

ஸ்மார்ட் போன், டேப்லெட், கம்ப்யூட்டர், வீடியோ கேம், மியூசிக் பிளேயர், டிவி போன்ற கேட்ஜெட்கள் பக்கம் செல்லாமல் இருக்க 10 வழிகள்.
புத்தகம்: நம் கற்பனைத் திறனை வளர்த்து, அறிவாற்றலைப் பெருக்கி நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஓர் உற்ற நண்பர் உலகில் உண்டு என்றால், அவை புத்தகங்கள்தாம்! ஒரு கதையைக் காட்சியாகக் காணும்போது யாரோ ஒருவரின் கற்பனையைத்தான் நாம் ரசித்துப் பார்ப்போம். அங்கே நம் கற்பனைக்கு இடம் இருக்காது. அதே கதையைப் புத்தகத்தில் படிக்கும்போது நம் கற்பனை சிறகடித்துப் பறக்கும்.
சில நேரம் புத்தகத்தைவிட நம் கற்பனை சிறப்பாகவும் இருக்கலாம். பலவிதமான புத்தகங்களைப் படிக்கும்போது நம் அறிவு விரிவடையும். பள்ளிப் பாடங்கள் தவிர்த்து, தினமும் ஒரு சில பக்கங்களாவது வாசித்துவிடுங்கள். சொல்வளம் பெருகும்.
அகராதி: தமிழ், ஆங்கில அகராதிகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் 5 முதல் 10 புதிய வார்த்தைகளைப் படித்து எழுதிப் பார்த்துவிடுங்கள். இப்படிச் செய்வதால் அந்த வார்த்தை நமக்கு மறக்காது.
ஓய்வு நேரத்தில் இந்த அகராதிகளை வைத்து, குடும்பத்தினர், நண்பர்களோடு வார்த்தை விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். யாருக்கு எத்தனை வார்த்தைகளுக்குப் பொருள் தெரிகிறது என்று ஆரோக்கியமான போட்டியும் வைத்துக்கொள்ளலாம்.
கதை கேட்பது, கதை சொல்வது: படிப்பதைப் போலவே கதை கேட்பதும் சுவாரசியமானது. கதை சொல்வதைக் கேட்க கேட்க நம் கற்பனை விரிவடையும். சந்தேகம் இருந்தால் கதையை நிறுத்திவிட்டு, கேள்விகளைக் கேட்கலாம். ஒரு கட்டத்தில் உங்களுக்கே கதை சொல்வதில் ஆர்வம் வந்துவிடும்.
நீங்களும் கதைகளை அழகாக ஏற்ற, இறக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தால், ஒரு கதை சொல்லியாக உருவாகிவிடலாம். பிறகு நீங்களே கதைகளை எழுதவும் ஆரம்பித்துவிடலாம். பிரபலமான எழுத்தாளராகப் புகழ்பெற்றாலும் ஆச்சரியமில்லை!
உள்ளரங்க விளையாட்டு: தாயம், பல்லாங்குழி, 5 கல், சீட்டு, 11 குச்சி, செஸ், கேரம், டிரேட் என்று வீட்டுக்குள்ளேயே அமர்ந்து குடும்பத்தினரோடு அல்லது நண்பர்களோடு விளையாடக்கூடிய விளையாட்டுகள் ஏராளம் இருக்கின்றன. இந்த விளையாட்டுகள் மனதை உற்சாகப்படுத்தும்.
பொறுமையைக் கற்றுக்கொடுக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை உருவாக்கும். ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும். ‘நான் யார்?’ என்கிற விளையாட்டு மூலம் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். குறைவான கேள்விகளில் அவர் யார் என்பதைக் கண்டறியும் ஆவலும் ஏற்படும்.
வெளி விளையாட்டுகள்: ஓடி ஆடி விளையாடுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன், நண்பர்களுடன் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இப்படி விளையாடும்போது நட்பு உருவாகும். பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் முடியும்.
பம்பரம், கோலி, கில்லி, ஒளிந்து விளையாடுதல், நான்கு மூலை, கோகோ, கயிறு இழுத்தல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பந்து எறிதல், கூடைப் பந்து, கிரிக்கெட், ஹாக்கி என்று ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். இப்படி விளையாடும்போது ஏதாவது ஒரு விளையாட்டில் நீங்கள் சிறந்தவராகலாம். அதையே தொழில்முறை விளையாட்டாகக்கூட மாற்றிக்கொள்ளலாம்.
