கதை: கணக்கும் இனிக்குமா?

கதை: கணக்கும் இனிக்குமா?
Updated on
2 min read

அழுதுகொண்டிருந்த குமாருக்கு எதிரே கணக்குப் புத்தகம் மண்டியிட்டு அமர்ந்திருந்தது.

"அழாத குமார்."

"உன்னை எனக்குப் பிடிக்கல, போ."

அவன் பை மீது ரேங்க் கார்டு திறந்து கிடந்தது. அதில் எல்லாவற்றிலும் 60 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய குமார், கணிதத்தில் மட்டும் 12 மதிப்பெண்கள் வாங்கியிருந்தான்.

மதிப்பெண்களைப் பார்த்து கணக்குப் புத்தகம் கண்ணீர் வடித்தது.

"உன்னை எல்லாம் யாரு கண்டுபிடிச்சாங்க?" என்று கோபமாகக் கேட்டான் குமார்.

தன்னால்தான் குமாருக்கு இவ்வளவு கஷ்டம் என்று வருத்தப்பட்டது கணக்குப் புத்தகம்.

"மத்த பாடத்துல எல்லாம் நான் நல்ல மார்க்குதானே வாங்கியிருக்கேன். உன்னால்தான் ஃபெயில் ஆயிட்டேன்."

"நீ என்னைப் புரிஞ்க்கிட்டுப் படிக்கணும். மத்த பாடம் மாதிரி மனப்பாடம் பண்ணி எழுத முடியாது, குமார்."

"நீ ஒன்னும் எனக்குப் புத்தி சொல்ல வேணாம்."

இரவு குமாரின் அப்பா ரேங்க் கார்டை பார்த்துக் கோபப்பட்டார். அவன் அம்மாதான் அவரைச் சமாதானப்படுத்தி குமாரைத் தனியாக அழைத்து வந்தார்.

"கணக்கு இல்லாத படிப்பு எங்கேயும் இருந்தா, அங்கே போயி படிக்கிறேன்" என்றான் குமார்.

"கணக்கு இல்லாம பத்தாம் வகுப்புக்கு மேலேதான் படிக்க முடியும். அதுவரைக்கும் கண்டிப்பா உண்டுடா செல்லம்" என்று அவன் முதுகைத் தட்டிக்கொடுத்தார் அம்மா.

முகம் கழுவிக்கொண்டு படிக்க உட்கார்ந்தான் குமார். அவன் எடுத்தது அறிவியல் பாடம். அவனுக்கு ரொம்பவும் பிடித்தது அதுதான்.

அறிவியல் படித்து ராக்கெட் விஞ்ஞானியாக வேண்டும் என்று அவன் நினைப்பது உண்டு.

“விஞ்ஞானி ஆகணும்னாலும் கணக்குத் தெரியணும் குமார்" என்று தயக்கத்துடன் சொன்னது கணக்குப் புத்தகம்.

குமாருக்கு எரிச்சலாக இருந்தது.

"உனக்கு எதனால கணக்கு வரமாட்டேங்குதுன்னு யோசிச்சுப் பாரு."

ஐந்தாம் வகுப்பில் இருந்தே கணக்குச் சண்டித்தனம் பண்ணியது நினைவுக்கு வந்தது.

"ரெண்டு வருசமா வரல" என்றான் குமார்.

"கணக்கு வாத்தியார் திட்டுவதாலா?"

‘அட, அதெல்லாம்கூட இதுக்குத் தெரிந்திருக்கிறதே’ என்று குமார் வியந்தான்.

"செல்லையா சார் வாய்ப்பாடு ஒழுங்கா சொல்லலைன்னா மோசமா திட்டிடுவாரு" என்றான்.

"வாய்ப்பாடு அவ்வளவு கஷ்டமா என்ன?"

"கஷ்டமாவா? அவரு கேட்பது பதிமூணாம் வாய்ப்பாடு தெரியுமா? பத்து பதிமூணு நூற்று முப்பது வரைக்கும் சொல்லிடலாம். அப்புறம் முடியாது."

"பதினொன்னு பதிமூணு தெரியலேன்னா, முந்தைய நூற்று முப்பதுகூட ஒரு பதிமூனைக் கூட்டிக்க வேண்டியதுதானே?" என்று கணக்குப் புத்தகம் சொன்னபோது, குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.

"நீ வகுப்பு மாறி, சந்திரா டீச்சர்கிட்ட படிக்கப் போ. அவங்க கணக்கைச் சுலபமா சொல்லித் தருவாங்க. படிக்கிற எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இல்லை. சிலர் மெதுவா கத்துக்குவாங்க. செல்லையா சார் நல்ல ஆசிரியர்தான். ஆனால், மெதுவா கத்துக்கிறவங்களால வேகமாக கத்துக்க முடியாது. ரெண்டு, மூணு முறை விளக்கிச் சொல்லணும்."

