

கு
ழந்தைக் கடத்தலை, குழந்தைகளே தடுக்கும் வகையில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் பள்ளி மாணவர்கள்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காளாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், தங்களையும் பாதுகாத்துக்கொண்டு, பிற மாணவர்களுக்கும் வழிகாட்டிவருகிறார்கள்.
கடத்தலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து மாணவர்களிடமே புரிய வைத்துவிட்டால், கடத்தல்களைத் தடுத்துவிடமுடியும் என்பது இந்தப் பள்ளி ஆசிரியர்களின் நம்பிக்கை.
”அடையாளம் தெரியாதவர்கள் இடைநிறுத்தி ஏதாவது பேச்சுக் கொடுக்கும்போது, சற்றுத் தள்ளி நின்று பேச வேண்டும். கார்களில் வருபவர்கள் பேச்சுக் கொடுத்தால், கதவருகே நின்று பேசக்கூடாது. பெற்றோர் அழைத்து வரச் சொன்னதாகக் கூறி கடத்த முற்படுவதைத் தடுக்க, தங்கள் பெற்றோருடன் மாணவர்கள் பேசி ரகசிய பாஸ்வேர்டு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
ரகசிய பாஸ்வேர்டைத் தெளிவாகக் கூறும் நபரே தங்களது பெற்றோரின் அனுமதியுடன் அழைத்துச் செல்லவோ, அல்லது தங்களிடம் உள்ள உடைமைகளை வாங்கிச் செல்வதற்கோ வந்தவர் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று தெளிவாகச் சொல்கிறார்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள்.
“மாணவர்கள் எல்லாவிதங்களிலும் விழிப்புடன் செயல்படவேண்டிய காலகட்டம். அதனால்தான் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட வைத்திருக்கிறோம்” என்கிறார் ஆசிரியர் ஆனந்த்,
தலைமையாசிரியர் திலகம், ”கிராமங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. அதை உணர்ந்துதான் இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.
சுப்புலட்சுமி, தனலட்சுமி, ஆர்த்தி, சிவரஞ்சனி, புஷ்பலதா, பானுப்பிரியா, வித்யா, அருண் பாண்டியன், ஹரிஹரன் போன்றவர்கள்தான் எங்கள் பிரச்சாரத் தூதுவர்கள்.
இதுவரை 32 பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த இருக்கிறோம்” என்கிறார்.