கதை: இன்று என்ன சமையல்?

கதை: இன்று என்ன சமையல்?
Updated on
2 min read

சமையலறைக்குள் நுழைந்தார் அம்மா. கூடையில் இருந்த காய்கறிகள் எல்லாம் சட்டென்று தங்களின் பேச்சை நிறுத்தின. காய்கறிகளை எடுத்துத் தண்ணீருக்குள் போடும்போது வர்ஷாவின் குரல் கேட்டது. அப்படியே வேலையை நிறுத்திவிட்டு, முன் அறை நோக்கிச் சென்றார் அம்மா.

முருங்கைக்காய் மீண்டும் பேச்சை ஆரம்பித்தது.

“கரிசல் மண்ணில் விளைந்த பச்சை வாழைக்காயே! இன்று என்ன சமையல் என்று உன்னால் கூற முடியுமா?”

“என்ன சமையல் என்று என்னால் ஊகிக்க முடியலை. சரளை மண்ணில் விளைந்த நிலக்கடலையிடம் கேட்டுப் பார்” என்றது கரிசல் மண்ணில் விளைந்த பச்சை வாழைக்காய்.

முருங்கைக்காய்க்கு இன்று என்ன சமையல் என்று தெரிந்துகொள்வதில் ஏனோ ஆர்வம் அதிகமாக இருந்தது.

ஆகவே அருகில் இருந்த நிலக்கடலையிடம், “கரிசல் மண்ணில்விளைந்த பச்சை வாழைக்காய்க்கு இன்று என்ன சமையல் என்று தெரியவில்லையாம். சரளை மண்ணில் விளைந்த நிலக் கடலையே, இன்று என்ன சமையல் என்று உன்னால் சொல்ல முடியுமா?”என்று கேட்டது.

“என்னாலும் இன்று ஊகிக்க இயலவில்லை. பொதுவாக இன்று என்ன சமையல் என்று காலையிலேயே பேசிக்கொள்வார்கள். இன்று யாரும் இதுவரை எதுவும் பேசவில்லை. அதனால், தோட்டத்தில் விளைந்த சிவப்புத் தக்காளியிடம் கேட்டுப் பாரேன்” என்றது நிலக்கடலை.

முருங்கைக்காய் தோட்டத்தில் விளைந்த சிவப்புத் தக்காளியைப் பார்த்து, “கரிசல் மண்ணில் விளைந்த பச்சை வாழைக்காய், சரளை மண்ணில் விளைந்த நிலக்கடலை ஆகியோருக்கு இன்று என்ன சமையல் என்று ஊகிக்க முடியவில்லை. தோட்டத்தில் விளைந்த சிவப்புத் தக்காளியே, உனக்காவது இன்று என்ன சமையல் என்று தெரியுமா?” என்று கேட்டது.

“இன்று நான் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதனால் எதையும் கவனிக்கவில்லை. வண்டல் மண்ணில் விளைந்த பச்சை மிளகாயிடம் கேட்டுப் பார்” என்றது சிவப்புத் தக்காளி.

முருங்கைக்காய் விடுவதாக இல்லை. யாரையாவது சொல்ல வைத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

“கரிசல் மண்ணில் விளைந்த பச்சை வாழைக்காய், சரளை மண்ணில் விளைந்த நிலக்கடலை, தோட்டத்தில் விளைந்த சிவப்புத் தக்காளிக்கு இன்று என்ன சமையல் என்று தெரியவில்லை. வண்டல் மண்ணில் விளைந்த பச்சை மிளகாயே, இன்று என்ன சமையல் என்று கூற முடியுமா?” என்று கேட்டது முருங்கைக்காய்.

“ஓ, என்னாலும் இன்று என்ன சமையல் என்பதை ஊகிக்க முடியவில்லையே... கவலை வேண்டாம், மலையில் விளைந்த பீட்ரூட்டிடம் கேள்” என்றது பச்சை மிளகாய்.

முருங்கைக்காய்க்கு ஏமாற்றமாகி விட்டது. ஆனாலும் முயற்சியை அது கைவிடவில்லை.

“கரிசல் மண்ணில் விளைந்த பச்சை வாழைக்காய், சரளை மண்ணில் விளைந்த நிலக்கடலை, தோட்டத்தில் விளைந்த சிவப்புத் தக்காளி, வண்டல் மண்ணில் விளைந்த பச்சை மிளகாய்க்கு இன்று என்ன சமையல் என்பதை ஊகிக்க முடியவில்லை. மலையில் விளைந்த பீட்ரூட்டே இன்று என்ன சமையல் என்று கூற முடியுமா? ” என்று கேட்டது முருங்கைக்காய்.

பீட்ரூட் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பதால் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தது.

“என்ன சமையலாக இருந்தால் உனக்கு என்ன?”

“ஆர்வம்தான்... வேறு ஒன்றும் இல்லை.”

“செம்மண்ணில் விளைந்த பட்டாணியிடம் கேள். அது எல்லா வற்றையும் நன்றாகக் கவனிக்கும்” என்று சொன்னது பீட்ரூட்.

“கரிசல் மண்ணில் விளைந்த பச்சை வாழைக்காய், சரளை மண்ணில் விளைந்த நிலக்கடலை, தோட்டத்தில் விளைந்த சிவப்புத் தக்காளி, வண்டல் மண்ணில் விளைந்த பச்சை மிளகாய், மலையில் விளைந்த பீட்ரூட்டுக்கு இன்று என்ன சமையல் என்று தெரியவில்லை. செம்மண்ணில் விளைந்த பட்டாணியே, இன்று என்ன சமையல் என்று உன்னால் கூற முடியுமா?” என்று கேட்டது முருங்கைக்காய்.

“எனக்கு என்னவோ இன்னிக்கு வாங்கிய காய்கறிகளில் இருந்து ‘அவியல்’ செய்வார்கள் என்று நினைக்கிறேன்” என்றது பட்டாணி.

அப்போது அம்மா சமைய லறைக்குள் நுழைந்தார். மீண்டும் அனைத்துக் காய்கறிகளும் பேச்சை நிறுத்தின.

அம்மாவைத் தேடிக்கொண்டு வந்த வர்ஷா, “அம்மா, இன்னிக்கு கரிசல் மண்ணில் விளைந்த பச்சை வாழைக்காய், சரளை மண்ணில் விளைந்த நிலக்கடலை, தோட்டத்தில் விளைந்த சிவப்புத் தக்காளி, வண்டல் மண்ணில் விளைந்த பச்சை மிளகாய், மலையில் விளைந்த பீட்ரூட், செம்மண்ணில் விளைந்த பட்டாணியை வைத்து பிரியாணி செய்யலாமா?” என்று கேட்டாள்.

அம்மாவும் தலையசைத்தார்.

செம்மண்ணில் விளைந்த பட்டாணியைத் தவிர, கரிசல் மண்ணில் விளைந்த பச்சை வாழைக்காய், சரளை மண்ணில் விளைந்த நிலக்கடலை, தோட்டத்தில் விளைந்த சிவப்புத் தக்காளி, வண்டல் மண்ணில் விளைந்த பச்சை மிளகாய், மலையில் விளைந்த பீட்ரூட் ஆகியவை, “நாங்களும் அதைத்தான் நினைத்தோம்” என்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in