கதை: அது என்ன அலறல்?

கதை: அது என்ன அலறல்?

Published on

செண்பகக் காட்டில் உயர்ந்து நின்றிருந்தது அந்தத் தேக்கு மரம். நள்ளிரவு நேரம் என்பதால் அந்த மரத்தின் கிளையிலிருந்த கூட்டில் குருவிக் குஞ்சுகள் தூங்கிக்கொண்டிருந்தன. திடீரென்று பயங்கரமான அலறல் ஒன்று கேட்டது. அந்த அலறல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தன குருவிக் குஞ்சுகள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு, மீண்டும் அந்த அலறல் சத்தம் கேட்டது. தொடர்ந்து அவ்வப்போது அந்தச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. குருவிக் குஞ்சுகளுக்குப் பயம் வந்துவிட்டது.

குஞ்சுகள் தங்கள் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தாய்க் குருவியை எழுப்பின. பதறி எழுந்த தாய்க் குருவி, காரணத்தைக் கேட்டது.

“அம்மா, இது என்ன அலறல் சத்தம்? எங்களுக்குப் பயமாக இருக்கிறது” என்று குஞ்சுகள் தாய்க் குருவியிடம் சொன்னபோது, மீண்டும் அந்த அலறல் கேட்டது.

“ஓ, இதுவா? பிள்ளைகளே, இது ஆந்தையின் குரல். ஆந்தையும் இந்த மரத்தில்தான் வசிக்கிறது. அதுவும் நம்மைப் போன்ற பறவைதான்” என்றது தாய்க் குருவி.

“ஆந்தையா? அதுவும் இந்த மரத்தில்தான் வசிக்கிறதா? நாங்கள் பார்த்ததே இல்லையே... நாளை எங்களுக்கு அதைக் காட்டுவீர்களா?” என்று கேட்டன குஞ்சுகள்.

“நீங்க பிறந்தே சில நாள்கள்தாம் ஆகின்றன. நிச்சயம் காட்டுகிறேன். இப்போது நீங்கள் பயப்படாமல் தூங்குங்கள்” என்று சொன்னது தாய்க் குருவி.

மறுநாள் காலை.

தாய்க் குருவி இரை தேடுவதற்காகக் கூட்டைவிட்டு வெளியே வந்தது. அப்போது உயரத்திலிருந்த ஒரு கிளையில் ஆந்தை அமர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.

உடனே அது கூட்டுக்குத் திரும்பிச் சென்று, “பிள்ளைகளே, நேற்று இரவு சத்தமிட்ட ஆந்தை ஒரு கிளையில் அமர்ந்திருக்கிறது. வந்து பாருங்கள்” என்று அழைத்தது.

குருவிக் குஞ்சுகளும் கூட்டைவிட்டு வெளியே வந்து, பார்த்தன. சத்தம் கேட்டு ஆந்தை விழித்தது. பயந்த குருவிக் குஞ்சுகள் கூட்டுக்குள் பதுங்கிக் கொண்டன.

“அம்மா, அந்தப் பறவைதான் ஆந்தையா? அதன் கண்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. அது ஏன் இப்படிச் சத்தம் போடுகிறது?” என்று கேட்டது ஒரு குஞ்சு.

“ஒவ்வொரு பறவைக்கும் குரல் வெவ்வேறு மாதிரி இருக்கும். ஆந்தையின் குரல் இப்படித்தான். அதைக் கேட்டு பயப்படத் தேவையில்லை” என்று சொன்னது தாய்க் குருவி.

“சரி, அதன் குரல் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்த இரவில் ஏன் அது இப்படிச் சத்தம் போடுகிறது? நாம் உறங்க வேண்டாமா? பகலில் எப்படி வேண்டுமானாலும் சத்தம் போடட்டுமே” என்றது இன்னொரு குஞ்சு.

“பிள்ளைகளே, பகலில் ஆந்தைகள் ஓய்வெடுக்கும். இப்போதுகூட அது தூங்கிக்கொண்டுதான் இருந்தது. சத்தம் கேட்டு விழித்தது” என்றது தாய்க் குருவி.

“ஏம்மா, இப்படி இரவில் தூங்காமல் பகலில் தூங்குது?”

தாய்க் குருவி சிரித்தது.

“பிள்ளைகளே, ஆந்தை போன்ற பறவைகள் இரவில் உணவு தேடும்படி இயற்கையில் உருவாகியிருக்கின்றன. இரவில்தான் பார்வை நன்றாகத் தெரியும். அதனால் இரவில்தான் வேட்டையாடும். பகலில் ஓய்வெடுக்கும்.”

“ஆச்சரியமாக இருக்கிறது அம்மா. இரவில் என்ன கிடைக்கும்?”

“புழு, பூச்சி, எலி, சின்ன விலங்குகளைச் சாப்பிடும்.”

“நம்மை ஒன்றும் செய்யாதே?”

“நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால், ஆர்வத்தில் அது இருக்கும் இடத்துக்குச் சென்று தொந்தரவு கொடுத்துடாதீங்க. நாளைக்கு அது வேறு இடத்துக்குச் செல்வதாகச் சொல்லியிருக்கிறது. அதுவரை அதன் கண்ணில் படாமல் சமர்த்தாக இருங்க.”

“நல்லவேளை, நம் மரத்திலிருந்து நாளை கிளம்பிவிடும்.”

“பிள்ளைகளே, ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? இந்தக் காடும் இங்கிருக்கும் மரங்களும் அனைவருக்கும் சொந்தமானவைதானே? ஆந்தையும் இந்த மரத்தில் வசிக்கலாம்” என்றது தாய்க் குருவி.

“ஐயோ, ஆந்தையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” என்றன குஞ்சுகள்.

“ஆந்தையின் உருவத்தையும் குரலையும் வைத்து அதை எதிரியாகப் பார்க்காதீர்கள். ஆந்தையாலும் நமக்கு நன்மை இருக்கிறது” என்றது தாய்க் குருவி.

“நம் தூக்கத்தைக் கெடுப்பதுதான் அது செய்யும் நன்மையா?”

“ஆந்தையால்தான் நாம் வசிக்கும் மரத்துக்கு எலிகளோ பாம்புகளோ வருவதில்லை. நாம் பத்திரமாக இருக்கிறோம். ஆந்தை வேறு இடம் செல்வதை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது.”

“ஆந்தையால் இவ்வளவு நன்மைகள் நமக்குக் கிடைக்குதா? அப்படின்னா இந்த மரத்தில் வாழட்டும்” என்றன குருவிக் குஞ்சுகள்.

“ஆந்தையால் நமக்கு எந்தப் பலனும் இல்லாவிட்டாலும் அது இங்கே வசிப்பதற்கு, நம்மைப் போல் உரிமை இருக்கிறது. யாரையும் அவர்களால் என்ன பயன் என்பதை வைத்து, நமக்கு வேண்டும், வேண்டாம் என்று முடிவுசெய்யக் கூடாது. அவரவர் இயல்பை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒத்துவரவில்லை என்றால், ஒதுங்கிவிட வேண்டும். மற்றபடி அனைவரும் அவரவருக்குப் பிடித்த இடத்தில் வாழலாம்” என்றது தாய்க் குருவி.

குஞ்சுகளும் அம்மா சொல்வதை ஏற்றுக்கொண்டன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in