கதை: மன்னரிடம் கேள்வி கேட்ட ‘தீப்பொறி’ திலகா

கதை: மன்னரிடம் கேள்வி கேட்ட ‘தீப்பொறி’ திலகா
Updated on
2 min read

மாத்தூர் ஓர் அழகிய மலையடிவாரக் கிராமம். பெரிய மரங்கள் சூழ்ந்த அந்தக் கிராமத்தில், நாவல் மரங்களின் நிழல்தான் சொர்க்க பூமி. சிறுவரும் சிறுமியரும் கவலையின்றிச் சிரித்து மகிழும் அன்புப் பூங்கா. மரத்தின் மீது புறாக்களும் காகங்களும் கிளிகளும் கூடு கட்டி, குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன.

கருக்கலில் பறவைகளின் இன்னிசை, பகல் பொழுதுகளில் சிறார்களின் விளையாட்டு, இருள் கவியும் நேரத்தில் ஊர்ப் பெரியவர்களின் ஓய்வு மன்றம் என எப்பொழுதும் அந்த மரத்தடி கலகலப்பாக இருக்கும்.

அவ்வப்போது குரங்குகளின் கூட்டம் வந்து கிளைகளில் விளையாடி, கனிகளைச் சிதறடிக்கும். அருகில் இருந்த கொற்றவை கோயிலில் பூசைகள் நடக்கும். அங்கு கொடுக்கும் பால், தேன் கலந்த பழங்களைச் சிறார்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

மீண்டும் கிளைகளில் ஏறிக் குதித்து, ஊஞ்சலாடி, ஓடிப்பிடித்து விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பார்கள். திடீர் திடீரென்று பாண்டி, நொண்டி, கவண் எறிதல், கிளித்தட்டு என்று விளையாட்டுகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சில நேரம் அவர்களுக்குள் சிறு சண்டைகளும் வந்துவிடும்.

“தேவி, நீ காலை கோட்டுக்கு வெளிலதான் வச்ச?”

“இல்ல, நா அதைத் தாண்டிதான் வச்சேன்.”

“திலகா… இங்க வா… தேவி பொய் சொல்றா.”

திலகாதான் அவர்களின் தலைவி. அவள் குரலும் பேச்சும் கம்பீரமாக இருக்கும். புத்திசாலி.

“தேவி, திரும்பத் தாண்டு. எல்லாக் கட்டத்திலயும் கால் நல்லா உள்ள இருக்கணும்.”

திலகா சொன்னால், பலரும் கேட்டுக்கொள்வார்கள். ஏனென்றால், அவள் சொல்வது நியாயமாக இருக்கும்.

ஒரு நாள் அருகில் இருந்த காட்டில் வேட்டையாடிவிட்டு, அந்தக் கிராமத்தின் வழியே வந்தார் மன்னர் வேழவேந்தன்.

மன்னரின் படைகள் நாவல் மரத்தடியில் ஓய்வு எடுத்தன. வீரர்களையும் குதிரைகளையும் வேடிக்கை பார்த்தபடி, ஓர் ஓரமாக நின்றுகொண்டிருந்தார்கள் சிறார்கள்.

சில குரங்குகள் படை வீரர்களின் தலைப்பாகையை எடுத்துக்கொண்டு மரக்கிளைக்குக் கிளை தாவின.

படை வீரர்கள் குரங்குகளின் பின்னால், ‘ஹோ, ஹோ’ என்று கத்திக்கொண்டும் குதித்துக்கொண்டும் இருந்ததைப் பார்த்து, சிறார்கள் சிரித்தனர்.

ஒரு குரங்கு மன்னரின் தலைப்பாகையை எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் ஓடியது. இப்போது, எல்லார் கவனமும் மன்னர் மீதும் மன்னர் தலைப்பாகையின் மீதும்தான் இருந்தது.

‘அங்க இருக்கு… அங்க … அங்க…’ எனச் சிறுவர்கள் படைவீரர்களுடன் ஓடிக்கொண்டிருக்க, அந்தக் குரங்கோ மரத்தின் மேல் ஏறி உச்சிக் கிளைக்குத் தாவியது.

மன்னர் முகம் சிவந்தது. குரலை உயர்த்தி, “வீரர்களே, எடுங்கள் உங்கள் அம்புகளை” எனக் கர்ஜித்தார்.

சட்டென்று சிரிப்புக் காட்சி சண்டைக் காட்சியாக மாறியது.

“எல்லாக் குரங்குகளையும் அம்புகளால் வீழ்த்துங்கள். மரங்களை வெட்டுங்கள்” என்று மன்னர் ஆணையிட்டார்.

படைவீரர்கள் ஆயத்தமாயினர்.

கிராமத்தின் உயிர்நாடியே இந்த நாவல் மரத்தடிதானே! இதைச் சிதைப்பதா?

அனைவரும் திகைத்து நின்றுகொண்டிருக்க, கம்பீரமாகக் குரல் கொடுத்தாள் ‘தீப்பொறி’ திலகா .

“நிறுத்துங்கள் மன்னா...” என்கிற திலகாவின் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார் மன்னர். சின்னஞ்சிறு பெண் திலகா, கவண்கல்லுடன் தன் முன் நிற்பதைப் பார்த்தார்.

“உங்களுக்குத் தலைப்பாகைதானே வேண்டும்? ஒரு நிமிடம் பொறுங்கள்” என்று கேட்டாள் திலகா.

மன்னரும் தலை அசைத்தார்.

தன் தோழிகளிடம் ஏதோ சொன்னாள் திலகா. பிறகு மரக்கிளைகளை நோக்கி ஒரு கல்லை வீசினாள்.

சிறுமிகள் வாழைப் பழங்களைக் கொண்டுவந்து, குரங்குகளுக்கு உணவு வைக்கும் கல்மேட்டில் பரப்பினர்.

கிளைகளில் இருந்து குதித்த குரங்குகள் வாழைப் பழங்களை நோக்கி ஓடின.

தலைப்பாகைகள் இங்கும் அங்குமாக, குரங்குகளால் வீசப்பட்டன.

படைவீரர்களின் தலைப்பாகைக்கும் மன்னரின் தலைப் பாகைக்கும் குரங்குகள் வித்தியாசம் பார்க்க வில்லை.

வீரர்களோ மன்னரின் தலைப்பாகையைத் தேடி எடுத்து, சுத்தம் செய்ய ஓடினர்.

மன்னர் வேழவேந்தன் திலகாவை அழைத்து, பொன்மாலை ஒன்றைப் பரிசளித்தார்.

“அருமையான செயல்பாடு! அம்புமழையில் குரங்குகள் வீழாமலும், வாள் வீச்சில் மரக்கிளைகள் வெட்டுப்படாமலும் காப்பாற்றிவிட்டாய்! இனி நானும் தவறான முடிவை எடுக்க மாட்டேன்” என்றார் மன்னர்.

“மன்னா, மரங்கள் தரும் நிழலைக் கண்டுதானே தாங்களே இங்கு வந்தீர்கள்? இந்த மரங்களும் அதன் கிளைகளும் கனிகளும் நிழலும் மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சொந்தம் அல்லவா” என்று கேட்டாள் தீப்பொறி திலகா.

“உண்மைதானம்மா! இனி நம் நாட்டில் மரங்கள் வளர்ப்பதிலும் மற்ற உயிர்களின் நலம் காப்பதிலும் முழுக்கவனம் செலுத்துவேன்” என்ற மன்னரின் அறிவிப்புக்குச் சிறார்கள் அனைவரும் மகிழ்ச்சியாகக் கைதட்டினர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in