கதை: காட்டுக்குள் நூலகம்

கதை: காட்டுக்குள் நூலகம்
Updated on
2 min read

பூவரசங்காட்டில் யார் அந்த ஆசையைத் தூண்டிவிட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அங்கே நூலகம் ஒன்று அமைக்க வேண்டும் என்று எல்லா விலங்குகளும் பேசிக்கொண்டன. ஆனாலும் நூலகம் அமைக்க சிங்கராஜா அனுமதி தரவேண்டுமே என்று அவை யோசித்தன. எனவே விலங்குகள் அனைத்தும் ஒருநாள் சிங்கராஜாவின் இருப்பிடத்துக்கே சென்று, தங்கள் விருப்பத்தைக் கூறின.

சிறிது நேரம் யோசித்த சிங்கராஜா, “நீங்கள் எல்லாரும் சொல்வது நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. ஆனாலும் நூலகம் எப்படி அமைக்கப் போகிறீர்கள் என்று எனக்குக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்?” என்று கேட்டது.

“அரசே, காட்டின் வடக்குப் பகுதியில் பெரிய குகை ஒன்று இருக்கிறதே, அங்கே நம் நூலகத்தை அமைக்கலாம். மழைக்கும் புயலுக்கும்கூட நூலகத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது” என்றது புலி.

“சரி. நூல்களை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?”

“அரசே, கமுக மரத்தின் பாளைகளை நாம் காகிதங்களாகப் பயன்படுத்த முடியும். அவற்றில் நாம் எழுத வேண்டியவற்றை எழுதி நூலாகத் தொகுத்து வைக்கலாம்” என்றது சிறுத்தை.

“நல்ல யோசனைதான். எழுதுவதற்கான மை, எழுதுகோலுக்கு என்ன செய்வீர்கள்?”

“அரசே, சங்கு புஷ்பத்திலிருந்து நீல மை தயாரிக்க முடியும். செங்காந்தள் பூவிலிருந்து சிவப்பு மை தயாரிக்க முடியும். பறவைகளின் உதிர்ந்த இறகுகளில் மையைத் தொட்டு நாம் எழுத முடியும்” என்றது கரடி.

“நூல்களை உருவாக்குவதற்கான யோசனைகளைச் சொன்னீர்கள். ஆனால், நூலில் எதைப் பற்றி எழுதப்போகிறீர்கள்? ஒரு நூலகத்தின் சிறப்பே அங்கே வைக்கப்பட்டிருக்கும் நூல்கள்தாம். என்னென்ன மாதிரியான நூல்களை எழுதி வைக்க வேண்டும் என்று நாளை வந்து என்னிடம் சொல்லுங்கள். அதன் பிறகுதான் நூலகம் அமைக்க அனுமதி தர முடியும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது சிங்கராஜா.

மறுநாள் சிங்கராஜாவின் இருப்பிடத்துக்கு அனைத்து விலங்குகளும் வந்து சேர்ந்தன.

“அவரவர் யோசனையைக் கூறலாம்” என்றது சிங்கராஜா.

“அரசே, காட்டுக்கே தலைவராக விளங்கும் தங்களின் பிடரி மயிர் அழகையும், கம்பீர நடையையும் குறித்த கவிதைகளை நூலாக எழுதி நூலகத்தில் வைக்கலாம்” என்று முன்னே வந்து பணிவோடு சொன்னது சிறுத்தை.

சிறுத்தை சொன்னதைக் கேட்டு புன்னகைத்தது சிங்கராஜா.

“அரசே, தங்களின் வீர தீரத்தையும் வேட்டையாடும் நுட்பத்தையும் நூலாக எழுதி வைக்கலாம்” என்று சொன்னது புலி.

அடுத்து சிங்கராஜாவின் முன்னே வந்து நின்ற கரடி, “அரசே, தங்கள் அழகையும் வீரத்தையும் நூலாக எழுதுவதோடு அரசியைப் பற்றியும், இளவரசர்களைப் பற்றியும் பெருமையாக எழுதி நூலகத்தில் வைக்கலாம்” என்றது.

இப்படி வரிசையாக சிங்கராஜாவின் முன்னே வந்து நின்ற விலங்குகள் பல யோசனைகளைக் கூறின.

