

மாதவபுரத்தை பூபாலன் ஆண்டு வந்தார். அவருக்கு நல்லவிதமாக நாட்டை ஆள வேண்டும், மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் கிடையாது. அமைச்சர்களிடம் வேலைகளைக் கொடுத்து விட்டு அரண்மனையிலேயே ஜாலியாக இருந்து கொள்வார். உண்பதும் உறங்குவதுமாக இருந்த பூபாலனுக்கு இளம் வயதிலேயே உடல் பருத்துவிட்டது. சில நோய்களும் வந்துவிட்டன. ஒருநாள் அமைச்சர் சிவபாலனை அழைத்தார்.
“நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன் என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது. நான் நல்ல மன்னனாக இந்த நாட்டை ஆளவில்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். ஒருவேளை நான் குணமானால், இந்த நாட்டு மக்களுக்கு நல்ல மன்னனாக இருப்பேன்” என்று வருத்தத்துடன் கூறினார் பூபாலன்.
சிவபாலனுக்கு மன்னரின் பேச்சைக் கேட்டதும் கண்ணீர் வந்துவிட்டது. “பக்கத்து நாட்டில் சிறந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார். அவரை உடனே வரச் சொல்கிறேன். அவர் சொல்வதை மட்டும் நீங்கள் செய்தால் போதும், நோய் குணமாகும். சிறந்த மன்னராக இந்த நாட்டை நீங்களே ஆளலாம்” என்றார்.
“நாளையே அந்த மருத்துவரை அழைத்து வர முடியுமா?”
“உத்தரவு மன்னா” என்ற சிவபாலன், வீரர்களை உடனே அனுப்பி வைத்தார்.
மறுநாள் காலை அரண்மனைக்கு வந்தார் பக்கத்து நாட்டு மருத்துவர்.
மன்னரின் நாடி பிடித்துப் பார்த்தார். சற்று நேரம் மௌனமாகச் சிந்தித்தார். அவருடைய எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட மன்னர், "மருத்துவரே, என்ன யோசனை? என் நோய் குணமாகாதா? தயங்காமல் கூறுங்கள். நான் உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டேன்” என்றார்.
"கவலை வேண்டாம் மன்னா, ஆனால்...?"
"எதுவானாலும் சொல்லுங்கள் மருத்துவரே... அதை ஏற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்."
"தங்கள் உடலைக் குணப்படுத்தக்கூடிய ஒரு மருந்து இருக்கிறது. ஆனால், அதை என்னால் எடுத்துவர இயலாது.”
“என்ன சொல்கிறீர்கள்? ஆள்களை நான் அனுப்புகிறேன்.”
“மன்னா, மூன்று மைல் தூரத்தில் இருக்கும் செண்பக மலையின் உச்சியில் ஒரு அதிசய மருந்து மரம் இருக்கிறது. அதில் காய்க்கும் கனி ஒன்றை, மரத்திலிருந்து பறித்த உடனே சாப்பிட்டுவிட வேண்டும்.”
“இவ்வளவுதானா? யார் அங்கே?”
“மன்னா, நான் சொன்னதைக் கவனிக்கவில்லையா? மரத்திலிருந்து பறித்த உடனே சாப்பிட வேண்டும். அதுவும் காலை 7 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். கனிகளைப் பறித்து வைத்துச் சாப்பிட்டால் பலன் இருக்காது.”
“அப்படி என்றால் நானே தினமும் மலைக்குச் சென்று, கனியைச் சாப்பிட வேண்டுமா?”
“ஆமாம்.”
“எத்தனை நாளைக்கு?”
“45 நாள்கள்.”
“ஐயோ... குதிரைகூட மலையில் ஏறாதே... என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியாதே...”
“தங்கள் நோய் குணமாக அதைத் தவிர வேறு வழியில்லை மன்னா.”
அருகிலிருந்த சிவபாலன், “மன்னா, உங்கள் உடல் குணமாவதுதான் முக்கியம். உங்களோடு நானும் வருகிறேன். பேசிக்கொண்டே சென்றால் தூரம் தெரியாது” என்றார்.
