

ஆதினிக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டு மூலையில் ஒரு வலை தொங்கிக்கொண்டிருந்தது. காற்று வீசும்போது ஆடியது. ஆனால், அறுந்துவிடவில்லை. வித்தியாசமான வலை. நான்கு பக்கங்களிலும் ஒரே ஓர் இழையின் மூலம் சுவரில் ஒட்டியிருந்தது. அட, இது யாருடைய வீடு?
“யாராவது இருக்கீங்களா?” என்று கேட்டாள் ஆதினி.
ஒரு கொசு பறந்து வந்து அந்த வலையில் மாட்டிக்கொண்டது. அது வலையில் இருந்து வெளியேற துடித்தது. அப்போது வலையின் ஓர் ஓரத்தில் இருந்து வேகமாக ஓர் எட்டுக்கால் பூச்சி (சிலந்தி) ஓடிவந்து கொசுவைக் கவ்வியது. ஆதினிக்குப் புரிந்துவிட்டது.
ஓ… இது சிலந்தியின் வீடு!
கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதினி. சிலந்தி மறுபடியும் மூலைக்குப் போய்விட்டது. இனி வேறு ஏதாவது ஒரு பூச்சி வரும்வரை சிலந்தி ஒளிந் திருக்கும். வலை அசையாமல் இருந்தது.
ஆதினிக்கு விளையாட வேண்டும் என்று ஆசை வந்தது. அவளுக்குப் பிடித்த குட்டி டைனசோர் பொம்மையைத் தேடினாள். அதைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடினாள். ஒருவேளை அம்மா எடுத்து ஒளித்து வைத்திருப்பாரோ? கட்டிலுக்குக் கீழே இருந்த அட்டைப் பெட்டியை எடுத்தாள்.
திடீரென அதிலிருந்து ஏதோ குதித்து அவள் மீது விழுந்தது.
“ஐயோ... அம்மா...” என்று துள்ளிக் குதித்தாள் ஆதினி.
அட்டைப் பெட்டி கீழே விழுந்தது. பெட்டியிலிருந்து வெள்ளையாக இரண்டு சிறிய முட்டைகள் உருண்டு ஓடின. சுற்றிப் பார்த்தாள்.
அங்கே ஒரு பல்லி சுவரில் நின்றுகொண்டு அவளையே பரிதாபமாகப் பார்த்தது. அவள் ஒரு குச்சியை எடுத்து முட்டைகளை அந்த அட்டைப் பெட்டிக்குள் தள்ளினாள். பல்லி நன்றியுடன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தது.
“சாரி, முட்டைகளை வைச்சுட்டேன்... பார்த்துக்கோ” என்று பல்லியைப் பார்த்துச் சொன்ன ஆதினி, ‘ஓ, இது பல்லியின் வீடா?’ என்று தனக்குள் ஆச்சரியப்பட்டுக்கொண்டாள்.
ஆதினி பகல் முழுவதும் வெளியே போய் நண்பர்களுடன் விளையாடினாள். ஜாலியாக இருந்தது. வீட்டுக்கு வந்து சாப்பிட்டதும் உறங்கிவிட்டாள்.
இரவில் ஆதினி தண்ணீர் குடிக்க எழுந்தாள். இரவு விளக்கு ஒளியில் கரப்பான் பூச்சிகள் அங்கும் இங்கும் ஓடி, இடுக்குகளுக்குள் புகுந்தன. அவற்றின் உணர்கொம்புகள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. ஆதினி பயப்படவில்லை.
“இங்கேதான் நீங்க குடியிருக்கிறீங்களா? உங்கள் வீடா இது?” என்று கரப்பான் பூச்சிகளைப் பார்த்துக் கேட்டாள் ஆதினி.
இடுக்கிலிருந்து தன்னுடைய உணர்கொம்புகளை நீட்டி, “ஆமாம் ஆமாம்” என்று கரப்பான் பூச்சிகள் சேர்ந்திசை பாடின. ஆதினிக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் மட்டும்தான் இந்த வீட்டில் குடியிருப்பதாக நினைத்திருந்தேன். ஆனால், எங்களைத் தவிர இன்னும் எத்தனை பேர் இந்த வீட்டில் குடியிருக்கிறார்கள் என்று யோசித்தபடியே உறங்கிவிட்டாள் ஆதினி.
காலையில் ஆதினி புத்தகப் பையை எடுத்தாள். அப்போதுதான் கவனித்தாள். பையிலிருந்து வரிசையாக எறும்புகள் எதையோ கவ்வியபடி போய்க்கொண்டிருந்தன. உற்றுப் பார்த்தாள். உடைந்து தூளான பிஸ்கட் துண்டுகள். அடடா, நேற்று பைக்குள் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட் உடைந்திருக்கிறது.
இப்போது அவள் கவனம் எறும்புகளின் பக்கம் திரும்பியது.
எங்கே போகின்றன இந்த எறும்புகள்?
அந்த வரிசையின் பின்னால் அப்படியே ஊர்ந்து போனாள் ஆதினி. வாசல்படிக்குக் கீழே சிறிய ஓட்டை வழியே உள்ளே போய்க்கொண்டிருந்தன எறும்புகள்.
ஒரு குட்டி எறும்பு திரும்பிப் பார்த்து, “பாப்பா, இது எங்க ஏரியா. உள்ளே வராதே...” என்று முன்னங்கால்களைத் தூக்கிக் காட்டி எச்சரித்தது. ஆதினிக்குப் புரிந்துவிட்டது. இங்கே இருப்பது எறும்புகளின் வீடு.
அப்போது கீச் கீச் கீச் என்று அணிலின் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் எங்கிருந்து கேட்கிறது? ஆதினி ஓடிப் போய்ப் பார்த்தாள்.
வாசலில் ஓட்டுச்சாய்ப்பின் கீழே இருந்த பனங்கட்டை இடைவெளியில் தேங்காய் நார், பஞ்சு எல்லாம் தெரிந்தன.
கீச் கீச் கீச் கீச்
அணில் அந்த இடைவெளிக்குள் போவதும் வருவதுமாக இருந்தது. முற்றத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பாட்டி சொன்னார்:
“அணில் கூடு கட்டியிருக்கு.”
‘ஓ, இது அணிலின் வீடு.’
ஆதினிக்குக் குழப்பம் அதிகமானது. அப்படி என்றால், இது யாருடைய வீடு?
மாலையில் அம்மா வந்ததும் ஓடிப்போய், “அம்மா, இது யாருடைய வீடு?” என்று கேட்டாள்.
அம்மா சிரித்துக்கொண்டே சொன்னார், “நம் எல்லாருடைய வீடு!”
ஆதினியும் சிரித்துக்கொண்டே சொன்னாள், “ஆமாம்... இது நம் எல்லாருடைய வீடு.”