

கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறாயா டிங்கு? கிறிஸ்துமஸ் என்றதும் உனக்குச் சட்டென்று நினைவில் வருவது எது?
–ஜெ. லாரன்ஸ், கன்னியாகுமரி.
தனிப்பட்ட முறையில் நான் எந்தப் பண்டிகையும் கொண்டாடுவதில்லை, லாரன்ஸ். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை குறித்து நன்றாகவே தெரியும். பள்ளியில் படித்தபோது கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடியிருக்கிறேன், குழந்தை ஏசுவுக்குக் குடில் அமைத்திருக்கிறேன். நண்பர்கள் கொடுக்கும் கேக்கையும் பிரியாணியையும் சுவைத்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும்விட கிறிஸ்துமஸ் என்றவுடன் என் நினைவுக்கு வருவது, சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘A Christmas Carol’ என்ற நாவல்தான்! உலகின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1843-ம் ஆண்டு வெளிவந்தபோதே அதிக வரவேற்பைப் பெற்ற இந்த நாவல், இன்றளவும் தன்னுடைய இடத்தை இழக்கவில்லை!
எபினேசர் ஸ்க்ரூஜ் யாரிடமும் அன்பு காட்ட மாட்டார். ஏராளமாகப் பணம் இருந்தும் ஒருவருக்கும் உதவி செய்ய மாட்டார். கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இவரைத் தேடி மூன்று ஆவிகள் வருகின்றன. முதல் ஆவி ஸ்க்ரூஜின் கடந்த காலத்துக்கு அழைத்துச் சென்று, மகிழ்ச்சியாக இருந்த ஸ்க்ரூஜ், எப்படி சுயநலம் மிக்கவராக மாறுகிறார் என்று காட்டும். அடுத்த ஆவி நிகழ்காலத்தில் சில இடங்களுக்கு அழைத்துச் செல்லும். மூன்றாவது ஆவி எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும். ’ஸ்க்ரூஜ் போன்ற கருமியைப் பார்க்க முடியாது, மிகவும் மோசமானவர்’ என்று மக்கள் பேசிக்கொள்வார்கள். அவரது கல்லறையை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். உடனே மனம் வருந்தி, திருந்தி, எதிர்காலத்தில் தான் கண்டதை நடக்க விடாமல் செய்துவிடுவார் ஸ்க்ரூஜ். இல்லாதவர்களுக்கு உதவுவதும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதும்தானே கிறிஸ்துமஸின் உண்மையான நோக்கம்! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் லாரன்ஸ்!
மிக வேகமாக வளரும் மரம் எது, டிங்கு?
–ஆர். சாந்தி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.
மூங்கில் மரங்களில் சில வகைகள் மிக வேகமாக வளரக்கூடியவை. ஒரு நாளைக்கு 91 செ.மீ. உயரம் வளர்ந்து, கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறது ஒரு மூங்கில் மரம்!
வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் ஏன் வருகிறது, டிங்கு?
- எஸ்.கே. ஜெயலஷ்மி, சென்னை.
வெங்காயத்தில் அலினேஸ், சிஸ்டைன் ப்ரோப்பேனிதியல் சல்பாக்ஸைடு இருக்கின்றன. வெங்காயத்தை நாம் நறுக்கும்போது இந்த இரண்டும் வேதி வினைபுரிந்து, ப்ரோப்பேன் சல்பினிக் அமிலமாக மாற்றமடைகிறது. இந்த அமிலம் விரைவாகக் காற்றில் கலந்து, நம் கண்களை அடைந்து, கண்ணீரை வரவழைக்கிறது, ஜெயலஷ்மி.