“வேறு மருந்துகள், உணவுக் கட்டுப்பாடு?”
“கனியைச் சாப்பிட்டு வந்ததும் குளித்துவிட்டு, நீர் ஆகாரமும் பச்சைக்காய்கறிகளும் சாப்பிடுங்கள். மதியம் காய்கறி, கீரைகளுடன் சிறிது சோறு சாப்பிடுங்கள். இரவு ராகிக்கூழும் பழங்களும் சாப்பிடுங்கள்.”
“என் நோய்க்கு இவ்வளவு எளிதான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறீர்களே, நோய் குணமாகுமா?”
“சந்தேகம் வேண்டாம் மன்னா.”
“என் நோய் குணமாகும் வரை தாங்கள் அரண்மனையிலேயே தங்க வேண்டும்.”
“அப்படியே செய்கிறேன் மன்னா.”
மறுநாளில் இருந்து மன்னர் மலையேற ஆரம்பித்தார். சில நாள்களிலேயே அவர் உடல் நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. மன்னருக்கு மருத்துவரின் மேல் நம்பிக்கை வந்தது.
“மருத்துவரே, தாங்கள் உங்கள் நாட்டுக்குச் சென்று மருத்துவம் பாருங்கள். 45ஆவது நாள் நீங்கள் வந்தால் போதும்” என்றார் மன்னர்.
மருத்துவர் மகிழ்ச்சியாக விடைபெற்றார்.
மன்னர் நாள் தவறாமல் மலை ஏறினார். கனியை உண்டார். அளவான உணவைச் சாப்பிட்டார். வேலைகளைக் கவனித்தார். அவர் உடல் பாதியாக இளைத்துவிட்டது. நோய்கள் எல்லாம் குணமாகிவிட்டன.
45ஆவது நாள் மருத்துவர் அரண்மனைக்கு வந்தார்.
“நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார் எதிரில் வந்தவர்.
“நான் மன்னரைப் பார்க்க வேண்டும். பக்கத்து நாட்டு மருத்துவர் என்று சொன்னால் அவருக்குத் தெரியும்.”
“அவரைப் பார்க்க முடியாது, நீங்கள் செல்லலாம்.”
“அவர்தான் என்னை வரச் சொன்னார். அவரைப் பார்க்காமல் போக மாட்டேன். நீங்கள் யார் என்னைக் கேள்வி கேட்க?”
“நான்தான் இந்த நாட்டின் மன்னர் பூபாலன்.”
“மன்னா, தாங்கள் இளைத்ததில் எனக்கு அடையாளமே தெரியவில்லை.”
“சும்மா விளையாடினேன். உங்கள் மருத்துவத்தால் நான் முழுவதும் குணமாகிவிட்டேன். நாட்டையும் நல்ல முறையில் ஆட்சி செய்வதாக மக்களும் மகிழ்கிறார்கள். தங்களின் மருத்துவத்தால்தான் இவ்வளவும் எனக்குக் கிடைத்தன.”
“மன்னிக்க வேண்டும். நான் தங்களுக்கு மருந்து எதுவும் கொடுக்கவில்லை. அந்த மலையில் இருந்த கனியும் மருத்துவக் கனியல்ல. உங்களை நடக்க வைத்தேன். ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வைத்தேன். அவ்வளவுதான் மன்னா.”
“நன்றி மருத்துவரே. தங்களால் நான் புதிய மனிதனாக மாறிவிட்டேன். தங்களுக்குப் பரிசு காத்திருக்கிறது. நான் விருந்து சாப்பிடுவதில்லை. தாங்கள் விருந்து உண்டுவிட்டு, பரிசைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார் மன்னர்.
சோம்பேறி மன்னரை, சுறுசுறுப்பு மன்னராக மாற்றியதற்கு சிவபாலனும் பரிசு கொடுத்து மருத்துவரை அனுப்பி வைத்தார்.