கதை: பூனை குறுக்கே ஓடினால்...

கதை: பூனை குறுக்கே ஓடினால்...

Published on

சூரியன் உதயமாகும்போது யாரோ ஒருவர் துரத்திக்கொண்டு வந்ததால் பூனை மூச்சு வாங்க ஓடியது. பயத்தில் அருகில் இருந்த பழைய வீட்டின் பின்புறம் சென்று பதுங்கிக்கொண்டது.

பூனையைக் கண்ட பல்லி, தன்னைத்தான் குறிவைத்துத் தாக்க வருகிறதோ என்று அலறியடித்து, கூரையின் உச்சிக்குச் சென்று பதுங்கியது.

பல்லியைப் பார்த்த பூனை, “நான் ஒன்றும் உன்னைப் பிடிப்பதற்காக ஓடி வரவில்லை. நானே தப்பித்தோம் பிழைத்தோம் என்று இங்கே வந்து பதுங்கி இருக்கிறேன். நீ பயந்தவனைப் பார்த்து இப்படிப் பயப்படறீயே!” என்று சொல்லிவிட்டு நட்புடன் புன்னகை செய்தது.

கண்களை உருட்டிப் பார்த்த பல்லி, ‘ம்… ஹும்… நான் உன்கிட்ட சிக்குனா சங்குதான்’ என்று நினைத்தது. ஆனாலும் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சரி, ஏன் இப்படி ஓடி வந்தே?” என்று கேட்டது.

“அந்தப் பச்சை நிற வீட்டில் கல்யாணம். மாப்பிள்ளையை அழைச்சிட்டுப் போகும்போது நான் குறுக்கே சென்றுவிட்டேனாம். அதான் கோபத்தில் துரத்தினாங்க.”

“இது என்ன அநியாயம்? பாதை எல்லாருக்கும் பொதுதானே? இந்தத் தெரு, நாடு, பூமி எல்லாம் அவங்களுக்கு மட்டும்தான் சொந்தமா?” என்று கோபத்துடன் கேட்டது பல்லி.

“எனக்குப் பால் ஊற்றியும் வளர்ப்பார்கள். நல்ல காரியத்துக்குப் புறப்படும்போது குறுக்கே வந்தால், அந்தக் காரியம் நடக்காது என்று நினைத்துக்கொண்டு கோபத்தில் அடிக்கவும் வருவார்கள். கல்லை எடுத்துக்கொண்டு ஒருவர் என்னைத் துரத்தினார். அதான் இப்படி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டேன்.”

“நீ குறுக்கே வந்ததால், கல்யாணம் நின்றுவிடுமா என்ன? இன்று கல்யாணம் நடந்தால், இந்த மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள்.”

“அப்படி எல்லாம் நினைக்காதே… வீட்டுக்குள் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்புவார்கள். அப்படிச் செய்ததால்தான் கல்யாணம் நடந்தது என்று நினைத்துக்கொள்வார்கள்.”

“ஐயோ… என்ன நம்பிக்கையோ? அவர்கள்தாம் ஒரு வழியும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களே, அப்புறம் ஏன் உன்னைத் துரத்த வேண்டும்?”

“ம்... உனக்குத் தெரிகிறது. அவர்களுக்குத் தெரியவில்லையே...”

“உன் இனமான புலி, சிங்கம் எதிரில் வந்தாலும் இப்படித்தான் துரத்துவார்களா?”

“புலியும் சிங்கமும்தான் இவர்களைத் துரத்தும். ஓடி ஒளிவார்கள்” என்று பூனை சொன்ன உடன், பல்லி சிரித்தது.

“நிலாவையும் சூரியனையும் ஆராய்ச்சி செய்ய விண்கலன்களையும் அனுப்புகிறார்கள். அவர்களைப் போன்று ஒரு உயிர் குறுக்கே வந்தால் காரியம் நடக்காது என்றும் நம்புகிறார்கள். இவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”

“நீ குறுக்கே நடந்து போனால்தான் பிரச்சினை. நான் குரல் கொடுத்தாலே பிரச்சினை” என்று வருத்தத்துடன் சொன்னது பல்லி.

“என்னது உனக்கும் பிரச்சினையா?” என்று அதிர்ச்சி அடைந்தது பூனை.

“அவர்கள் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும்போது நான் குரல் கொடுத்துவிட்டால், ‘பல்லியே சொல்லிடுச்சு’ என்பார்கள். சில இடங்களில் இருந்து குரல் கொடுத்தால் நல்லது நடக்கும் என்றும் சில இடங்களில் இருந்து குரல் கொடுத்தால் கெட்டது நடக்கும் என்று கூறிக்கொள்வார்கள். நன்மைக்கும் தீமைக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை.”

“உங்களுக்குள் நீங்கள் தகவல் பரிமாறிக்கொள்வதைக்கூட, சகுனம் என்றால் என்னதான் சொல்வது?”

“பஞ்சாங்கத்தில் பல்லி சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறதாம். நாங்கள் தலை மீது விழுந்தால் இந்தப் பலன், கை மேல் விழுந்தால் அந்தப் பலன், தோளில் விழுந்தால் இந்தப் பலன் என்று விதவிதமான பலன்கள்.”

“ஐயோ... எனக்கு ஒரு கஷ்டம் என்றால், உனக்கு ஓராயிரம் கஷ்டம் இருக்கும் போலிருக்கே! சரி, உங்களை யாராவது பிடிக்க வந்தால், வாலை வெட்டிவிட்டுத் தப்பி விடுகிறீர்களே, அது எப்படி?” என்று கேட்டது பூனை.

“அது இயற்கை எங்களுக்குக் கொடுத்த கொடை. நாங்கள் தப்பிப்பதற்கு இந்த உத்தியைத்தான் பயன்படுத்துவோம். மனிதர்களுக்கு நகம், முடி வளர்வதைப் போல் எங்களுக்கும் விரைவில் வால் வளர்ந்துவிடும்.”

“வீட்டுக்குள் வரும் விஷப் பூச்சிகள், வண்டுகள், கொசு போன்றவற்றை உண்டு வீட்டைக் காப்பாற்றத்தான் செய்கிறாய். அதை ஏன் மனிதர்கள் கண்டுகொள்ளாமல் உன்னைத் துரத்துகிறார்கள் என்று புரியவில்லை. அது சரி, நீயும் நானும் ஏன் வழக்கத்தைவிட இவ்வளவு சிந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்?”

“இந்தக் கட்டிடத்துக்குள் வந்தால்தான் எனக்கு இப்படி எல்லாம் சிந்தனை வருகிறது” என்றது பல்லி.

“ஏன் என்று எனக்குத் தெரிந்துவிட்டது” என்று சிரித்தது பூனை.

“ஏய், சொல்லுப்பா” என்றது பல்லி.

“இது பெரியாரின் பக்கத்து வீடு. அதான் நம்மையும் சிந்திக்க வைத்துவிட்டது. கேள்வி கேட்க வைத்துவிட்டது” என்று பூனை சொன்னதும் பல்லி மகிழ்ச்சியில் கத்தியது.

அப்போது, “நாம் செய்வது சரி என்று பல்லியே சொல்லிவிட்டது” என்கிற குரல் தெருவிலிருந்து வந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in