

க
ருந்துளை என்பது அண்டவெளியின் ஒரு பகுதிதான். இதன் எல்லைக்குச் செல்லும் ஒளி, மின் காந்த அலைகள் உட்பட அனைத்தையும் ஈர்த்துக்கொள்ளும். இதிலிருந்து எதுவும் தப்பித்து வெளியே வர முடியாது. உள்ளே என்ன நடக்கிறது என்பதைக்கூட அறிந்துகொள்ள இயலாது. அதனால்தான் இதைக் கருந்துளை என்று அழைக்கிறார்கள். .
2017, செப்டெம்பர் 5 ஜப்பான் வானியலாளர்கள் நமது பால்வெளி மண்டலத்தில் நடுத்தர அளவுள்ள ஒரு கருந்துளை இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தார்கள். இது நமது சூரியனை விட 1,௦௦,௦௦௦ மடங்கு அதிக நிறை கொண்டதாக இருக்கும் என்றும் இது நமது பால்வெளி மண்டலத்தின் மையத்துக்கு அருகில் இருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தக் கருந்துளை உறுதி செய்யப்பட்டால் நமது பால்வெளி மண்டலத்திலேயே இருக்கும் இரண்டாவது பெரிய கருந்துளையாக இருக்கும்.
150 ட்ரில்லியன் கி.மீ. அகலமுள்ள நீள்வட்ட வாயுக் கூட்டங்கள், பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். வழக்கத்துக்கு மாறான இந்த நகர்தல் வானியலாளர்களைக் குழப்பமடையச் செய்தது. சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் நிறுவப்பட்ட சக்தி வாய்ந்த தொலைநோக்கியை அந்த வாயுக் கூட்டங்களை நோக்கித் திருப்பினார்கள் .
கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சயனைடுகளால் ஆன அந்த மேகங்கள் அளவுக்கு அதிகமான ஈர்ப்பு விசையால் நகர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. இது ஒரு கருந்துளையின் ஈர்ப்பாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஒளியே இல்லாத கருந்துளையை அவற்றின் ஈர்ப்பு விசையையும், அவற்றைச் சுற்றி உருவாகும் கதிர்வீச்சையும் கொண்டு கண்டுபிடிக்கிறார்கள். நமது பிரபஞ்சத்தில் 100 மில்லியன் கருந்துளைகள் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.