தோட்டம்: தனி வீட்டில் இருந்தாலும் அடுக்கு மாடிகளில் குடியிருந்தாலும் வீட்டுத் தோட்டத்தை அமைக்கலாம். மண்ணுக்குள் விதைகளை ஊன்றி, தண்ணீர்விட்டு, அது முளைத்து வரும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. நாம் அக்கறையாக விடும் கொஞ்சம் தண்ணீருக்கே செடிகளும் கொடிகளும் மரங்களும் நமக்கு ஏராளமான கீரை, காய், கனி என அனைத்தையும் அளிக்கும். மல்லி விதைகளைத் தூவினால் உணவுக்குத் தேவையான கொத்துமல்லித் தழைகளைப் பறித்துக்கொள்ளலாம்.
புதினாவின் தண்டுகளை நட்டு வைத்தால் புதிய புதினாச் செடிகள் உருவாகிவிடும். தக்காளி, மிளகாய், பிரண்டை, பாகற்காய் போன்ற எளிதில் வளரும் செடிகளையும் கொடிகளையும் மாடி வீடுகளில்கூட வளர்க்கலாம். வளர்வது, பூப்பது, காய்ப்பது, சுவைப்பது என்று ஒவ்வொரு விஷயமும் சுவாரசியமாக இருக்கும்.
வளர்ப்பு உயிரினங்கள்: வீட்டில் வளர்க்கக்கூடிய நாய், பூனை போன்ற உயிரினங்களை வளர்க்கலாம். அவை உங்களுடன் விளையாடும். நீங்கள் சொல்வதைக் கேட்கும். உங்கள் மீது அன்பாக இருக்கும். ஒருகட்டத்தில் விலங்கு என்கிற வித்தியாசம் மறைந்து உங்களின் சிறந்த நண்பனாக மாறிவிடும்.
அஞ்சல்தலை / நாணயம் சேகரித்தல்: உள்நாட்டு, வெளிநாட்டு அஞ்சல் தலைகளையும் நாணயங்களையும் பணத்தாள்களையும் சேகரிக்கலாம். ஒவ்வொன்றைப் பற்றியும் சிறு குறிப்பை எழுதி வைக்கலாம். அத்துடன் உங்களுக்கு அது எந்தத் தேதியில் எப்படிக் கிடைத்தது என்பதையும் குறிப்பிடலாம். இந்தச் சேகரிப்பில் அரிய அஞ்சல் தலையோ நாணயமோ இருந்தால், பின்னர் இவற்றை நல்ல விலை கொடுத்துகூட வாங்குவார்கள். உங்களைப் போன்று சேகரிப்பவர்களின் நட்பும் கிடைக்கும்.
கள உலா! - பெரியவர்களின் உதவியோடு அருகில் இருக்கும் அஞ்சல் நிலையம், ரயில் நிலையம், வங்கி, பேருந்து நிலையம், பால் வழங்கும் இடம், ரேஷன் கடை, மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் சென்று, அங்குள்ள விஷயங்களைக் கவனியுங்கள். ஒவ்வொன்றும் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நாம் அன்றாடம் புழங்கக்கூடிய இந்த இடங்கள் பற்றியும் அவை செயல்படும் விதம் பற்றியும் அறிந்துகொள்வது நம் பொது அறிவை வளர்க்கும்.
ஆராய்ச்சி: நோட்டு, பேனா எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து உங்கள் பகுதியில் இருக்கும் தெருக்களில் நடந்து செல்லுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன மரங்கள் இருக்கின்றன என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். பெயர் தெரியாத மரங்களின் பெயர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். எல்லா வீதிகளையும் சுற்றிவிட்டு வீட்டுக்குத் திரும்புங்கள்.
உங்கள் பகுதியில் மரங்கள் அதிகம் இருக்கின்றனவா, என்னென்ன மரங்கள் இருக்கின்றன என்பது போன்ற தகவல்கள் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோலத் தோட்டம் இருக்கும் ஒரு வீட்டுக்குச் செல்லுங்கள்.
ஒரு மரத்திலும் மரத்தடியிலும் மரத்தைச் சுற்றிலும் என்னென்ன உயிரினங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன இடத்தில் எவ்வளவு உயிரினங்கள் வாழ்கின்றன என்பதைப் பற்றிய இந்த ஆய்வு உங்களுக்கே வியப்பை அளிக்கலாம். விதவிதமான இலைகளை வைத்து, உங்கள் கற்பனைக்கு ஏற்ற உருவங்களையும் உருவாக்கலாம்.