கதை: பிரபாவை விழுங்கிய குயிலா!

கதை: பிரபாவை விழுங்கிய குயிலா!
Updated on
2 min read

நண்பர்கள் சிரித்ததில் அதிர்ந்தது காடு.

“ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?” என்று கேட்டது குட்டிக்குரங்கு குயிலா.

“ம்... நீ சொன்னதைக் கேட்டுச் சிரிக்காம என்ன செய்வாங்க?” என்றது மஞ்சரி மான்குட்டி.

“நான் ஒண்ணும் விளையாட்டுக்குச் சொல்லலை. உண்மையைத்தான் சொன்னேன்...” என்றது குயிலா.

“நீ சொன்னது உண்மை, அதை நாங்க நம்பணும்...” என்றது கரடிக்குட்டி கனகா.

எல்லாரும் சொல்வதைக் கேட்டுக்கொண்டே தலையை ஆட்டியபடி நின்றது யானைக்குட்டி பிரபா.

“எல்லாம் உன்னாலதான்” என்று பிரபாவிடம் சொன்னது குயிலா.

“நீ சொன்னதைக் கேட்டு அவங்க சிரிக்கிறாங்க. அதுக்கு நானா காரணம்?” என்று கேட்டது பிரபா.

“ஆமா, நீதான் காரணம். நீ மட்டும் என்னைக் கோபப்படுத்தாமல் ஒதுங்கிப் போயிருந்தா, நான் ஏன் அப்படிச் சொல்லப் போறேன்?” என்று சொல்லிவிட்டு, வாலைக் கையில் பிடித்துச் சுற்றியது குயிலா.

அப்படி என்னதான் நடந்தது? குயிலா என்னதான் சொன்னது?

காட்டில் விளையாடுவதற்கு எல்லாமும் தயாராக இருந்தன.

கண்ணாமூச்சி விளையாட்டில் யார் கண்களைக் கட்டுவது? உடனே ‘சாட், பூட், த்ரி...’ போட்டனர். கனகா ‘அவுட்’ ஆனது. அப்போது வந்த பிரபா, “நானும் விளையாட்டுக்கு வர்றேன்” என்றது.

“இப்பத்தானே வந்தே, கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நில்லு” என்று சொன்னது குயிலா.

“ம்ஹூம்... என்னைச் சேத்துக்கலேன்னா நான் விளையாட விடமாட்டேன்” என்று நடுவில் வந்து நின்றது பிரபா.

குயிலாவுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. “இப்ப நீ ஓரமா போகலேன்னா, உன்னை அப்படியே முழுங்கிடுவேன்...” என்றது.

இதைக் கேட்டதும் நண்பர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

“குயிலா, என்னாச்சு உனக்கு? கோபம் வந்தா, இப்படியா பேசுவே?” என்று கேட்டது முயலா.

“ஆமா, எனக்குக் கோபம் வந்தா, நான் இப்படித்தான் பேசுவேன்” என்றது குயிலா.

“உன்னாலே பிரபாவை முழுங்க முடியுமான்னு யோசிச்சியா?”

“என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. நான் நினைச்சா பிரபாவை மட்டுமில்லே, இந்தக் காட்டையே முழுங்கிட்டுப் போயிருவேன்... தெரிஞ்சிக்கங்க!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டது குயிலா.

அடுத்த நாள் காட்டில் உள்ள விலங்குகள் ஓரிடத்தில் கூடியிருந்தன.

“இந்தக் கூட்டத்தைக் கூட்டியதுக்கான காரணத்தை முதல்ல சொல்லுங்க” என்றது சிறுத்தை சிங்காரம்.

பிரபாவின் அப்பா, “நேற்றிலிருந்து பிரபாவைக் காணோம்” என்று கவலையோடு சொன்னது.

“கடைசியா யாரு பிரபாவைப் பார்த்தது?” என்று கேட்டது காட்டெருமை.

“நாங்க நேத்து கண்ணாமூச்சி விளையாடும்போதுதான் பார்த்தோம்” என்றது மஞ்சரி.

“குயிலாகூட சண்டை போட்டுக்கிட்டுப் போச்சே, அப்பவா?” என்று உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டது முயலா.

“ஆமாமா...” அனைத்தும் ஒரே குரலில் சொல்லிவிட்டு. குசுகுசுவென்று பேசிக் கொண்டன.

“கொஞ்சம் அமைதியா இருங்க. யாராவது ஒருத்தர் பேசுங்க” என்றது சிங்காரம்.

“எங்களுக்குக் குயிலா மேலேதான் சந்தேகமா இருக்கு” என்றன அனைத்தும்.

கூட்டத்தில் நின்றிருந்த குயிலாவுக்கு இதைக் கேட்டு உடல் நடுங்கியது.

“ஐயோ... நானா?” என்று பதற்றமானது குயிலா.

“ஆமா. நேத்து விளையாட்டிலே பிரபா மேலே குயிலா ரொம்ப கோபப்பட்டது. உன்னை அப்படியே முழுங்கிடுவேன்னு வேற சொல்லுச்சு” என்றது முயலா.

“வேடிக்கையா இருக்கே! அதுவே குட்டிக்குரங்கு. அது யானைக்குட்டியை விழுங்க முடியுமா?” என்றது மஞ்சரி.

“அது பார்க்கத்தான் குட்டிக்குரங்கு. கோபம் வந்தா யாருன்னு பார்க்காம பேசும். சொன்னதுபோல் பிரபாவை முழுங்கிடுச்சோ என்னவோ?” என்றது மயிலா.

“ஆமா, இந்தக் குயிலாதான் பிரபாவை முழுங்கிடுச்சு. அதுக்கு தண்டனை கொடுங்க...” என்று அனைத்து இளம் விலங்குகளும் குரல் கொடுத்தன.

“எல்லாரும் என்னென்னவோ சொல்றீங்க. நிச்சயம் நீங்க நினைக்கிற மாதிரி நான் பெரிய ஆளில்லை. கொஞ்சம் கோபக்காரன். அதுக்காக யானைக்குட்டியை முழுங்குற அளவுக்கு எனக்கு சக்தி உண்டா? கோபத்தில் இருந்தாலும் வார்த்தைகளைக் கவனமா பேசணும்னு எனக்குப் புரிஞ்சிருச்சு. இனி கோபப்படவும் மாட்டேன், அப்படி எல்லாம் பேசவும் மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று சொன்னது குயிலா.

“அப்ப பிரபா எங்கே?”

சிரிப்பொலி கேட்டது. எல்லாம் திரும்பிப் பார்த்தன. சிரித்தபடி வந்தது பிரபா.

“ஆஹா... பிரபாவுக்கு ஒண்ணும் ஆகல. நல்லாத்தான் இருக்கு!”

“என்னை யாரும் முழுங்கலே. எதுக்கெடுத்தாலும் கோபப்படுற குயிலாவுக்கு அது தப்புன்னு புரிய வைக்க நெனச்சேன். அதனால யார் கண்ணிலும் படாமல் இருந்தேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் சிரித்தது பிரபா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in