

பேருந்தில் பயணிக்கும்போது வாந்தி வருவது ஏன், டிங்கு?
-வெ. அதியா, 3-ம் வகுப்பு, அமலா மெட்ரிக். பள்ளி, தருமபுரி.
வாகனங்களில் பயணிக்கும்போது ஏற்படும் வாந்தி, தலை சுற்றல், குமட்டல், தலைவலி போன்ற பிரச்சினைகள் வந்தால் அவர்களுக்கு ‘பயண நோய்’ (Motion sickness) இருக்கலாம். பேருந்து, ரயில்களில் வேகமாகச் செல்லும்போது நாம்தான் பயணிப்போம். ஆனால் வெளியில் தெரியும் மரம், செடி, கட்டிடங்கள் போன்றவை நம்மைக் கடந்து வேகமாகச் செல்வது போலத் தோன்றும். கண் இப்படி மூளைக்குத் தகவல் அனுப்புகிறது. ஆனால் காது பயணிக்கும் சத்தத்தை வைத்து வேகமாக நாம் பயணிப்பதாக மூளைக்குத் தகவல் அனுப்புகிறது.
இப்படி சில உறுப்புகள் கொடுக்கும் தகவல்களால் மூளை குழப்பமடைகிறது. அப்போது பயண நோய் உண்டாகிறது. அது வாந்தி, குமட்டல், தலை சுற்றல், தலை வலியாக வெளிப்படுத்துகிறது என்கிறார்கள். பயணங்களின்போது உடல் சமநிலையை இழந்துவிடுவதாலும் பயண நோய் ஏற்படுகிறது என்கிறார்கள். நிலத்தில் மட்டுமின்றி, கப்பல், விமானப் பயணங்களிலும் பயண நோய் வரும். மூன்றில் ஒருவருக்குப் பயண நோய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிலருக்கு பெட்ரோல், டீசல் வாசனை ஒத்துக்கொள்ளாததாலும் வாந்தி வரலாம், அதியா.
நீ சின்ன வயதில் ஆசைப்பட்டு, நிறைவேறாமல் போன ஆசை உண்டா? இப்போது என்ன ஆசை இருக்கிறது, டிங்கு?
–என். மணிமாறன், 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, செந்துறை.
நான் முதன் முதலில் ரிக்ஷாவைப் பார்த்தபோது, பெரியவனானதும் ஒரு ரிக்ஷா ஓட்டியாகத்தான் வரவேண்டும் என்று முடிவு செய்தேன். அடிக்கடி ரிக்ஷா ஓட்டுவதுபோல் கற்பனையிலும் மிதந்தேன். திடீரென்று ஒருநாள் காய்ச்சலுக்கு மருத்துவரிடம் போனபோது, மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பள்ளியில் ஓர் ஆசிரியர் மிக அழகாகப் பாடம் நடத்தியபோது, ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் பாடகராக இருந்தபோது, பாடகராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தபோது, ஒரு கிரிக்கெட் வீரனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஒருமுறை பேருந்து நிலையத்தில் என் உறவினர் ஒருவர் மைக் பிடித்து, ‘போராடுவோம்… போராடுவோம்… நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்…’ என்று கோஷமிட்டபோது, ஒரு போராளியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படி நான் வளர வளர என் ஆசைகளும் மாறிக்கொண்டே இருந்தன. இங்கே சொன்ன அத்தனை ஆசைகளும் நிறைவேறாத ஆசைகள்தான், மணிமாறன். இப்போது எனக்கென்று தனிப்பட்ட ஆசைகள் ஏதுமில்லை. ‘எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்’ என்ற சமூகம் சார்ந்த பேராசை மட்டும்தான் இருக்கிறது.
ஆர். உஷா நந்தினி, திருவாரூர்.
1. வாய்ப்பு என்பது உழைப்பு என்ற வேடம் இட்டு வருவதால், பலரும் அதைத் தவற விட்டுவிடுகிறார்கள்.
2. கடிகாரத்தின் முட்கள் வேகமாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. செய்ய வேண்டிய வேலைகளோ ஏராளமாக இருக்கின்றன.
3. எனக்குத் தோல்வியே கிடையாது. 10 ஆயிரம் வழிகளில் அது வேலை செய்யவில்லை என்பதைக் கண்டுகொண்டேன்.
4. உழைப்புக்கு நிகரான இன்னொரு விஷயம் எதுவும் இல்லை.