

மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசித்துவருகிறார் மீனாட்சி பாட்டி. அவர் பெயர் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாது. ‘மசால் வடை பாட்டி’ என்றால் சுற்றியுள்ள ஊர்களிலும் தெரியும். அவர் செய்யும் மசால் வடையின் ருசியும் மணமும் மிகப் பிரமாதமாக இருக்கும்.
தினமும் மாலை மூன்று மணிக்கு வடை சுட ஆரம்பிப்பார். ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை வடைகளும் விற்றுவிடும். மீனாட்சி பாட்டியின் வீட்டு வழியாகச் செல்பவர்கள் வடையின் வாசத்தில் மயங்கி, வடைகளை வாங்கிச் சென்றுவிடுவார்கள்.
ஒருநாள் காட்டிலிருந்து கிராமத்துப் பக்கம் வந்த நரிக்கு, மசால் வடையின் வாசம் இழுத்தது. வாசத்தைப் பிடித்துக்கொண்டே மீனாட்சி பாட்டியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. தன்னைக் கண்டால் பாட்டி பயந்துவிடுவார் என்பதால், ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு நோட்டம் விட்டது. வருகிறவர்கள் எல்லாம் பை நிறைய மசால் வடைகளை வாங்கிச் செல்வதைப் பார்த்தது.
கூட்டத்தில் புகுந்து வடை கேட்டால், எல்லாரும் சேர்ந்து துரத்திவிடுவார்கள் என்று அஞ்சியது. ஆனாலும் எப்படியாவது அந்த வடையை ருசித்துவிட வேண்டும் என்று நினைத்தது. அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்த நரி, தினமும் பாட்டி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தது.
அன்று நரி வடைக்கான தருணத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தபோது, மரத்திலிருந்த ஒரு காகம் வேகமாக வடையை நோக்கிச் சென்றது. காகத்தைக் கண்டதும் பாட்டி அருகில் இருந்த குச்சியால் விரட்டினார். ஆனால், அப்படி இப்படி என்று போக்குக் காட்டி, வடையைக் கவ்விக்கொண்டு மரத்துக்கு வந்துவிட்டது காகம்.
‘ஒரு சின்ன காகம் வடையை எவ்வளவு அழகா எடுத்துருச்சு! நானும் ஒரு வடைக்காக ஒரு மாசமா காத்துக்கிட்டிருக்கேனே’ என்று தன்னையே நொந்துகொண்டது நரி.
மரத்தின் மீது அமர்ந்து வடையை வேகமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த காகத்திடம், தனக்கும் ஒரு துண்டு வடையைக் கொடுக்கச் சொல்லிக் கேட்டது நரி.
“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வடையை எடுத்திருக்கேன் தெரியுமா? நீ சுலபமா என்கிட்ட வடையை வாங்கித் திங்கலாம்னு பார்க்கறீயா?” என்று கேட்டது காகம்.
“வாசம் மிக்க இந்த வடையை ஒரு முறை ருசித்துப் பார்த்தால் போதும். பிறகு இந்தப் பக்கமே வர மாட்டேன்” என்றது நரி.
“சரி, என்னைப் புகழ்ந்து நாலு வார்த்தை சொல்லு பார்க்கலாம்.”
“உன்னைப் புகழ என்ன இருக்கு?”
“நல்லவன். நாலும் தெரிந்தவன்....”
நரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“எதுக்குச் சிரிக்கறே?”
“பாட்டி கிட்ட கேட்காமல் வடையைத் தூக்கிட்டு வந்துட்டு, நல்லவன்னு சொன்னா சிரிப்பு வராதா?”
“பாட்டிகிட்ட கேட்டால் மட்டும் வடையைத் தூக்கிக் கொடுத்துடுவாங்களா?”
“என்னால் பொய் சொல்ல முடியாதுப்பா.”
“என்னால வடையைத் தர முடியாதுப்பா.”
“சரி, நான் பாட்டியிடமே கேட்டு வாங்கிக்கறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது நரி.
“நீ நாலு அடி வாங்கிட்டுதான் திரும்பப் போறே” என்று சொன்னது காகம்.
நரி பயந்துகொண்டே பாட்டியின் அருகில் சென்றது.
“இங்கே வா, என்னைப் பார்த்து ஏன் பயப்படறே? நானும் ஒரு மாசமா கவனிச்சிட்டுதான் இருக்கேன்... உனக்கு என்ன வேணும்னு சொல்லு” என்றார் பாட்டி.
“என்னைக் கண்டு உங்களுக்குப் பயமில்லையா?”
“இல்ல, நீ நல்லவன். அந்தக் காகம் போல அடாவடி கிடையாது.”
“எனக்கு ஒரே ஒரு வடை வேணும்.”
“ஓ... வடை ருசியா இருக்குன்னு தினமும் இந்தப் பக்கம் வரக் கூடாது. அப்படின்னா தரேன்.”
“வர மாட்டேன்” என்று நரி சொன்னவுடன் பாட்டி ஒரு வடையைக் கொடுத்தார்.
நன்றி சொல்லிவிட்டு, வடையை எடுத்துக்கொண்டு மரத்தடிக்குச் சென்றது நரி. மெதுவாக ரசித்து, ருசித்துச் சாப்பிட்டது.
“வடை என்ன அவ்வளவு பிரமாதமா? இப்படி ரசிச்சு சாப்பிடறீயே?” என்று கேட்டது காகம்.
“நீயும்தானே சாப்பிட்டே? ருசி தெரியலையா?”
“நான் பாட்டியின் கம்புக்குப் பயந்து, வடையைத் தூக்கிக்கொண்டு வந்தேன்... அவசர அவரசமாகச் சாப்பிட்டதில் ருசியே தெரியலை.”
“நீ இன்னொரு வடையைக் கேட்டு வாங்கிச் சாப்பிடு. பாட்டி ரொம்ப நல்லவங்க.”
“ஐயோ... பக்கத்துல இருக்கிற கம்பால ரெண்டு போட்டாங்கன்னா தெரியும்...”
“நீ போய் மன்னிப்பு கேட்டுட்டு, ஒரு வடை கேட்டுப் பாரு.”
காகம் பாட்டியிடம் சென்று, “என்னை மன்னிச்சிடுங்க பாட்டி. உங்க அனுமதி இல்லாம வடையைத் தூக்கிட்டுப் போயிட்டேன்” என்று சொன்னது.
“நீ செஞ்சது தப்புன்னு உனக்கே இப்ப தெரிஞ்சிருச்சு. அது போதும். இந்தா, இந்த வடையை எடுத்துட்டுப் போ” என்று கொடுத்தார் மீனாட்சி பாட்டி.
நன்றி சொல்லிவிட்டு, வடையை வாங்கிக் கொண்டு மரத்துக்குத் திரும்பியது காகம்.
“இப்ப வடை ருசிக்கும். நான் காட்டுக்குக் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு ஓடியது நரி.