கதை: பறக்கும் வீடு!

கதை: பறக்கும் வீடு!
Updated on
2 min read

வெண்மதி அமைதியாக ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அவள் அம்மாவுக்குக் காரணம் புரிந்துவிட்டது.

“வெண்மதி, கொக்கு பற... பற... விளையாடலாமா?” என்று கேட்டார்.

“ம்… விளையாடலாம்மா.”

அம்மா தன் கைவிரல்களைத் தரையில் வைத்து, “கொக்கு… பற... பற!” என்றார்.

வெண்மதி விரல்களை ஆட்டினாள்.

“ஆட்டுக்கல் பற… பற...”

வெண்மதி விரல்களை ஆட்டாமல் வைத்திருந்தாள்.

“மைனா பற… பற...”

விரல்களை ஆட்டினாள் வெண்மதி.

“வீடு பற... பற…”

வீடு பறக்காது. ஆனாலும் விரல்களை ஆட்டினாள் வெண்மதி.

“வீடு பறக்குமா? கை ஆட்டிட்ட! நீ அவுட்” என்றார் அம்மா.

“ம்மா… வீடு பறந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்!”

“நல்லாதான் இருக்கும். ஆனா, அதுக்கு றெக்கை இல்லையே... இவ்வளவு கனமான வீட்டை எப்படித் தூக்கிட்டுப் பறக்க முடியும்?”

“அவ்வளவு பெரிய டைனோசர் பறந்ததே…?”

“இந்த வீடு உனக்கு அவ்வளவு பிடிக்குமா?” என்று கேட்டார் அம்மா.

“ஆமா… வீடு மட்டுமில்ல… பக்கத்து வீட்டு வினீத், பின்னாடி வீட்டு அமுதா… இன்னும் பலரைப் பிடிக்கும். எல்லாரையும் வீட்டோட சேர்த்து நாம போற ஊருக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்மா” என்றாள் வெண்மதி.

அம்மாவுக்கு ஆச்சரியமாகிவிட்டது. “மதுரை உனக்குப் பிடிக்காதா?” என்று கேட்டார்.

“மதுரை பெரிய ஊருதான். ஆனா, எனக்கு அங்க பிரெண்ட்ஸ் இல்லையே...”

“அங்கே போன பிறகு பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க. அதையெல்லாம் நினைச்சு கவலைப்படாதே.”

“ஆனா, வினீத்தையும் அமுதாவையும்போல் இருக்க மாட்டாங்களே…”

“இவங்களைப் போலவே அங்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பாங்க. அப்பாவுக்கு மாற்றலாகிவிட்டதே… நமக்கு வேறு வழியில்லையே வெண்மதி...”

கண்கள் கலங்க அம்மாவின் மடியில் தலை புதைத்து விசும்பினாள் வெண்மதி.

“ஏம்மா… அப்பா மதுரையில வீடு பார்த்துட்டாரா?” என்று கேட்டாள் வெண்மதி.

“ம்…”

“இந்த வீடு மாதிரி அழகா இருக்குமா?”

“இருக்கும்! ஆனா, ரெண்டாவது மாடி. ஜான்சன் வீடு மாதிரி அது அபார்ட்மென்ட் வீடு!”

“அங்கே விளையாட இடமே இருக்காதும்மா. அங்கே மரம் இருக்காம்மா?”

இல்லை என்பதுபோல் தலையாட்டினார் அம்மா.

“எனக்கு அந்த வீடு பிடிக்கவேயில்லை. என் நண்பர்கள்தாம் இல்லை என்றால், மரத்து நண்பர்களும் இருக்க மாட்டாங்களா?”

“மரத்து நண்பர்களா?”

