

செங்காந்தளுக்கு நாய்க்குட்டி என்றால் அவ்வளவு பிடிக்கும். செங்காந்தள் அவளுடைய ரஃப் நோட்டில் ஒரு நாய்க்குட்டியை வரைந்தாள். நோட்டைத் தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கிவிட்டாள்.
“பௌ பௌ” என்று குட்டி நாயின் கீச்சுக்குரல் கேட்டது. அந்தச் சத்தம் கேட்டுதான் செங்காந்தள் கண்விழித்தாள்.
ரஃப் நோட்டில் அவள் வரைந்த குட்டி நாய் அருகில் நின்றது. ஆச்சரியமாக இருந்தது. கறுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடன் அழகாக இருந்தது. வாலை ஆட்டிக் கொண்டேயிருந்தது.
செங்காந்தள் மகிழ்ச்சியில் ‘ஐய்... ஐய்...’ என்று கத்தினாள். குதித்தாள். குட்டி நாயும் குதித்தது.
உடனே அந்தக் குட்டி நாய்க்கு ஒரு பெயரும் வைத்தாள்.
‘பிளாக்கி.’
“என்ன சத்தம்?” என்று கேட்டுக்கொண்டே அம்மா வந்தார்.
“ஒண்ணுமில்லையே...” என்றாள் செங்காந்தள்.
அம்மாவும் அப்பாவும் அலுவலகம் போகும் பரபரப்பில் இருந்தார்கள். அதனால் கவனிக்கவில்லை. பிளாக்கி ரஃப் நோட்டில் போய் ஒளிந்துகொண்டது. செங்காந்தள் ரஃப் நோட்டை எடுத்துப் பத்திரமாகப் பைக்குள் வைத்தாள்.
அப்போது பிளாக்கி அன்புடன் செங்காந்தளின் கையை நக்கியது.
"பசிக்குதா?” என்று செங்காந்தள் கேட்டாள்.
பைக்குள்ளிருந்து வாலை ஆட்டியது. உடனே செங்காந்தள் பிஸ்கெட் துண்டுகளைப் போட்டாள். கர்ர்ரக் முர்ர்ரக் என்று பிளாக்கி சாப்பிடும் சத்தம் கேட்டது.
செங்காந்தள் எப்போதும் ரஃப் நோட்டுடன்தான் இல்லையில்லை... பிளாக்கியுடன்தான் இருந்தாள். யாரும் இல்லை என்றால் பிளாக்கி வெளியில் வந்துவிடும். செங்காந்தள் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கும். ஞீம் ஞீம் என்று பதில் சொல்லும். அவள் வாசித்த கதைகளைச் சொல்வாள். பிளாக்கி தனக்குத் தெரிந்த கதைகளைச் சொல்லும். இரண்டு பேரும் அப்படி நண்பர்களாகி விட்டார்கள்.
இரவில் பிளாக்கிக்குத் தூக்கமே வராது. அது செங்காந்தளின் படுக்கையைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். போர்வையை இழுக்கும். அவளை எழுப்பிப் பார்க்கும். ஏதாவது சத்தம் கேட்டால் காதுகளை விடைத்துக் கொண்டு உற்றுக் கேட்கும்.
எலியோ பூனையோ போனால் அவ்வளவுதான். உடனே தன்னுடைய கீச்சுக்குரலால் ‘பௌ பௌ பௌ பௌ’ என்று கத்தும். அந்தச் சத்தம் வேறு யாருக்கும் கேட்காது. செங்காந்தளுக்கு மட்டும்தான் கேட்கும்.
"பிளாக்கி பேசாமல் படு" என்பாள். உடனே அமைதியாகி விடும். பிளாக்கி சமர்த்தில்லையா!
இப்போது செங்காந்தள் அடுத்த வகுப்புக்குப் போய்விட்டாள். ஆனால், அந்தப் பழைய ரஃப் நோட்டை பைக்குள்ளேயே வைத்திருந்தாள். அழுக்காகக் கந்தலாக இருந்தாலும் அதைக் கீழே வைக்கமாட்டாள்.
ஒரு நாள் அம்மாகூட, “ஏன் அந்தப் பழைய நோட்டை வைச்சிருக்கே? புது நோட்டு வாங்கிக் கொடுத்திருக்கேன்ல...” என்று கேட்டார்.
அதற்குச் செங்காந்தள், “அது என் பிரெண்டும்மா...” என்று பதில் சொன்னாள்.
ஒரு விடுமுறை நாளில் செங்காந்தள் உறங்கும் போது பழைய பேப்பர் வாங்குபவரிடம் அந்த நோட்டைப் போட்டுவிட்டார் அம்மா. எழுந்து நோட்டைத் தேடினாள் செங்காந்தள். அவளுக்கு அழுகையாக வந்தது. அம்மாவிடம் போய், “என் பிளாக்கியை ஏன் கொடுத்தீங்கம்மா?” என்று கேட்டாள்.
“என்னது பிளாக்கியா… புது நோட்டு இருக்குல்ல” என்று சிரித்துக்கொண்டே போய்விட்டார் அம்மா.
அன்று இரவு செங்காந்தள் புது ரஃப்நோட்டை எடுத்தாள். அதில் அப்புவை வரைந்தாள். அறையே கிடுகிடுத்தது.
செங்காந்தளுக்கு முன்னால் வந்து நின்றது அப்பு!
அப்பு யார் என்று உங்களுக்குத்தான் தெரியுமே!