

மரத்தடியில் நின்றால் மின்னல் தாக்குவது ஏன், டிங்கு? - ஜெ. பிரவீன், 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, கோவில்பட்டி.
பூமியில் இருக்கும் உயரமான மரங்கள் மூலம் மின்னல் பூமிக்குள் இறங்கும். ஆனால், மரங்கள் மின்சாரத்தைச் சிறப்பாகக் கடத்துவதில்லை. எனவே மரத்துக்கு அடியில் மனிதர்கள் நிற்கும்போது, மனித உடல் மின்கடத்தி என்பதால், மின்னல் தாக்குகிறது. அதனால்தான் இடி, மின்னலின்போது மரத்துக்குக் கீழே நிற்கக் கூடாது என்று சொல்கிறார்கள், பிரவீன்.
மின்னலுக்குப் பின்னால் இடி வருவது ஏன், டிங்கு? - ச. குகன், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம். காற்றில் ஒலியின் வேகம் நொடிக்கு சுமார் 340 மீட்டர். ஒளி வெற்றிடத்தில் பயணிக்கும் வேகம் நொடிக்கு சுமார் 30 கோடி மீட்டர். ஒலி, ஒளியின் வேகம் அவை செல்லும் ஊடகத்துக்கு ஏற்ப மாறுபடும். ஒலி வெற்றிடத்தில் பயணிக்காது. அது பயணிக்க ஊடகம் தேவை. ஒளி மின்காந்த அலை. மின்காந்த அலை பயணிப்பதற்கு ஊடகம் தேவையில்லை. ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் நமக்கு மின்னல் முதலில் தெரிகிறது, பிறகு இடிச் சத்தம் கேட்கிறது, குகன்.