வெண்மதி சந்தோஷமாக, “காலையில எழுந்ததும் பல் விளக்கிக்கிட்டே இங்க வந்துடுவேன். அப்ப ரெண்டு காக்கா இந்தக் கிளையில வந்து உட்காருங்க. நான் அதுங்களுக்கு வணக்கம் சொல்வேன். அதுங்களும் வணக்கம் சொல்லுங்க. சில நிமிடங்கள் பேசிக்கொள்வோம். அப்புறம் அணில்கள் ஓடிவரும். அதுங்களுக்கும் ‘ஹாய்’ சொல்வேன். கிளிகள் வந்து என் தோள் மேல உட்கார்ந்து காதுக்குள் ரகசியம் பேசும். அதைப் பார்த்து மைனா போட்டிபோட்டுக்கிட்டு என்னைக் கூப்பிடும். இவங்களை எல்லாம் பார்த்துப் பேசிட்டுப் போறதாலதான் நான் எப்பவும் சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கேன்” என்று சொல்லி முடித்தாள்.

“இவ்வளவு எல்லாம் காலையில் நடக்குதா! நான் கவனிக்காம விட்டுட்டேனே...”

“சாயங்காலம் அமுதா, வினீத் எல்லாம் சேர்ந்து இந்த மரத்தடியில்தான் விளையாடுவோம்” என்று வெண்மதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இரண்டு சிட்டுக்குருவிகள் அவளை நோக்கிப் பறந்து வந்தன.

அம்மாவுக்கு அந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியமாகிவிட்டது.

“நீங்க இருக்கிறதால அதுங்க பயந்துட்டு ஓடிருச்சுங்க. இல்லைனா விளையாடுங்க” என்று வெண்மதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிளிகள் கத்தின.

வெண்மதி எதற்காக அடிக்கடி மொட்டைமாடிக்குச் செல்கிறாள் என்று அம்மாவுக்கு இப்போது புரிந்தது.

“நாம வீட்டைக் காலி பண்றதும் நல்லதுதான். குமார் அங்கிள் இந்த மரத்தை எல்லாம் வெட்டிட்டு இன்னொரு வீடு கட்டப் போறதா சொல்லிட்டு இருந்தார். அதையெல்லாம் நீ தாங்க மாட்டே” என்றார் அம்மா.

வெண்மதிக்கு அழுகை வந்தது.

“இந்த மரத்துல இருக்கிற காக்கா, குருவி, அணிலெல்லாம் எங்கேம்மா போகும்?”

அம்மாவுக்குப் பதில் சொல்ல இயலவில்லை.

மறுநாள் காலை. அம்மாவுக்கு உதவியாகத் துணிகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள் வெண்மதி.

அப்போது அழைப்புமணி அடித்தது.

குமார் நின்றுகொண்டிருந்தார். அவரை அழைத்து காபி கொடுத்தார் அம்மா.

“வெண்மதி, எங்களை எல்லாம் விட்டுட்டு நீ கிளம்பிட்டே...” என்று சிரித்தார் குமார்.

“வீடு கட்டப் போறீங்களா அங்கிள்? இந்த மரங்களையும் வெட்டிடுவீங்களா?”

“வீடு கட்டலாம்னுதான் நினைச்சேன். ஆனா, ஆன்ட்டிக்கு இதில் விருப்பமில்லை. மரங்களை வெட்டக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால நாங்களே இந்த வீட்டுக்கு வந்துடப் போறோம்” என்றார் குமார்.

வெண்மதி மகிழ்ச்சியோடு நன்றி சொன்னாள்.

“இவளுக்கு இந்த மரங்களில் நிறைய நண்பர்கள் இருக்காங்க. அதான் நீங்க வீடு கட்டப்போறீங்கன்னு சொன்னதும் வருத்தமாயிட்டா” என்றார் அம்மா.

“ஓ... அப்படியா! உன்னோட நண்பர்களுக்காக இன்னும் இரண்டு கொய்யா மரங்களை வைக்கிறேன். சந்தோஷமா வெண்மதி?” என்று கேட்டார் குமார்.

“ஓ, தேங்க்ஸ் அங்கிள். அம்மா, மதுரைக்கு எப்ப கிளம்பறோம்?” என்று சிரித்தாள் வெண்மதி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in