Published : 13 Dec 2017 11:55 AM
Last Updated : 13 Dec 2017 11:55 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கண்களை மூடிக்கொண்டால் சுவை தெரியாதா?

நாக்கில் தானே சுவை அரும்புகள் இருக்கின்றன. கண்களை மூடிக்கொண்டால் ஏன் சரியாகச் சொல்ல முடிவதில்லை, டிங்கு?

–வி. சூரியகலா, அய்யம்பேட்டை.

நல்ல கேள்வி சூரியகலா. சுவையை அறிவதற்கு நாக்கின் பங்கு மட்டும் போதுமானதில்லை. மூக்கு, கண்களின் பங்கும் முக்கியமானது. ஓர் உணவைப் பார்த்து, அதன் நறுமணத்தை முகர்ந்து, சாப்பிடும்போதுதான் சரியான சுவையை நாம் அறிய முடியும். கண்களை மூடிக்கொண்டால் அது என்ன உணவுப் பொருள் என்று நமக்குத் தெரியாது. அதனால் சரியாகச் சொல்ல முடியாது. மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டால் சுவை அறிதல் மிகவும் கடினமாகிவிடும். கண்களை மூடிக்கொண்டு, மைசூர்பா சாப்பிட விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

உங்கள் நாக்கில் ஒரு கற்கண்டைத் தேய்த்தால் நீங்கள் அதை மைசூர்பா என்றுதான் சொல்வீர்கள். ஏனென்றால் மைசூர்பா எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அதைக் கற்பனை செய்துகொண்டு காத்திருப்பீர்கள். அந்த நேரம் நாக்கில் இனிப்பு பட்டதும், அதை மைசூர்பா என்று நினைத்துக்கொள்வீர்கள். கண்களையும் மூக்கையும் மூடிக்கொண்டு, கேரட்டைச் சாப்பிட்டாலும் புடலங்காயைச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். சரியாக உங்களுக்குச் சுவை புரிபடாது. கலீலியோ சொன்னதுபோல் நீங்களே இந்த எளிய பரிசோதனையைச் செய்துபார்த்து, அறிந்துகொள்ளலாம்.

எங்கள் ஊர் இருட்டுக் கடை அல்வா சாப்பிட்டது உண்டா, டிங்கு?

-எஸ். சிவன்முத்துசுப்பிரமணியன்,8-ம் வகுப்பு, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி.

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள் சிவன்முத்து! பல முறை இருட்டுக்கடை அல்வாவைச் சாப்பிட்டிருக்கிறேன். போன வருடம் இருட்டுக் கடையில் வாழை இலையில் சுடச் சுட அல்வா வாங்கிச் சாப்பிட்டதை மறக்க முடியாது.

13chsuj_tinku3.jpg கரோலின் ஹெர்ஷல் rightபெண் வானியலாளர்கள் இருக்கிறார்களா டிங்கு?

–என். ராகுல், மாயவரம்.

எத்தனையோ பெண்கள் வானியலாளர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். கி.பி. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹைபேஷாவை முதல் பெண் வானியலாளர் என்று சொல்லலாம். 1750-ம் ஆண்டு பிறந்த ஜெர்மானிய வானியலாளர் கரோலின் ஹெர்ஷல், தன்னுடைய பணிக்காக அரசாங்கத்திடம் சம்பளம் பெற்ற முதல் பெண் வானியலாளர். வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண் வானியலாளரும் இவரே.

பத்து வயதில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட கரோலின், 4 அடிக்கு மேல் வளரவில்லை. இவரது அண்ணன் புகழ்பெற்ற விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷல். தன் அண்ணனைப் பார்த்து வானியல் மீது ஆர்வத்தைச் செலுத்தினார்.

தன் வாழ்நாள் முழுவதும் வானியல் ஆய்விலேயே ஈடுபட்டார். இவரது அரும்பணியைச் சிறப்பிக்கும் விதமாகச் சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்துக்கு, கரோலின் ஹெர்ஷல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது ராகுல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x