டிங்குவிடம் கேளுங்கள்: சிங்கத்தையும் புலியையும் வீட்டில் வளர்க்கலாமா?

டிங்குவிடம் கேளுங்கள்: சிங்கத்தையும் புலியையும் வீட்டில் வளர்க்கலாமா?
Updated on
2 min read

கண்ணீர் ஏன் உப்பாக இருக்கிறது, டிங்கு? - அ. நிதர்சனா, 7-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

கண்ணீரில் 98 சதவீதம் நீர், 2 சதவீதம் உப்பு, புரதங்கள் இருக்கின்றன. எலக்ட்ரோலைட்டுகள் எனப்படும் இயற்கையான உப்புகள் நம் உடலில் இருப்பதால், உடலில் இருக்கும் அனைத்துத் திரவங்களும் உப்பாக இருக்கும். ரத்தம்கூட உப்புக் கரிக்கும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். அதனால் கண்ணீரும் உப்புக் கரிக்கிறது, நிதர்சனா.

இரவில் வானிலிருந்து ஏதோ ஒன்று எரிந்துகொண்டே கீழே விழுந்ததைப் பார்த்தேன். அது என்ன, டிங்கு? - ர. தக்‌ஷணா, 5-ம் வகுப்பு, தீக்‌ஷா வித்யா மந்திர், ஆனைமலை.

உங்களைப் போல் நானும் பல முறை இந்தக் காட்சியைக் கண்டிருக்கிறேன். இதை எரிநட்சத்திரம் என்று சொல்வார்கள். நம் சூரிய மண்டலத்தில் கோடிக்கணக்கான பாறைகளும் தூசுகளும் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில விண்வீழ் கல் பூமியின் மேற்பரப்பை அடையும்போது, காற்று மண்டலத்தில் உராய்ந்து, எரிய ஆரம்பிக்கின்றன. அதைத்தான் நாம் அடிக்கடி வானில் காண்கிறோம், தக்‌ஷணா.

சிங்கம், புலியை குட்டியாக இருக்கும்போதே வீட்டில் வளர்த்தால் அவை நாய், பூனை போலச் சாதுவாகிவிடுமா, டிங்கு? - எஸ்.எம். ஆதன் இளவேனில், 5-ம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, கரூர்.

பிறந்த குட்டியை நாம் எடுத்து வளர்த்தால் புலிக்குட்டியும் சிங்கக்குட்டியும் அன்பாகத்தான் இருக்கும். அவற்றுக்கு உணவு கொடுப்பதில் கவனமும் அக்கறையும் அதிகம் தேவைப்படும். குட்டியாக இருக்கும்போது வளர்ப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், வளர்ந்த பிறகு சிங்கமோ புலியோ நமக்குச் செல்ல விலங்காக இருக்காது. நம்மைவிட எடையிலும் வலிமையிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

பிரச்சினை வராதவரை வளர்த்தவர்களை எதுவும் செய்யாது. ஏதாவது ஒரு நேரத்தில் அவற்றின் இயல்பான குணம் வெளிப்படலாம். அப்போது அவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். அதனால், காடுகளில் வாழக்கூடிய சிங்கத்தையும் புலியையும் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டுவிடுவது நமக்கு மட்டுமல்ல அவற்றுக்கும் நல்லது, ஆதன் இளஞ்சேரல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in