Published : 03 Jan 2018 11:04 AM
Last Updated : 03 Jan 2018 11:04 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பல்லி ஏன் கீழே விழுவதில்லை?

காந்தி, நேரு, அம்பேத்கர் மூவரிடம் இருந்தும் மாணவர்களாகிய நாங்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஒன்றைச் சொல்ல முடியுமா, டிங்கு?

–சி.வி. கலைச்செல்வன், 12-ம் வகுப்பு, காட்டுமன்னார்குடி.

மூன்று தலைவர்களிடமும் கற்றுக்கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. காந்தியிடம் எளிமையையும் நேர்மையையும் கற்றுக்கொள்ள வேண்டும். நேருவிடமிருந்து அறிவை விசாலப்படுத்தக்கூடிய புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அம்பேத்கரிடமிருந்து மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மையும் எளிமையும் கல்வியும் நம்மை மேன்மையடைய வைக்கும். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பது சமுதாயத்தை மேம்படுத்தும், கலைச்செல்வன்.

வியாழன் கோள் பூமியை விட எவ்வளவு பெரியது? வியாழனுக்கு எத்தனை சந்திரன்கள் இருக்கின்றன, டிங்கு?

–ஜி. அமிர்த மீரா, குளித்தலை.

வியாழனுக்குள் சுமார் 1,300 பூமிகளைப் போட்டு நிரப்ப முடியும். அவ்வளவு பிரம்மாண்டமானது. சூரியனை விட்டு வெகு தொலைவில் இருப்பதால், ஒரு தடவை சூரியனைச் சுற்றி வருவதற்கு அந்தக் கோள் 12 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறது. இதுவரை வியாழன் கோளுக்கு 67 சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கலிலியோ 4 சந்திரன்களைக் கண்டுபிடித்தார். கனிமீட், காலிஸ்டோ, அயோ, யூரோப்பா என்ற இந்த நான்கு சந்திரன்களும்தான் முழுமையான வடிவில் இருக்கின்றன. மற்றவை எல்லாம் மிகச் சிறியதாகவும் வடிவங்களற்றும் காணப்படுகின்றன. இவற்றில் பல சந்திரன்கள் ஒரு காலத்தில் சூரியனைச் சுற்றிக்கொண்டிருந்த அஸ்டிராய்டுகள் எனப்படும் சிறு கோள்கள். காலப்போக்கில் வியாழன் தன்னுடைய பாதைக்குள் இவற்றை இழுத்துவந்துவிட்டதால், வியாழனைச் சுற்றி வருகின்றன, அமிர்த மீரா.

சுவரிலும் கூரையிலும் செல்லும் பல்லி எப்படிக் கீழே விழாமல் இருக்கிறது, டிங்கு?

- எஸ். அர்ச்சனா, திருச்செங்கோடு.

நல்ல கேள்வி அர்ச்சனா! பல்லியின் பாதங்களில் செதில்கள் போன்ற மிகச் சிறிய ரோமங்கள் இருக்கின்றன. பாதங்களிலும் விரல்களிலும் இருக்கும் இந்த ரோமங்கள், சுவரிலோ அல்லது மற்ற பரப்பிலோ உள்ள கண்களுக்குத் தெரியாத மேடு, பள்ளங்களைப் பிடித்துக்கொண்டு கீழே விழாமல் பல்லியைக் காக்கின்றன. இதனால் பல்லி மேற்கூரையிலும் சுவரிலும் எளிதாக நடந்து செல்கிறது.

நல்ல நேரம் பார்ப்பதில் உனக்கு நம்பிக்கை உண்டா, டிங்கு?

-வெ. பாரதி, செந்துறை.

நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் கடினமான உழைப்பும் இருந்தால் எல்லா நேரமும் நல்ல நேரம்தான் பாரதி. ‘ஒரு நாளின் 24 மணி நேரத்தில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான்’ என்கிறார் அப்துல் கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x