அவற்றை எல்லாம் கேட்ட சிங்கராஜா, “அன்பர்களே, எதற்காக நூலகம் அமைக்க வேண்டும் என்கிற யோசனைகளை நீங்கள் கூறினீர்கள். ஆனால், எதுவுமே என்னைத் திருப்திப்படுத்தவில்லை. நூல்களை எழுதவும்,அவற்றைப் பாதுகாக்கவும் பலரது உழைப்புதான் வீணாகும். அதனால், நம் காட்டில் நூலகம் அமைக்கத் தேவையில்லை. கலைந்து செல்லலாம்” என்று சொன்னது சிங்கராஜா.

சிறுத்தை, புலி, கரடி போன்ற விலங்குகளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

’சிங்கராஜாவைப் பெருமைப்படுத்தும் நூல்களை எழுதி வைக்கலாம் என்று சொன்னோம். ஆனால், சிங்கராஜாவுக்குத் திருப்தியே ஏற்படவில்லையே. ஏன்?’ என்று அவை ஒவ்வொன்றும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டன.

அப்போது, “அரசே, நான் என் யோசனையைக் கூறலாமா?” என்கிற குரல் ஒன்று கேட்டது.

“யாரது? இவ்வளவு நேரம் உன் யோசனையைக் கூறாமல் ஏன் தயங்கி நின்றாய்?” என்று கேட்டது சிங்கராஜா.

“அரசே, பெரியவர்கள் எல்லாரும் யோசனைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள். அதனால், சிறியவனான நான் தயக்கத்தோடு நின்றிருந்தேன். ஆனால், நூலகம் அமைக்க வேண்டாம் என்று நீங்கள் சொன்னபோது எனக்கு வருத்தம் உண்டானது. அதனால்தான் என் யோசனையைச் சொல்ல வந்தேன்” என்று பணிவோடு முன்னே வந்து நின்றது ஒரு முயல்.

“ஆமாம். இதுவரை யோசனை சொன்னவர்கள் எழுதப்போவதாகச் சொன்ன நூல்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அதனால்தான் நூலகம் வேண்டாம் என்று முடிவெடுத்தேன். உன் யோசனையைச் சொல்” என்றது சிங்கராஜா.

“அரசே, நூல்கள் என்பவை நம் தலைமுறை மட்டும் படிப்பதற்கானவை அல்ல. வரும் தலைமுறையினரும் படித்துப் பயன்பெறுவதற்காகத்தான் நூல்களை எழுத வேண்டும். அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும். இன்று நம் காட்டில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவத்தை நூலாக எழுதித் தரலாம். எந்தெந்த ஆபத்துகளிலிருந்து எப்படித் தப்பித்தார்கள், இயற்கைச் சீற்றங்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்றெல்லாம் எழுதித் தரலாம்.

அதுபோலக் குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் சொன்ன நீதிகள், நற்பழக்கங்கள், விளையாட்டுகள் போன்ற வற்றை எல்லாம் கதை நூல்களாக எழுதித் தரலாம். காட்டின் திசைகள், எங்கெங்கு எந்தெந்த நதிகள் ஓடுகின்றன, என்னென்ன காலத்தில் என்னென்ன உணவு வகைகள் கிடைக்கும், எங்கே கிடைக்கும் என்பது பற்றி நூல்கள் எழுதலாம்...” என்று நீண்ட யோசனையைச் சொல்லி முடித்தது முயல்.

முயல் சொன்ன யோசனைகளைக் கேட்ட சிங்கராஜாவின் முகம் மலர்ந்தது.

“இதோ, இதைத்தான் எதிர்பார்த்தேன். இதற்கு முன்னர் பலரும் என்னைத் திருப்திப்படுத்தவும் மகிழ்விக்கவும் யோசனை சொன்னார்கள். ஆனால், நீதான் நம் தலைமுறைகளுக்குச் சென்றுசேர வேண்டிய கருத்துகளைப் பற்றி யோசனை சொன்னாய். நிச்சயம் இதுபோன்ற நூல்கள் நமக்குத் தேவைதான்.

சீக்கிரமே நூல்கள் எழுதும் பணியைத் தொடங்குங்கள். அவற்றைப் பத்திரப்படுத்தும் நூலகமும் உருவாகட்டும். இதற்கான அனுமதியை இப்போதே தருகிறேன். நூல்கள் எழுத வேறு நல்ல கருத்துகள் யாருக்கு உதித்தாலும் என்னிடம் வந்து கூறுங்கள். அவற்றையும் செயல்படுத்துவோம்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னது சிங்கராஜா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in