் விளக்கு, தண்ணீர்ப் பானை, அலங்காரங்கக் கிண்ணம், பூந்தொட்டி, பூச்சாடி, சுவரில் தொங்கும் அலங்கார பொருட்கள், தலைவர்களின் சிலைகள் என்று வெவ்வேறு அளவுகளில் செய்கிறார்கள். தீபாவளி பண்டிகையின்போது ஒரு நாளைக்கு 3000 - 4000 அகல் விளக்குகள் தயாரிக்கின்றனர். இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளான கனடா, இலங்கை, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இவற்றை அனுப்புகின்றனர்.

இந்த மக்களின் வீடுகளும் மண்ணால்தான் கட்டப்பட்டுள்ளன. உடைந்த பானைகளை அடுக்கி, மண் சேற்றால் பூசி, சுவர்களாக்கி வீடு கட்டுகின்றனர். வெளியிலிருக்கும் வெப்பத்தைவிட, வீட்டுக்குள் வெப்பம் குறைவாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் இவர்களிடம் உரையாடலாம். பானை செய்யக் கற்றுக்கொள்ளலாம். மிகச் சிறந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது கும்ஹார்.

தொடர்புக்கு: mangai.teach@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in