"வேற வகுப்புக்குப் போனா, கோபி வரமாட்டானே?"

"நண்பன் வரணும்னு எதிர்பார்க்காதே. மாலை நேரத்தில் அவனோடு விளையாடு. உனக்குக் கணிதம் வரணும்னா நீ சிலவற்றை விட்டுக்கொடுக்கணும். அந்த வகுப்பிலும் உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பாங்க. சந்திரா டீச்சர் அன்பா சொல்லித் தருவாங்க" என்றது கணக்குப் புத்தகம்.

"அவங்களும் இதே கணக்கைத்தானே சொல்லித் தருவாங்க?"

"அப்படி இல்லை குமார். கணிதத்தைச் சுலபமாகக் கற்றுக் கொடுக்கச் சில வழிகள் வச்சிருப்பாங்க."

அன்றிரவு யோசித்தபடியே தூங்கினான் குமார்.

மறுநாள் தெரிந்த ஆசிரியர் ஒருவர் மூலம் சந்திரா டீச்சர் வகுப்புக்குச் சென்றான் குமார். அன்றைய நாளின் முதல் வகுப்பிலேயே சந்திரா டீச்சர் வந்துவிட்டார்.

"புதுசா வந்திருக்கீங்களே, உங்க பேரு என்ன?" என்று டீச்சர் கேட்டதும், ஆச்சரியம் அடைந்தான் குமார்.

பெயரைச் சொன்னான்.

"குமாரை நாம எல்லாரும் வரவேற்கும்படியாகக் கை தட்டுங்க" என்று டீச்சர் சொன்னதும் மாணவர்கள் கரவொலி எழுப்பினர்.

குமாருக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது.

"சந்தேகம் வந்தால், தாராளமா கேட்கலாம். சரியா?" என்று தோளில் கைபோட்டபடி சந்திரா டீச்சர் சொன்னதும் குமார் உற்சாகமானான்.

“1984. இது 4 ஆல் வகுபடுமா என்பதை உடனடியா கண்டுபிடிக்கணும்.”

எல்லாரும் எழுத ஆரம்பித்தனர். குமார் திணறினான்.

சந்திரா டீச்சர் அருகில் வந்தார். "1984 என்கிற எண்ணில், கடைசி இரண்டு எண்களை, அதாவது 84 ஐ மட்டும் எடுத்துக்கொண்டு அது நான்கால் வகுபடுமா என்று பாரு.”

“84, 4ஆல் வகுபடும்” என்று சொன்னான் குமார்.

"வெரிகுட். அப்படி இறுதி இரண்டு எண்கள் வகுபட்டால், மொத்த எண்களும் வகுபடும். அதாவது 1984 நான்கால் வகுபடும்."

எளிதில் செய்து முடித்தான் குமார்.

இப்படிக் கணக்கு டீச்சர் சந்திரா ஒவ்வொரு கணக்கையும் எளிய முறையில் சொல்லிக் கொடுக்கவும் அவனுக்கு எளிதில் புரிய ஆரம்பித்தது. கடைசிப் பத்து நிமிடங்களில் சந்திரா டீச்சர் பாடம் எடுக்காமல் பொதுவான விஷயங்களைப் பேசினார். அதுவும் அவனுக்குப் பிடித்திருந்தது.

அன்றிரவு கணக்குப் புத்தகம் குமாரிடம், "இப்போ உனக்குக் கணக்குப் பிடிக்குதுல்ல?" என்று கேட்டது.

குமார் சிரித்தான்.

அரையாண்டுத் தேர்வில் கணிதத்தில் முதல் முறையாக 55 மதிப்பெண்களை வாங்கி, எட்டாவது ரேங்க் எடுத்தான் குமார்.

ஒருநாள் வகுப்பில் கணித மேதை ராமானுஜன் பற்றி சந்திரா டீச்சர் கதை போலச் சொன்னார். "நீங்களும் ராமானுஜன்போல ஆகலாம்" என்றபோது, எல்லாருக்குள்ளும் நம்பிக்கை வளர்ந்தது.

கணக்குகளை எளிய சூத்திரங்கள் மூலம் செய்யும் வித்தைகளைப் படிப்படியாகச் சொல்லிக் கொடுத்தார். ராக்கெட் விடுவதில் உள்ள தத்துவத்தைச் சொல்லி, அறிவியலும் கணிதமும் இணைந்தே செயல்படுவதை விளக்கினார்.

அந்த ஆண்டின் இறுதியில் குமார் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்கள் 78. அவனுக்குப் பிடித்த அறிவியலில் 77 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். ஒரு மதிப்பெண் கணிதத்தில் கூடுதல் என்பதில் கணக்குப் புத்தகத்துக்கு சந்தோஷம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in